வேண்டாம் 'சி'... வேண்டும் 'பைத்தான்'... அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு சரியா?!

ட்டுக் கல்விக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாமல் இருப்பதுதான் நம் கல்விமுறையின் பெரும் சாபம். இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளது அண்ணா யுனிவர்சிட்டியின் சமீபத்திய அறிவிப்பு. பொறியியல் முதலாம் ஆண்டில் இனி 'சி' நிரல் மொழிக்குப் பதிலாக 'பைத்தான்' (Python) நிரல் மொழியைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

Anna University

1972-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'சி' மொழிதான் இப்போதுவரை எல்லா புரோகிராமிங் மொழிகளுக்கும் அடிப்படை என்பதால், பன்னெடுங்காலமாக இந்த மொழிதான் முதலாம் ஆண்டு சிலபஸில் இருந்து வந்தது. இதுதான் அடிப்படை என்றால் பிறகு ஏன் இதை நீக்க வேண்டும்? காரணம் பொறியியல் படிக்கும் மாணவர்கள் 'சி' மொழியில் தேர்ச்சி பெற்றாலும், கேம்பஸ் இன்டர்வியூக்களில் 'சி' மொழி கேட்கப்பட்டாலும்.. வேலை என்று வரும்போது அப்ளிகேசன்களை உருவாக்குவதற்கு அடிப்படையான 'சி' மட்டுமே போதுமானதாக இல்லை. ஹார்டுவேருடன் தொடர்புடைய அப்ளிகேசன்களை உருவாக்கும் நிறுவனங்களில் மட்டுமே 'சி' மொழி அதிகம் தேவைப்பட்டது. நேரடியாக 'சி' மொழியில் அப்ளிகேசன்கள் உருவாக்குவது மிகக் குறைவாகவே இருந்தது. அதனால் பொறியியல் மாணவர்கள் அதோடு சேர்த்து 'ஜாவா' போன்ற வேறு சில மொழிகளையும் கற்க வேண்டியதாக இருந்துவந்தது.

இந்நிலையில் அண்ணா யுனிவர்சிட்டி இனி 'சி'க்கு பதிலாக 'பைத்தான்' என்று அறிவித்திருப்பது வரவேற்கவேண்டிய ஒன்று. இந்த பைத்தான் எங்கே பயன்படுகிறது என்பதைச் சொல்ல வேண்டுமானால்... இன்றைக்கு நாம் தினமும் பயன்படுத்தும் ட்விட்டரில் தொடங்கி... கோரா, யூடியூப் எனப் பல சமூக வலைதளங்கள் பைத்தான் மொழியின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பைத்தான் (Python)

கற்றுக்கொள்ள மிக எளிதானதும், முன்னணி நிறுவனங்களால் பயன்படுத்தப்படுவதுமே பைத்தானின் முக்கியமான சிறப்புகள். மற்ற புரோகிராமிங் மொழிகளைவிடவும் இதைப் பயன்படுத்துவது மிக எளிது. சின்டேக்ஸ் என்றழைக்கப்படும் வாக்கிய அமைப்பு இதில் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும், கோட் எழுதுவது மிக எளிதானதாகவும் இருக்கிறது. புரோகிராமிங் குறித்த முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட இதை எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்ற அளவுக்கு இது எளிமையானது.

மற்ற மொழிகளில் சாதாரணமாக 8 முதல் 10 லைன் வரை தேவைப்படும் கோடினை, பைத்தானில் ஒரே லைனில் எழுதமுடியும். உதாரணமாக, சி அல்லது சி++ மொழியில் ஒரு புராஜெக்ட்டை முடிக்க ஒருவருட காலம் ஆகுமென்றால், பைத்தான் மொழியில் இரண்டே மாதங்களில் முடிக்கமுடியும் என இதன் பெருமைபற்றிக் கூறுகிறார்கள். டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) போன்ற துறைகளில் பைத்தான் மொழிதான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Python Code

ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைப்பதால், பைத்தான் மொழி முழுக்க முழுக்க இலவசமானது. இதைப் பயன்படுத்தவும், மாறுதல் செய்யவும், வர்த்தக ரீதியில் பயன்படுத்தவும் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்பதால், இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதற்கு பங்களிப்பாளர்களும் மிக அதிகம்.

