வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (30/07/2017)

கடைசி தொடர்பு:15:05 (30/07/2017)

நிறைவடையும் சென்னை புத்தகக்காட்சி - புதுசு, தினுசு என்னென்ன?

புத்தகக்காட்சி

பரபரப்பு இல்லாமல் நடந்துவரும் சென்னை ஜூலை புத்தகக்காட்சியில் வழக்கம்போல இல்லாவிட்டாலும் புதிய வரவுகளுக்குக் குறை இல்லை என்கிறபடியாக, புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

புத்தகக்காட்சி

தமிழகத்தையே கலங்கடித்துக்கொண்டு இருக்கும் ஹைட்ரோகார்பன் பிரச்னை பற்றி இந்திய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உட்பட நான்கு பேர் எழுதிய ’அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்’ கட்டுரைத் தொகுப்பை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ளது. பேலியோ உணவுப்பழக்கம் பரவலாக அதிகரித்துவரும் சூழலில், பிரியா பாஸ்கர் எழுதிய ’சைவ பேலியோ டயட் - 101 ரெசிப்பீகள்’ கோவை விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. கதை, நாவல் நூல்கள் என்றாலே முன்னணிப் பதிப்பகங்களால் மட்டுமே வெளியிடப்படும் எனும் நிலை நீடித்தாலும், சிறு பதிப்பகங்களே புதிய படைப்பாளிகளின் கதைகள், நாவல்களை வெளியிட்டிருப்பது, நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

புத்தகக்காட்சி

புதிய பதிப்பகமான நூல்வனம், மடவளி எனும் சமூக நாவலை வெளியிட்டுள்ளது. 334 பக்கம் கொண்ட இந்நாவலில், உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்தி வண்ணார், நாவிதர் சமூகங்களின் வாழ்நிலையைப் பதிவுசெய்கிறது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிப்பித்தன் இதை எழுதியுள்ளார். 

ஜி.காசிராஜனின் ’புதர் மூடிய ஒருவன்’சிறுகதைப் புத்தகம், 392 பக்கம். கரிசல்பட்டியில் பிறந்து தாமிரபரணி ஆற்றுக்கரையில் வாழ்க்கைப்பட்டாலும் வேர்களை மறக்காத இவர், சொந்த ஊரின்  நினைவுகளைப் புனைவுகளாக ஆக்கியிருக்கிறார். உதயசங்கரின் சிறுகதைத் தொகுப்பு, பிறிதொரு மரணம் - 286 பக்கங்களில் நூல்வனத்தின் இன்னொரு வெளியீடாக மலர்ந்துள்ளது. 

நெல்லை கண்ணனின் ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’நூலை வெளியிட்டுள்ள ஜீவா படைப்பகம், கார்த்திக் புகழேந்தி எனும் இளம் படைப்பாளியின் முயற்சி. ‘அவளும் நானும்’ சிறுகதைத் தொகுப்பு. விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’, ஸ்ரீரங்கம் மாதவனின் ‘பிறழ்’ சிறுகதைத் தொகுப்புகளும் இத்துடன் இணைகிறது. 

இராமேசுவரம் மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு கடலோடியான ஜான்பிரபு எழுதிய ‘வலை ’ சமூக நாவல், பேசப்படவேண்டியது. கடலோர வாழ்க்கையின் பதிவுகளை இலக்கியமாக்கும் ஜோடிகுரூசின் ஏறத்தாழ ஒரு தன்வரலாற்றுக் கதையாடலான ‘வேர் பிடித்த விளைநிலங்கள்’ புத்தகத்தின் தலைப்பே போதுமே! 

வானம் பதிப்பகம், அமனின் எழுத்தில் டி.என்.ராஜனின் ஓவியங்களில், ’நரியின் கண்ணாடி’ காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. 

உலகம் போகிற போக்கில் மனிதனின் அறிவுக்கு இணையாக, போட்டிபோடக்கூடிய வகையில் பேசப்படும் ’செயற்கை நுண்ணறிவு’ எனும் தலைப்பில் கீழைக்காற்று வெளியீட்டகம் வெளியிட்டுள்ள சிறு நூல், காலத்துக்கேற்ற ஒரு படைப்பு. இது விவாதத்தைக் கிளப்பக்கூடும். 

புத்தகக்காட்சி

பெரியபெரிய கட்டைப் புத்தகங்களில் கனமான சங்கதிகளைக் கொண்டுவரும், விடியல் பதிப்பகம், இந்த முறையும் அந்த மரபை விட்டுவிடவில்லை. பரிதி எழுதிய ‘பட்டினிப் புரட்சி’ சமூக செயற்பாட்டாளர்களுக்கான தேவையாக, அவர்களின் புரிதலை மேம்படுத்திக்கொள்ளும் ஒரு புத்தகம் என்பதில் சந்தேகமே இல்லை. 

சுற்றுச்சூழல் படைப்புகளுக்குப் பெயர்பெற்ற தடாகம்,  ’ஃபுக்குஷிமா- ஒரு பேரழிவின் கதை’ நூலை, ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாக புதுச்சேரி பேராசிரியர் சு.ஆ. வெங்கடசுப்புராயநாயகரின் மொழிபெயர்ப்பாக, வெளியிட்டுள்ளது. ஒரு பூர்வபௌத்தனின் சாட்சியமும் இதன் புதிய வெளியீடு. 

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் மு.திருநாவுக்கரசு எழுதி, ஆகுதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ’யாப்பு’ நூல், இலங்கை விவகாரம் பற்றிய சமகால நூல்களில் குறிப்பிடத்தக்கது. 

எதிர் வெளியீடாக வந்துள்ள, ‘கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்/ பனிப்போர்முதல் இன்றுவரை - நந்திதா ஹக்சர், தமிழில்: செ.நடேசன்’புத்தகமும் கவனம்பெற்றுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்