வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (28/07/2017)

கடைசி தொடர்பு:12:03 (29/07/2017)

கிச்சா பச்சா...ஹை..! - குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய்...ய புத்தகம்!

ஜூலை புத்தகக்காட்சி புத்தகம்

புத்தகம்... சென்னையில் நடந்துவரும் மூன்றாவது கோடைப் புத்தகக்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிக அளவில் குவிந்துள்ளன. 

தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த 21ஆம் தேதி முதல் 11 நாள் புத்தகக்காட்சி நடைபெற்றுவருகிறது. ஜனவரி புத்தகக்காட்சியை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டாவதாக இந்தப் புத்தகக்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை புத்தகக்காட்சியில் மற்ற பிரிவுகளைவிட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிக அளவில் வெளியாகியுள்ளன. 

பதிப்பகங்களின் அரங்குகளை ஒப்பிட, புத்தகக் கடைகளின் அரங்குகளில்தான் குழந்தைகளுக்கான, பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் அதிகமான அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எழுத்து-ஓவியப் பயிற்சிப் புத்தகங்கள், ஆங்கில மொழிப் பயிற்சிப் புத்தகங்கள், கணிதப் புதிர்ப் புத்தகங்கள், அறிவியல் மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியவையே பரவலாக இருக்கின்றன. படக்கதைப் புத்தகங்களும் இடம்பிடித்துள்ளன. 

குழந்தைகள் புத்தகம்

கொ.மா.கோ. இளங்கோவின் பஷீராவின் புறாக்கள், க.சரவணனின் சிவப்புக்கோள் மனிதர்கள், விழியனின் காலப்பயணிகள், ஒரே ஓர் ஊர்லே, ஜி.காசிராஜனின் ஆரம்ப அதிசயம், ஆல்பர்ட்டின் உணவுமழைத் தீவு ஆகிய சிறுவர் நாவல்களும் புதிதாக வந்துள்ளன. 

அண்மையில் மறைந்த எழுத்தாளர் கழனியூரனின் பணியார மழையும் பறவைகளின் மொழியும், அவர் தொகுத்த கி.ரா. தாத்தா சொல்லும் கிராமத்துக் கதைகள், கொ.மா.கோ.இளங்கோவின் ஓநாய் கண்டறிந்த உண்மை, லூர்துராஜின் மாணவர் அறிவியல் கதைகள், சின்னக்கோழி பெரிய கோழி, கேரட் தோட்டம், பூனையைத் தேடி, பனிக்கால விளையாட்டு, வானத்தை எறிந்தது யார், செ.யோகநாதனின் டேராவரை (கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு), 

விஷ்ணுபுரம் சரவணனின் வித்தைக்காரச் சிறுமி, யெஸ்.பாலபாரதியின் சுண்டைக்காய் இளவரசன், சொக்கனின் துப்பறியும் சேவகன், உதயசங்கரின் பேய் பிசாசு இருந்ததா?ஆகிய சிறுகதை நூல்களும், 

உதயசங்கரின் கேளு பாப்பா கேளு சிறுவர் பாடல்கள் புத்தகமும் விஷ்ணுபுரம் சரவணனின் ’கதைகதையாம் காரணமாம் -பெற்றோர்களுக்கான வழிகாட்டி’புத்தகமும், ஆயிஷா நடராஜனின் எப்படி வந்தேன் தெரியுமா?, கருவியாலஜி, டாக்டர் பாலகிருஷ்ணன் செரூப்பாவின் சிரஞ்சீவி ஆகிய அறிவியல் புனைகதைகள் புத்தகங்களும் புதிய வரவுகள். 

குழந்தைகள் புத்தகம்

குழந்தைகள் புத்தகம்

குழந்தைகள் புத்தகம்

கேள்விகேட்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? அவர்களின் அது எப்படி, இது எப்படி, ஏன்,  என்ன எனும் கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம் தருகின்றன யுரேகா யுரேகா 1, 2, உங்களுக்குத் தெரியுமா  வரிசை, எதனாலே எதனாலே ஆகிய புத்தகங்கள், சில பத்து ரூபாய்களில் வாங்கக்கூடியவையாக, எல்லா தரப்புப் பெற்றோரின் பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. 

குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மட்டுமல்ல, பெரியவர்களையும் திரும்பிப்பார்க்க வைக்கும் இரண்டு புத்தகங்கள், இந்த புத்தகக்காட்சியின் நட்சத்திரங்கள் ஆகியுள்ளன. விழியன் எழுதி, வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கிச்சா பச்சா மற்றும் மாயக்கண்ணாடி பெரிய்ய்ய்ய்ய்ய்....ய புத்தகங்கள்தான், அந்த நட்சத்திரங்கள்! ஆம், இந்தப் புத்தகத்தின் நீளம் ஒன்றரை அடி, அகலம் 1 அடி! 

இவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்.....ய புத்தகத்தை எப்படிக் குழந்தைகள் படிக்கமுடியும்? எதற்காக இப்படியொரு புத்தகம் எனும் கேள்வியை நாமும் கேட்டோம். இந்த புத்தகக்காட்சியை முன்னிட்டு, அரை டஜன் குழந்தைகள் புத்தகங்களை வெளியிட்டுள்ள வானம் வெளியீட்டாளர் எம்.வி.மணிகண்டன், ”பொதுவாகவே குழந்தைகளுக்கு ஏற்ப புதுப்புது வடிவமைப்புகளில் புத்தகம் கொண்டுவரவேண்டும் என்பதில் எனக்குக் கொஞ்சம் ஆர்வம். குழந்தைகள் பத்து பேராவது சேர்ந்து படிக்க இந்தப் புத்தகம் வசதியாக இருக்கும். பரிசாகவும் இதை அளிக்கலாம். குழந்தைகளுக்கு மற்றவர்கள் கதைசொல்லவும் இது வசதியாக இருக்கிறது. காட்சிக்கு வருபவர்களில் 40சதவிகித  பேராவது இந்தப் புத்தகங்களை எடுத்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்” என்றார், உற்சாகத்துடன். 

குழந்தைகளை குதூகலப்படுத்தும் இப்படியான புத்தகங்களுக்கு இந்தப் புத்தகக்காட்சியில் மட்டுமல்ல, எந்தக் காட்சியிலும் வரவேற்பு இருக்கும் என்பது உறுதி!


டிரெண்டிங் @ விகடன்