Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் மெரினா எதுவரை இருந்தது தெரியுமா? - சொல்கிறது ஆவணப்படம்

 

'சென்னைக்கு மிக அருகில்' என்று அரக்கோணத்தில் இருக்கும் ஒரு காலிமனையை ஏலம்விடும் காலம் இது. ஆனால், "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னைக்கு மிக அருகில் கடல் இருந்தது, கடல் மட்டுமே இருந்தது" என்கிறது ஒரு ஆவணப்படம். அதுவும், தென்சென்னையின் பல்லாவரம் மலைவரை ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் தொட்டுக்கொண்டிருந்ததாகக் கூறுகிறது அந்தப்படம். இதனைக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியவர் ராபர்ட் புரூஸ் ஃபூட். தமிழகம் மற்றும் இந்திய எல்லைப் பரப்புகள் என்றால், இவரைத் தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்கின்றனர் புவியியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள்.

ராபர்ட் ஃபூட் வரைந்த குமரிக் கடலின் ஓவிய ஆவணப்படம்

'இந்திய முன்வரலாற்றின் தந்தை' (The Father of Indian Prehistory) என்று அறியப்படும் ராபர்ட் ஃபூட் பற்றிய ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் ஆவணப்பட இயக்குநர் ரமேஷ் யந்திரா. பொதுவாக வெள்ளைக்காரர்கள் என்றாலே இந்தியாவைச் சுரண்ட வந்தவர்கள் என்கிற எண்ணத்தை மாற்றுகிறது இவரின் ஃபூட் பற்றிய ஆவணப்படம். “புவியியல் ஆய்வுக்காக நியமிக்கப்பட்ட எண்ணற்ற வெள்ளைக்காரர்கள், காடுகளிலும் மேடுகளிலும் சுற்றித்திரிந்த சமயத்தில் மர்மக் காய்ச்சலால் இறந்துபோக, அப்படி இறந்த ஏதோ ஒருவரின் இடத்தை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்தான் ஃபூட். 1858-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனது 24-வது வயதில் பணியில் சேர்ந்தவர், தனது நண்பரான வில்லியம் கிங்குடன் சேர்ந்து சுமார் 53,000 சதுர கி.மீ. வரை பயணம் மேற்கொண்டார். அப்படிப் பயணம் மேற்கொண்டவருக்கு 1863 மே மாதம் 13-ம் நாள் அவரது வாழ்நாளின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சென்னை பல்லாவரம் மலைப்பகுதியில் கற்கால மனிதன் உபயோகித்த 'கிளவர்' என்னும் உளி போன்ற கல்லால் ஆன ஆயுதத்தை அவர் கண்டெடுத்தார். அந்தக் கண்டுபிடிப்பு உலக நாகரிகத்தின் காலநிலையை மக்களுக்குச் சொல்லியது. அடுத்த 42 ஆண்டுகளுக்கு அவரை நாட்டின் அனைத்து எல்லைகளுக்கும் தொடர்ந்து பயணிக்க வைத்தது. 

ஃபூட் கண்டெடுத்த கல் க்ளவர்

கல்தோன்றுவதற்கு முன் தோன்றிய குடி என்பதற்கான தடயங்கள்

அந்த மலைப்பகுதியில் இருந்த கிணற்றில் கடல் மணல் தடயங்களைக் கண்டெடுத்தவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் மலையின் கிழக்குப் பகுதிவரை வங்கக் கடல் தொட்டுக் கொண்டிருந்ததை உறுதி செய்திருக்கிறார். அதாவது, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, இன்றைய சென்னை விமான நிலையம் இருக்கும் இடம், மயிலாப்பூர், பார்த்தசாரதி கோவில் என அத்தனையும் ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் புதைந்து இருந்திருக்கின்றன. இதனை தேவாரம், திருவாசகம் போன்ற சமய இலக்கியங்களும் ஒருபக்கம் உறுதி செய்கின்றன. இதுதவிர, கர்நாடகத்தின் கிழக்குப் பகுதி மலைகள், இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய மலைக்குகைத் தொடர்களான ஆந்திராவின் பேலம், திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டியில் இருக்கும் குடியம் மலைக்குகைகள் என ஆதிமனிதன் இந்த பூமியில் இருந்ததற்கான பல தடயங்களைக் கண்டுபிடித்தார். புவியியலாளராக இந்தியாவுக்கு வந்தவரை பயணங்களும், அவரது கண்டிபிடிப்புகளும் தொல்லியல் ஆய்வாளராக மாற்றியது.

ராபர்ட் ஃபூட்

தன் இறுதிக்காலத்தை ஏற்காட்டில் இருக்கும் சேர்வராயன் மலைப்பகுதியில் கழித்தவர், தனது உயிலில் இவ்வாறு எழுதியுள்ளார். "ராபர்ட் புரூஸ் ஃபூட்டாகிய நான், எனது புத்தகச் சேகரிப்பு, பணம், பாத்திரங்கள், பொருள்கள், படச்சேகரிப்புகள், மரத்தாலான பொருள் சேகரங்கள் (இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் தடயங்கள் தவிர்த்து) என அத்தனைக்கும் எனது மனைவி மெல்லிஸாவை வாரிசுதாரராக நியமிக்கிறேன்.” 

'வெள்ளையர்கள் என்றாலே சுரண்டல்காரர்கள்' என்ற பிம்பத்தை உடைத்து தான் சார்ந்து வளர்ந்த நிலத்துக்காக கடைசிவரை உண்மையாக இருந்த ராபர்ட்டின் இந்த நிலைப்பாடுதான் அவரைப்பற்றி ஆவணப்படம் எடுக்க, தன்னைத் தூண்டியதாகக் கூறுகிறார் படத்தின் இயக்குநர்.

வாய்ப்பு கிடைத்தால் சேர்வராயன் மலைப்பகுதியில் இருக்கும் தேவாலயத்தின் பின்புறத்தைச் சற்று எட்டிப்பார்த்து விட்டுவாருங்கள். நம் அடையாளத்தை கண்டுபிடித்துத் தந்தவரின் ஆன்மா அங்குதான் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