நடிகைகளின் சாதனைகள்- வேதனைகளைச் சொல்லும் புத்தகத்துக்குப் பரிசு ! | List of books which won awards in chennai july bookfair 2017

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (31/07/2017)

கடைசி தொடர்பு:19:15 (31/07/2017)

நடிகைகளின் சாதனைகள்- வேதனைகளைச் சொல்லும் புத்தகத்துக்குப் பரிசு !

புத்தகத்துக்குப் பரிசு

தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் கடந்த 21ஆம் தேதி முதல் இன்றுவரை புத்தகக்காட்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, வரலாறு, கல்வி, சுற்றுச்சூழல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பெண்ணியம் என 10 தலைப்புகளில் 2016-2017 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த புத்தகத்துக்குப் பரிசு வழங்கப்படுகிறது. 

பரிசுபெறும் புத்தகங்கள்:

புத்தகத்துக்குப் பரிசு

1.   கவிதைத் தொகுப்பு - மர்ம நபர் - தேவதச்சன் கவிதைகள் – தேவதச்சன் - உயிர்மைப் பதிப்பகம்

ஒவ்வொரு தனிமனிதனின் தகவலையும் சேகரித்து, கண்காணிக்கும் இவ்வுலகிற்குத் தர கவிஞனிடம் ஒரே ஒரு தகவல் மட்டும் இருக்கிறது. அது சக மனிதனை நம்பாத மானுடத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சி அவனைப் பதற்றமடைய வைக்கிறது. தன்னிடம் எஞ்சிநிற்கும் சொற்களைக் கொண்டு தனக்கென ஒரு பெயர் வைத்துக்கொள்கிறான் – இனி அவன் பெயர் – மர்ம நபர்.

புத்தகத்துக்குப் பரிசு

2.   சிறுகதைத் தொகுப்பு - முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு – அகரமுதல்வன் - டிஸ்கவரி புக் பேலஸ்

‘போர்’ வெறும் செய்தி என்றானபின் செய்திகளுக்காகவே போர்கள் நிகழ்கின்றன. ஒருவேளைச்செய்தி என்பதே மறைமுகப் போர்தானோ? போருக்கு மூன்று பக்கங்கள் உண்டு. மூன்றாவது பக்கமான நாம்தான்,அதன் பார்வையாளர்கள். நாம்தான் குற்றவாளிகளும்கூட. பேரழிவுகள் நிகழ்ந்தும், சுயநலம் கொண்டு மூச்சுக்கூட விடாதிருந்தவர்கள். ஏதுமறியா முஸ்தபாக்களைக் கொல்பவர்கள். பின், ஒருநாள் முஸ்தபாவாகப் போகிறவர்கள்.

 3. நாவல்  - 1801 – மு.ராஜேந்திரன் ஐஏஎஸ் - அகநி வெளியீட்டகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு.ராஜேந்திரன், ஆய்ந்தறிந்த தகவல்களை வெறும் வரலாற்றுப்புத்தகமாக மட்டுமல்லாமல், ஒரு நாவல் வடிவில் எழுதியுள்ளார். அதன் தலைப்பு “1801”. குறிப்பிட்ட ஆண்டைத் தலைப்பாக வைத்த ராஜேந்திரன், அந்த ஆண்டையொட்டிய ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறை, நமது தட்பவெப்பச் சூழலால் அவர்களின் மகளிர் பட்ட பாடுகள், கிழக்கிந்திய கம்பெனியின் சூழ்ச்சிகள், ஆங்கிலோ இந்திய இனம் தோன்றிய வரலாறு ஆகியவை குறித்து பதிவுசெய்துள்ளார். இந்திய சுதந்திரப்போரின் வேர்களை அறிந்துகொள்ள நினைப்போருக்கு வரலாற்று நூலாகவும், நாவல் பிரியர்களுக்கு ஒரு நாவலாகவும் இருப்பதால் இந்நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

4.   கல்வி - இது நம் குழந்தைகளின் வகுப்பறை – சூ.ம.ஜெயசீலன்- அரும்பு வெளியீடு

வகுப்பறை – ஒரு சூழல். அங்கே மாணவர்களின் பங்களிப்பிற்கு இணையாக ஆசிரியர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் விளக்குகிறது இந்நூல். ஒருங்கிணைந்த கல்வியை முன்வைத்து ஓர் உரையாடலைத் தொடங்கியிருக்கும் இப்புத்தகத்தை ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும்.

5.   கட்டுரை - மேக்நாட் சாகா – தேவிகாபுரம் சிவா - பாரதி புத்தகாலயம்

இந்திய சமூக அமைப்பில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது முக்கியமேயல்ல. நீங்கள் யாராகப் பிறந்தீர்கள், யாருக்குப் பிறந்தீர்கள் என்பதே முக்கியம். சாதி - ஒரு இழி சொல் என்ற புரிதலுக்கு வரவே ஆயிரமாயிரம் ஆண்டுகள் நமக்குத் தேவைப்பட்டிருக்கிறது. அந்தப் புரிதலை ஏற்படுத்துவதற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்தவர்கள் எத்தனை எத்தனை பேர்? பூலே, அம்பேத்கர், பெரியார் வரிசையில் நாம் அறியவேண்டிய இன்னொருவர் - மேக்நாட் சாகா.
ஆம். மஹர் – போல சாகாவும் ஓர் ஒடுக்கப்பட்ட சாதியின் பெயர்தான்.

