Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரேஷன் விவகாரத்தின் உண்மை பின்னணி! புத்தகம் சொல்லும் ரகசியம்

ரேஷன் கடை குறித்த புத்தகம் வெளியீட்டு விழா

‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருள்கள் இல்லை' எனத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாகக் கடந்த ஒருவருடத்துக்கு முன்பே மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கருத்துத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய தந்தை காந்தி எழுதிய, 'மூடப்படும் ரேஷன் கடைகள் விளக்கமும்... பின்னணியும்' என்ற புத்தகமும் வெளியானது. அதில் தற்போது ரேஷன் கடைகள் மூடப்படுவதற்கான அதிர்ச்சியான உண்மைத் தகவல்கள் கடந்த ஒருவருடத்துக்கு முன்பே வெளியாகி இருந்தன.  

உலக வர்த்தக ஒப்பந்தம்! 

1944-ல் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, உலக நிதியம் ஆகியவை தொடங்கி... பொது வணிகவரி ஒப்பந்தம் (General Agreement on Tariffs and Trade (GATT) ) தட்டுத்தடுமாறி நடைமுறையானதுவரை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. அது மட்டுமன்றி, பொது வணிகவரி ஒப்பந்தத்தில் விவசாய ஒப்பந்தமும் இருப்பதைத் தெளிவுபடுத்தும் நிலையில் உலக வர்த்தகத்தில் விவசாயத்தைக் கொண்டு நிறுத்தியிருப்பதையும் அது வரையறுக்கிறது. 1947-ல் நடைபெற்ற பொது வணிகவரி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில்... 'விவசாயத்தையும் பருத்தியையும் சேர்ப்பதில்லை' என்று விவாதிக்கப்பட்ட அம்சமானது உடைத்தெறியப்பட்டு, உலக மயமாக்கல் சந்தையில் விவசாயமும் பருத்தியும் சேர்க்கப்பட்டு நடைமுறையானதையும் அந்தப் புத்தகம் விளக்குகிறது. அதன்பிறகு, உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization) இந்தியா கையெழுத்திட்டதுதான் அனைத்துத் துறைகளும் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்கக் காரணம் என்று கூறுகிறது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் அதன் சட்டங்களை WTO  அடிப்படையிலேயே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அதனுடைய மிகப்பெரிய கடிவாளம் என்கிறது அந்தப் புத்தகம். 

காந்தி  எழுதிய புத்தகம்

ஒப்பந்தத்தில் உள்ள நாடுகள் தன் நாட்டுக்கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, WTO-வின் கொள்கைகளை மாற்ற முடியாது அதன் விதிமுறை. சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்னைகள், மனித உரிமைகள் என எதுவும் வரையறைக்குள் இல்லாமல் ஈரமற்று இருப்பதையும் அந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. அப்படியே உலக வர்த்தகமும் நடக்கிறது. WTO-வின் பிரதானக் கொள்கை என்னவென்றால், 'சமமான சந்தைப் போட்டி' என்பதாகும். அந்தந்த நாடுகள் உற்பத்தி செய்யும் பொருள்களை அந்தந்த நாடுகளே விற்பனையைத் தீவிரப்படுத்திக்கொள்வதும், நஷ்டம் ஏற்பட்டால் அந்த நாடுகளே அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்வதுமான உள்ளிட்ட பல கடுமையான விதிகள் அந்த ஒப்பந்தத்தில் இருப்பதாகப் புத்தகம் நமக்கு விளக்குகிறது. இதைவிட மிகப்பெரிய பிரச்னையாக அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்து, விவசாயத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிட்டு அனைத்திலும் கார்ப்பரேட் மையமானச் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்கிறது. குறிப்பாக, 'விவசாயத்துக்கு அளிக்கப்படும் 10 சதவிகித மானியத்தை வழங்கக்கூடாது' என்று உலக வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள நாடுகள் கொடுத்த அழுத்தத்துக்கு இந்தியா அடிபணிந்துபோனதை அம்பலப்படுத்துகிறது.   

தோஹா வளர்ச்சித் திட்டம்!

