Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஐ.ஏ.எஸ்-கள் முதல் பெப்சி சி.இ.ஓ வரை பலரை உருவாக்கிய தி நகர் பள்ளிகள்..! அங்காடித் தெருவின் கதை - 17

அங்காடித் தெரு

ருநகரின் கட்டமைப்பில், கல்விக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அந்த வகையில், சமகாலத்தில் உருவாக்கப்பட்ட தி நகர் பகுதியின் முக்கிய அடையாளங்களாக இரண்டு பள்ளிகள் திகழ்கின்றன. அதில், முதல் பள்ளி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி. இரண்டாவது பள்ளி, ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி.

இந்திரா நூயி படித்த பள்ளி!

சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக 1888-ம் ஆண்டு மயிலாப்பூரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. இது, முதலில் செயின்ட் ஆண்டனி பள்ளி என்று அழைக்கப்பட்டது. பின்னர், 1897-ம் ஆண்டு Franciscan Missionaries of Mary சகோதரிகள், இந்தப் பள்ளியை நிர்வகித்து வந்தனர். அப்போது இந்தப் பள்ளி செயின்ட் தாமஸ் ஐரோப்பியன் பள்ளி என்று அழைக்கப்ப்ட்டது. 1909-ம் ஆண்டு இந்தப் பள்ளி வளாகத்தில் ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பெயரில் ஒரு ஹாஸ்டல் தொடங்கப்பட்டது.

தி நகர் ஹோலி ஏன்ஜெல்ஸ் பள்ளி

1933-ம் ஆண்டு தி.நகர் பாண்டி பஜாரில், இப்போது இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி என்ற பெயரில் 8 அறைகளுடன் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது, துறைமுகம் அருகே இருந்த உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இந்தப் பள்ளியில் செயல்பட்டது. பின்னர், பல்வேறு மாற்றங்களைக் கண்டு இப்போது சென்னையின் மிகப்பெரிய பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சர்ச் பார்க் பள்ளியில் படிக்கும் முன்பு... சில ஆண்டுகள் இந்தப் பள்ளியில் படித்தார். பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, சித்ரா ஆறுமுகம் ஐ.ஏ.எஸ்., நடிகைகள் ஶ்ரீதேவி, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தாம்.

ராணுவ ஜெனரல் படித்த பள்ளி!

ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்குச் சொந்தமான, ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளி (மெயின்) கடந்த 1932-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி தொடங்கப்பட்டது. பனகல் பார்க் எதிரே உள்ள இந்தப் பள்ளியில் படித்த பலர், இன்று தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலங்களாக இருக்கிறார்கள். ராணுவ ஜெனரல் சுந்தர் ஜி, முன்னாள் தலைமைச் செயலாளர் சங்கர், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி, நீதிபதி சந்துரு, எழுத்தாளர் தமிழ்மகன் உள்ளிட்டோர் இங்கு படித்திருக்கின்றனர். இதுகுறித்து ராமகிருஷ்ணா பள்ளிகளுக்கான நிர்வாகக் கமிட்டியின் துணைத் தலைவரும், முன்னாள் மாணவருமான சந்திரசேகரிடம் பேசினோம்.

"சென்னையில் அந்தக் காலத்தில் மிகச் சில பள்ளிகளே தொடங்கப்பட்டன. அதில், தி.நகரில் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி (மெயின்) முக்கியமான ஒன்று. இந்தப் பள்ளியில் படித்த நான், 1964-ல் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்தேன். தமிழில்தான் படித்தேன். அந்தக் காலத்தில் இந்தப் பள்ளியில் படித்த நான் உள்ளிட்ட 15 பேர் ஐ.ஐ.டி-யில் சேர்ந்தோம். மாணவர்களை, சமுதாயத்தில் மதிக்கத் தகுந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பள்ளி செயல்படுகிறது. நல்லி குப்புசாமி செட்டியார், டென்னிஸ் பிரபலம் கிருஷ்ணன், நடிகர் ஆர்.எஸ்.மனோகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தான்.

''நகைக்கடைகள் இல்லை!''

இந்தப் பள்ளியில் படித்த சமயத்தில், பனகல் பார்க் அருகில்... முதலில் இரண்டு வழிகளிலும் வாகனங்கள் சென்றுவரும். உஸ்மான் சாலையில் அந்தக் காலத்தில் நகைக்கடைகள் எதுவும் இல்லை. மளிகைக் கடை, லாண்டரி கடை எனச் சில சிறிய கடைகள் மட்டும்தான் இருந்தன. 1969-க்குப் பின்னர்தான், உஸ்மான்  சாலையில் நகைக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டன" என்றார். 

1930-களில் தியாகராய நகர் அமைதியின் பிறப்பிடமாக இருந்தது. இதன் காரணமாகவே பலர் இங்கு இடம் வாங்கி  தனி வீடு கட்டிக் குடி வந்தனர். பல வீடுகள் இன்றும் கூட, தோட்டத்துடன் கூடிய தனி வீடுகளாகவே இருக்கின்றன. இப்போது, சென்னை நகரின் அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக தி நகர்  உருமாறி விட்டது. இங்கு இருக்கும் வணிக கட்டடங்கள் பல்வேறு விதிமுறைகளை மீறி இருப்பதாகச் சொல்கின்றனர். அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement