Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகுடனான 3000 புலிகளின் இறுதி யுத்தம்! #InternationalTigerDay

புலிகளின்

புலிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

இன்று சர்வதேச புலிகள் தினம்.

புலி. வீரத்தின் விளைநிலமாக பார்க்கப்படும் கானுயிர். உயிர்ச்சங்கிலியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் உன்னதமான கண்ணி. ஆறறிவு மனிதனின் மனதில் கிலியை ஏற்படுத்தும் ஐந்தறிவு ஜீவன். பெரும்படையையும் சிதறி ஓடவைக்கும் வல்லமை படைத்த சிற்றுயிர். மழைவளம் பெற மலைவளம் அவசியம். அந்த மலைவளத்தை காப்பதிலும், சூழலியல் சமன்பாட்டை பேணுவதிலும் முக்கிய பங்காற்றுபவை புலிகள். பசியில்லாமல் புசிப்பதில்லை புலிகள். அவை, புசித்த பிறகு, எஞ்சுபவை, பறவைகள், புழு, பூச்சிகள், கண்ணுக்குத்தெரியாத பாக்டீரியாக்கள் என பல நூறு உயிர்களுக்கான உணவாகிறது. மனிதனைப் போல், பேராசை குளத்தில் எப்போதும் நீந்திக்கொண்டே இருப்பதில்லை புலிகள். உணவு உண்ட பிறகு, அடுத்து பசியெடுக்கும் வரை, அது வேட்டையாடுவதில்லை. மிகினும், குறையினும் நோய் என்பதுப்போலவே, கானகத்தில் ஒவ்வொரு உயிருக்குமான கணக்கு இருக்கிறது. எந்த இனமும் அதிகமாகி விடக்கூடாது. அதே நேரத்தில் குறைந்தும் விடக்கூடாது. அதிகமாகாமல் புலிகள் பார்த்துக்கொள்கின்றன. ஆனால், தற்போது மனிதனின் பேராசைக்கு புலிகளே பலியாகிக் கொண்டிருப்பதுதான் வேதனை. உலகளவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில், புலிகள் பற்றிய விழிப்பு உணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக சில செய்திகளை பகிர்ந்துக்கொண்டார் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன்.

''மனிதன் புலியைக் கொன்றால், அதை ஒரு விளையாட்டு என்கிறோம். அதுவே, ஒரு புலி மனிதனைக் கொன்றால், அதனைக் காட்டுமிராண்டித்தனம் என்கிறோம்.” இது அறிஞர் பெர்னார்ட்ஷா சொன்னது. காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றாலும், இந்த வார்த்தைகளுக்கான தேவை மட்டும் குறையவேயில்லை. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் 97 சதவிகிதம் புலிகள் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் மூவாயிரம் புலிகள் மட்டுமே வாழ்கின்றன. புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவிகிதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டதுதான் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம்.

புலிகளின்

புலிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

புலிகள் இருந்தால்தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலிகள் வசிக்கும் வனங்களில், புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். தனக்கான வாழ்விடம் பறிபோன நிலையில், உணவுக்கும், தண்ணீருக்கும் சிக்கல் எழும்போது மட்டுமே, வாழ்தலை முன்னிட்டு, புலிகள் நாட்டிற்குள் ஊடுருவுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. நம்மைத் தவிர, பங்ளாதேஷ், மலேசியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தேசிய விலங்காகவும் புலி இருக்கிறது. உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.

காடுகளில் உள்ள புலிகளைஆரம்பத்தில் காலடித் தடங்களை வைத்துக் கணக்கிட்டனர். ஒவ்வொரு புலிக்கும் காலடித் தடம் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனாலும், இது சரியான முறை என்று கூற முடியாது. ஆகவே சமீபத்திய கணக்கெடுப்பின் போது Trap Camera முறை பின்பற்றப்பட்டது. அதாவது புலிகள் மீதான வரிகள் ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். காடுகளில் ஆங்காங்கு தானியங்கி காமிராக்களை நிரந்தரமாகப் பொருத்தி, பின்னர் காமிராவில் பதிவான படங்களை வைத்து புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன்இந்தியா விடுதலை அடைந்து நீண்ட காலத்துக்குப் பிறகு 1970-ம் ஆண்டில் தான் புலி வேட்டையை மத்திய அரசு தடை செய்தது. 1972-ம் ஆண்டு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1973-ம் ஆண்டு, புலிகள் காப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்திய காடுகளில் வாழும் புலிகளின் வாழ்விடங்களை காப்பகங்களாக அறிவித்து புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வகையில், தற்போது இந்தியாவில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கியமானவை.  உயிரியல் பூங்காக்களில் உள்ள புலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலைகிடைப்பதால், இவை, சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன. உலகிலேயே இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில்தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் "ராயல் பெங்காலி புலிகள்" என அழைக்கப்படுகின்றன. அத்துடன் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அருகிவரும் புலிகளைக் காப்பதால், கான் வளம் பேண முடியும். இதன் மூலமாக, உலகின் இயல்பான இயக்கத்தில் பெரிதாகப் பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும்! சுயநலமே வாழ்க்கையாகக் கொண்ட மனித இனம், இந்த உண்மையை முழுதாகப் புரிந்துகொண்டால் மட்டுமே இது நிகழும்.'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