வன்கொடுமை வழக்குகளில் 94.1 சதவிகித குற்றவாளிகள் விடுதலை..! - அதிரவைக்கும் புள்ளிவிவரம்!

ஒடுக்கப்பட்டவர்களின் வழக்குகளும் மறுக்கப்படும் நீதியும்' என்கிற நூல்

நாட்டில் உள்ள நீதிமன்றங்களையும் காவல் துறையின் செயல்பாடுகளையும் தோலுரித்துக் காட்டுகிறது 'ஒடுக்கப்பட்டவர்களின் வழக்குகளும்... மறுக்கப்படும் நீதியும்' என்கிற நூல். இதில்தான், கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த வன்கொடுமை வழக்குகளில் 94.1 சதவிகித குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஐ.போ.அஜு அரவிந்த், யா.அருள்தாஸ், பா.நரேஷ் ஆகிய படைப்பாளர்களின் நீண்டநெடிய தேடலில் உருவான இந்த நூலில்தான், கடந்த 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக இந்தியா முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 995 குற்றங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 935 புகார்களுக்கு மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அந்தப் புத்தகம் மேலும் தெரிவிக்கிறது.

இரண்டு வருடகாலமாக இந்தப் புத்தகத்தை ஆவணப்படுத்த இதன் படைப்பாளிகள் போராடியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுதான் போராட்ட இருள் சூழ்ந்தது என்றால், இந்தப் புத்தகத்தை உருவாக்கவும் நூல் ஆசிரியர்கள் மிகவும் போராடியுள்ளனர். அப்படியான நீண்டநெடிய போராட்டத்துக்குப் பிறகு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச்சாராத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆலோசகர் கீதா, 'தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். 

வன் கொடுமை  வழக்கு  குறித்த புத்தகம்

சுப.உதயகுமார், ''பலவீனப்பட்ட எந்தத் தரப்பையும் மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு என்பதே முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதலைத் தடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என்றால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியும், நிவாரணமும் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளது. இங்கு மாட்டுக்குத் தருகிற முக்கியத்துவம்கூட மனிதனுக்குத் தரப்படவில்லை என்பதுதான் உண்மை. இப்படிப் பேசுவதால், தேசத்துக்கு விரோதமானவர்கள் என முத்திரைகுத்தி வழக்குகளைப் பதிவு செய்வார்கள். அவையெல்லாம் தெரிந்தேதான் பேசுகிறேன். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள். உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பவர்களை அப்படித்தான் அரசாங்கம் பார்க்கிறது. இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை யாரும் கேள்வி கேட்கவே கூடாது என நினைக்கிறது" என்றார் சற்று வேகத்துடன். 

நல்லகண்ணு பேசுகையில், ''கடந்த ஆறு ஆண்டுகளில் 3 ஆயிரத்து 923 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதில், 94.1 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5.8 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்க்கிறபோது இன்னும் ஒடுக்கப்பட்டவர்கள்மீதான தாக்குதல் என்பது அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது என்பது உண்மையாகி இருக்கிறது. அதனால், கடந்தகாலங்களைக் காட்டிலும் இன்னும் நாம் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் அழகைப் பார்த்து வியந்த மகாத்மா, 'இங்கு மனிதன் நீசனாக இருக்கிறான்' என்ற கருத்தைப் பதிவுசெய்தார். அதை, உள்வாங்கிக்கொண்டு அங்குள்ளவர்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடி அதில் வெற்றிபெற்றுள்ளனர். பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம் அனைத்து இடங்களிலும் சாதியை மையப்படுத்தி ஓட்டு அரசியலைச் செய்துவருகிறது. குறிப்பாகப் பீகாரில், மாயாவதி வளர்ச்சியை தடுக்க வேறு  ஒரு சமூகத்தைத் தூக்கிப்பிடித்தது. அதனை மற்ற மாநிலங்களிலும் நிகழ்த்தி வருகிறது. அதனால், சாதிக்கு எதிரான நடவடிக்கைளையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கவும் நாம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

'ஒடுக்கப்பட்டவர்களின் வழக்குகளும் மறுக்கப்படும் நீதியும்' என்ற இந்த நூலை, விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் காவல் துறைக்கும் அதன் படைப்பாளிகள் அனுப்பிவைக்க உள்ளனர். தேங்கியுள்ள வழக்குகளுக்கும், தீர்க்கப்படாத வழக்குகளுக்கும், புறக்கணிக்கப்பட்ட வழக்குகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கடமை சட்டத்துறையில் உள்ளவர்களுக்கே உள்ளது என்று நீதி வழங்குகிறது இந்த நூல்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!