2017-ம் ஆண்டின் அதிகமானோர் தேர்ந்தெடுக்கும் பணிகளின் பட்டியலில் டேட்டா சயின்ஸ் முன்னிலையில் இருக்கிறது. IEEE Spectrum ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் டாப் புரோகிராமிங் லாங்குவேஜ் பட்டியலில், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக பைத்தான் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது. 2017-ம் ஆண்டு இந்தப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம், மெஷின் லேர்னிங் தொடர்பான ஆராய்ச்சிகள் அதிகரித்து வருவதே ஆகும். இத்துறைகளில் பைத்தான் மொழிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பைத்தான் படித்தால், மிக எளிதாக சாட்பாட் (Chatbot) உருவாக்க முடியும். செயற்கை நுண்ணறிவுத்திறன் மற்றும் டேட்டா அனாலிசிஸ் தொடர்பான அப்ளிகேஷன்களை நேரடியாக பைத்தான் மொழியைப் பயன்படுத்தி உருவாக்க முடியும். ஒரு வீடியோ பார்த்ததும், அது தொடர்பான மற்ற வீடியோக்களை யூடியூப் பரிந்துரைப்பதன் காரணம் அதன் டேட்டா அனலைஸ். இதற்கு மிக முக்கியமான காரணம் யூடியூப் தளம், பைத்தான் மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. தேடுதல் இயந்திரமான கூகுள், தனது தேடல் தொடர்பான அத்தனை வசதிகளிலும் பைத்தான் மொழியைத்தான் பயன்படுத்துகிறது.

 

C Programming Language Code

அண்ணா யுனிவர்சிட்டியின் இந்த முடிவு குறித்து சென்னையில் GeoInsysSoft Pvt Ltd இல் ‘மெஷின் லேர்னிங்’ ட்ரெயினராக இருக்கும் சாய்ராமிடம் கேட்டோம். “இது புத்திசாலித்தனமான முடிவு. ஏன்னா… பைத்தான்தான் கடந்த சில ஆண்டுகளாகவே Fastest Growing Programming Language. 'சி' புரோக்ராமர்ஸோட கம்பேர் பண்ணா, ஒரு முன்னணி வேலைவாய்ப்பு தளத்தின் தகவல்படி 3 ‘சி’ புரோக்ராமருக்கு வேலை கிடைக்கிற இடத்தில் 11 ‘பைத்தான்’ புரோக்ராமருக்கு வேலை கிடைக்குது. சம்பளம்னு பாத்தாலும் ‘சி’ தெரிந்தவர்களைவிட ‘பைத்தான்’ தெரிந்தவர்களுக்கு அதிகம். கேம் டெவலப் பண்றது, வெப் டெவலப்மென்ட், டேட்டா சயின்ஸ்னு எல்லா இடத்துலயும் ‘பைத்தான்’ தெரிஞ்சவங்களுக்கு வேலை இருக்கு. இனி இன்ஜினீயரிங் படிக்குற பசங்க ‘பைத்தான்’ கொஞ்சம் ஆர்வமா படிச்சாங்கன்னா நிச்சயம் பெரிய எதிர்காலம் இருக்கும். ”

எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் மாணவர் பாலாஜியிடம் இதுகுறித்துப் பேசினோம். "நிரல் மொழிகளில் இரண்டும் வெவ்வேறு கிளைகள். ஆனால், புரோகிராமிங் ஸ்ட்ரக்சர் பைத்தான்ல ரொம்ப ஈஸி. இதனால பைத்தான ரொம்ப ஈஸியா கத்துக்கமுடியும். அதுமட்டுமில்லாம்ம கேம்ஸ், டேட்டா அனாலசிஸ் ஃபீல்டுல பைத்தான்தான் அதிகம் யூஸ் பண்றாங்க. கூகுளின் டீப்மைண்ட், யூடியூப் மாதிரியான நிறுவனங்கள் கூட இதைத்தான் அதிகமா யூஸ் பண்றாங்க. சிம்பிளா சொல்லனும்னா மெஷின் லேர்னிங், அல்கோரிதம் தொடர்பான துறைகள்ல பைத்தான் படிச்சாதான் ஜொலிக்கமுடியும். சிலபஸ் மாறுனாலும், ஸ்டூடண்ட்ஸ் பெருசா எதையும் இழந்துற மாட்டாங்கன்னுதான் நம்புறேன். அதே நேரத்துல, ஹார்டுவேர் தொடர்பான எம்பெட் சிஸ்டம் எல்லாத்துலயும் 'சி' தான் இன்னும் அதிகமா பயன்படுத்தப்படுது. பைத்தான் மூலமா எம்பெட்(Embed) பண்றதும் இப்ப பரவலாகிட்டுவருது. அதனால மாணவர்கள் அதையும் சொந்தவிருப்பத்துல கத்துக்கறது நல்லது" எனத் தெரிவித்தார்.

Artificial Intelligence

இனி சமூகவலைதளங்கள், சாட்பாட் போன்றவற்றை நம் மாணவர்களே உருவாக்கும் வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருக்கும் இந்த மொழியைத் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவிரும்புவது காலத்திற்கேற்ற மாற்றம் மட்டுமின்றி வரவேற்கப்படவேண்டிய விஷயமும்கூட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!