6.  வரலாறு - சென்னப்பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத் - பாரதி புத்தகாலயம்

சாமானிய மனிதர்களை, அவர்கள் நினைவுகளை, கதைகளை விழுங்கிச் செரித்தே ஒரு மாநகரம் உருவாகிறது. வரலாறு என்பது மேல்மட்டத்தில் சுரண்டி அறியும் வேலையாக இல்லாமல், ஆழமாக அகழ்ந்து விளக்கும் துறையாக இருக்கவேண்டும். அப்படி ஒரு நுணுக்கமான வேலையை இப்புத்தகம் வழியே செய்திருக்கிறார் ராமச்சந்திர வைத்தியநாத்.

7. சுற்றுச்சூழல் - தட்டான், ஊசி தட்டான்கள் அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன், ஆர்.பானுமதி- க்ரியா பதிப்பகம்

இயற்கையில் சிறிது, பெரிது என்றெல்லாம் ஏதுமில்லை. உயிர்ச்சூழலில் எல்லா கண்ணிகளும் முக்கியமானவைதான். பூச்சிகள் இல்லாமல் இவ்வுலகம் சில நாள்கள் கூட நீடிக்காது. இப்புத்தகம் இதுவரை கவனம் பெறாத தட்டான்கள், பற்றிய தெளிவான அறிமுகத்தைத் தருகிறது.

8.   பெண்ணியம் – ரசிகை பார்வை உச்சியில் மிளிர்ந்த தாரகைகள் – பா.ஜீவசுந்தரி - கயல் கவின் பதிப்பகம்

ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது. இந்த நூலில் அது நன்கு வெளிப்படுகிறது. பின்னாள்களில் பெரும் ஆளுமைகளாக வெளிப்பட்ட நடிகைகள் இருபத்தியேழு பேரின் திரையுலக சாதனைகளும் அதில் பலரின் துயரம் தோய்ந்த வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண்கள் வெறும் பொழுதுபோக்குப் பிம்பங்கள் மட்டுமல்ல, ஒரு சமுதாயத்தின் ஒரு நூறு வருடக் கலாசார மதிப்பீடுகளைத் தூக்கி நிறுத்த அல்லது அடித்து நொறுக்க, மறு கட்டமைப்புச் செய்ய பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள். மங்காத தாரகைகளின் இதமான நிலவொளியில் உயிர்த்திருக்கும் இக்கட்டுரைகள் ஒரு அரிய பொக்கிஷம்.

9.   மொழிபெயர்ப்பு நூல் – தாகங்கொண்ட மீனொன்று – ஜலாலுத்தின் ரூமி (தமிழில் : என்.சத்தியமூர்த்தி) லாஸ்ட் ரெசார்ட்

நாம் யாரைக் காதலிக்கிறோம் என்பது கவிதைக்கு முக்கியமல்ல. அக்கவிதையின் வழியே உருவாகிவரும் அக்காதலின் பிம்பம்தான் முக்கியம். காதல் ஓர் அமிர்தம். ஒரு துளியோ, இல்லை ஓராயிரம் துளிகளோ…. கவிதையின் வழி நமக்குக் கிடைப்பது நித்திய வாழ்வின் பெரும் சுவை. ரூமி யாரைக் காதலித்தார் என்று தெரிந்துகொள்வதின் வழியாக நாம் நம்மை அறிந்துகொள்ளலாம்.

10.  சிறுவர் இலக்கியம் – கிச்சா பச்சா – விழியன் - வானம் பதிப்பகம்

காகங்கள், ஏன் தாம் கருப்பாக இருக்கிறோம்? என்ற கேள்விக்கான பதிலைத் தேடி பிற விலங்குகளைச் சந்திக்க செல்கின்றன. இடையில் நமக்குத் தெரிந்த கதைகள், தெரியாத தகவல்கள், வெவ்வேறு விலங்குகளைச் சந்திக்கும் காலப்பயணம் என்று வெகு சுவாரஸ்யமாகக் கதை சொல்லியிருக்கிறார் விழியன். குழந்தைகளைக் கவரும் நூல் இது.

11. சிறப்பு விருதாக, பசு.கவுதமன் எழுதி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட ’சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ எனும் பெரியார் தொகைநூலுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. 

1925-ஆம் ஆண்டு முதல் 1973-ஆம் ஆண்டு வரைக்குமான பெரியாரின் பதிவுகளை மொழி, இலக்கியம், கலையும் பண்பாடும், தத்துவம் சொற்சித்திரம், சித்ரபுத்திரன் பதிவுகள் என ஐந்து தொகுதிகளாக இந்த நூலை பசு.  கவுதமன் தொகுத்துத் தந்துள்ளார். பெரியார் எழுதிய நூல் மதிப்புரைகள், இரங்கல் குறிப்புகள், அறிவிப்புகள், தோழர்களிடம் ஆலோசனைகேட்ட செய்திகள்  ஆகியவை, புதிய தகவல்களாக இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் வடிவமைப்பில் முகப்பு அட்டை சிறப்பாக இருக்கிறது. பெரியாரியத்தைப் புரிந்துகொள்ள விரும்புவோர்க்கு நல்லதொரு தொடக்கமாக இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கலாம்.

இவ்வாறு விருதுத் தேர்வுக் குழுவினர் கருத்துத்தெரிவித்துள்ளனர். 

எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்கள் ப.திருமாவேலன், கவிதா முரளிதரன் ஆகியோரைக் கொண்ட குழு, பரிசுக்குரிய சிறந்த நூல்களைத் தேர்வுசெய்தது. 
 


டிரெண்டிங் @ விகடன்