வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (31/07/2017)

கடைசி தொடர்பு:08:55 (31/07/2017)

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி நவாஸ் ஷெரீப் வீழ்ந்த கதை..!

நவாஸ் ஷெரீப்

ந்து ஆண்டு காலம் முழுவதும் ஆளும் பிரதமர்களை பார்ப்பதற்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஒருபோதும் கொடுத்து வைக்கவில்லை. இதுவரை இருந்த 17 பிரதமர்களும் ஏதோ ஒரு குற்றசாட்டுகளின் பேரில் பதவி விலகி இருக்கின்றனர். அப்படி இல்லையெனில், கொலை செய்யப்படுகின்றனர். 18-வது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பும் ஊழல் குற்றசாட்டு காரணமாக பதவி விலகி இருக்கிறார்.
நவாஸ் 2013-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது, தாக்கல் செய்த வேட்பு மனுவில், துபாய் நாட்டில் உள்ள தமது கம்பெனி வருமானத்தை குறிப்பிடவில்லை. இதுதான் அவர் மீதான வழக்கின் ஆரம்பப் புள்ளி.

லண்டனில் பிளாட்கள்...

நவாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்தபோதும், பின்னர் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தபோதும், தன் மகள் பெயரில் லண்டனில் ப்ளாட்கள் வாங்கியிருப்பதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது குறித்த ஒரு கோடியே 10 லட்சம் ஆவணங்களை பனாமாவைச் சேர்ந்த Mossack Fonseca என்ற சட்ட நிறுவனம் வெளியிட்டது. இதில் நவாஸ் ஷெரீப்பின்  மூன்று குழந்தைகளும் வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். லண்டனின் மேஃபேர் பகுதியில் சில பிளாட்கள் உள்பட,  வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களை உபயோகித்துக் கொண்டனர். இந்தத் தகவல்களை தமது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் பட்டியலில் நவாஸ் தெரிவிக்க தவறி விட்டார் என பனாமா லீக்  ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது.  

இந்த ஆவணங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை 5 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரிதது. பனாமா லீக்கின் உண்மைத் தன்மை குறித்து ஆராய புலனாய்வு குழுவை அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம்  கடந்த ஏப்ரல் மாதம் அமைத்தது. இங்குதான் நவாஸ் ஷெரீப்புக்கு தலைவலி தொடங்கியது.

சிறப்பு புலனாய்வு குழுவில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றனர். ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு, பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அதிகாரத்தையும் மீறி செயல்படுகின்றன. பல்வேறு காலங்களில் ஆட்சியாளர்களுக்கு விரோதமாகவே நடந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களை கவிழ்த்து விட்டு ராணுவ ஆட்சியும் நடந்திருக்கிறது.

பனாமா லீக்  ஆவணங்கள்

வலுவான ஆதாரங்கள்...

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது நவாஸ் ஷெரீப் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தங்கள் மீதான குற்றசாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்தனர். நவாஸ் ஷெரீப்பின் தந்தை மியான் முகமது ஷரீப் 1970-ம் ஆண்டுகளில் அரபு எமிரேட்ஸில் சில ஸ்டீல் நிறுவனங்களை நடத்தி வந்தார். பின்னர் அந்த ஸ்டீல் நிறுவனங்களை விற்று விட்டு, வேறு சில வியாபாரங்களில் முதலீடு செய்தார் என்று கூறப்பட்டது. இந்த முதலீட்டில் இருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு பிளாட்கள் வாங்கப்பட்டதாக  உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் குடும்பத்தினர் கூறினர். இதற்கு ஆதாரமாக Qatari  பிரதமர், ஹமாத் பின் ஜஸீம் அல்-தானி கொடுத்த கடித த்தை உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் குடும்பத்தினர் தாக்கல் செய்தனர்.

சிறப்புக்குழுவில் இடம்பெற்றிருந்த உளவாளிகள், நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரித்தனர். பிளாட்கள் வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்த து என்று நவாஸ் குடும்பத்தினர் தங்களிடம் தெரிவிக்கத் தவறி விட்டனர் என்று சிறப்பு புலனாய்வு குழு உச்ச நீதிமன்றத்தில் கூறியது. நவாஸின் மகள் மர்யம் ஷரீப், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர் என்றும், அந்த நிறுவனங்களின் வருமானத்தைக் கொண்டு பிளாட்கள் வாங்கப்பட்டன என்றும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்திருக்கிறது. "என் சகோதரர்தான் உண்மையான உரிமையாளர். நான் வெறும் அறங்காவலர் மட்டும்தான்" என்றும் மர்யம் ஷரீப் ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தார்.

புது அரசியல்வாதிகள்

இந்த ஆவணங்கள் 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் தயாரிக்கப் பட்டதாக மர்யம் ஷரீப் சொல்லி இருக்கிறார். ஆனால், இந்த ஆவணத்தில் இருந்த எழுத்துருக்கள் Calibri font என்ற வகையைச் சேர்ந்தவை. இந்த எழுத்துரு அந்த கால கட்டத்தில் புழக்கத்திலேயே இல்லை என்றும், இந்த எழுத்துருக்கள் 2007-ம் ஆண்டு ஜனவரியில்தான் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் இங்கிலாந்து தடவியல் ஆய்வாளர்கள் புலனாய்வு குழுவிடம் தெரிவித்திருக்கின்றனர். இப்படி நவாஸும், அவரது குடும்பத்தினரும் தாக்கல் செய்த எல்லா ஆவணங்களும் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டன.

வழக்கு விசாரணையின் இறுதியில் கடந்த 28-ம் தேதி தீர்ப்பை வாசித்த ஐந்து நீதிபதிகளில் ஒருவரான இஜாஸ்அப்சல் கான், "தகுதி வாய்ந்த நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலத்துக்கு நவாஸ் ஷெரீப் நீடிக்க முடியாது" என்று கூறினார். நவாஸ் ஷெரீப் பதவியை தகுதி நீக்கம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நவாஸ் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.
இந்த தீர்ப்பின் காரணமாக பாகிஸ்தானில் நேர்மையான புதிய அரசியல்வாதிகள் உருவாகக் கூடும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி சார்பில் தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக இருக்கும் நவாஸின் சகோதரர்  Shehbaz பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்