2004-க்குப் பிறகு தோஹா வளர்ச்சித் திட்டம் தளர ஆரம்பித்தது. இதுகுறித்து அப்போது நடந்த கூட்டத்தில், தோஹா குறித்த பிரச்னைகளின் ஒவ்வொரு முடிவுகளும் சரி செய்யப்பட்டதையும் அது  எடுத்துரைக்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைச் சந்தைப்படுத்த வேண்டியிருந்ததால்... உள்ளூர் உணவுப்பொருள்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான், ரேஷன் கடைகளுக்கு மூடு விழாவை நடத்தும் பணிகளைக் காங்கிரஸ் தலைமையிலான அரசு முதன்முதலாகத் தொடங்கியது என அந்தப் புத்தகம் விவரிக்கிறது. உணவு ஏற்றுமதி நாடான பிரேசில், உணவுக்குப் பதிலாகப் பணம் தரும் திட்டத்தினைச் செயல்படுத்தியது. அதுதான், 2010-ல் முன்மொழியப்பட்டு... அனைத்துக் குடும்பங்களும் வங்கிக் கணக்குகளைத் தொடங்கக் காரணமாக இருந்தது என்பதையும் அது விவரிக்கிறது. இப்படி ரேஷன் கடைகளை மூடுவதற்கான திட்டத்தை 2005-ல் காங்கிரஸ் கட்சி தொடங்கி இருந்தாலும், அதனை முழுமைப்படுத்திய பெருமை பி.ஜே.பி-யையே சாரும் என்கிறது அந்தப் புத்தகம். 

ரேஷன்  கடை

வணிக வசதி ஒப்பந்தம்!

பின்னர் வந்த பி.ஜே.பி அரசு, உலக வர்த்தக அமைப்பில் உள்ள வணிக வசதி ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும், ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிவித்ததையும் சுட்டிக்காட்ட அது தவறவில்லை. அது மட்டுமன்றி, தோஹா வளர்ச்சித் திட்டத்தையும் இந்த அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை கொடுத்ததையும் அது கூறுகிறது. செப்டம்பர் 2014-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது..பிரதமர் மோடி வணிக வசதி ஒப்பந்தத்துக்கு அவர் இசைவு தெரிவித்ததையும் அது கூறுகிறது. நிர்மலா சீதாராமன் சொன்ன அடுத்த சில மாதங்களுக்குள்... இந்தியா மாறுவதற்கு என்ன காரணம்? அமெரிக்காவின் மறைமுக  காய்நகர்த்தல்கள்தான் பின்புலமாக இருக்க முடியும் என்று அது தெளிவாக்குகிறது.  


காந்தி இப்படியான சூழ்நிலையில் நைரோபிக் கூட்டத்தில்... ஏற்றுமதி மற்றும் பருத்திக்கான மானியத்தை நிறுத்துவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டன. இப்படி, இந்தியாவின் சரணாகதி தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், ரேஷன் கடைகளை மூடுவதற்கான வேலைகளும் அசுரகதியில் தொடங்கின.ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள், இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலமாகப் பெறப்படுகிறது. இந்திய உணவு கார்ப்பரேஷன், விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்து அதன்பின்னரே ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கிறது. இந்த நடைமுறையிலும் ஏற்பட்ட கோளாறுதான் தற்போதைய பிரச்னைகளுக்குக் காரணம் என்று அது விவரிக்கிறது. 

சாந்தக்குமார் கமிட்டி!

அப்படி இருக்கையில், 'TFA  ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்' என்று அறிவித்திருந்த நாள்களில்... இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் சாந்தக்குமார் தலைமையில் ஒருகமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி 2015-ல் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், ''மானிய விலையில் உணவுப் பொருள்களைப் பெறக் கூடியவர்களின் எண்ணிக்கையை 67 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகக் குறைப்பது, ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை நிறுத்திவிட்டு அவற்றுக்கான மானியத்தை வழங்குவது; ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருள்களைச் சந்தை விலையில் விற்பது, அதற்கான ஒருபகுதி மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்ற அம்சங்களைப் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது ரேஷன் கடையில் பொருள்கள்  நிறுத்தப்பட்டன என்றும், முதலில் மண்ணெண்ணெய் தொடங்கி எரிவாயு உணவுப் பொருள்கள்வரை அவை நீளும் என்றும் அதில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தகவலைக் கடந்த ஒருவருடத்துக்கு முன்பே நூலின் ஆசிரியர் பதிவுசெய்த நிலையில், அதனை அடுத்த ஆறு மாதங்களுக்குள் புத்தகமாகவும் வெளியிட்டுவிட்டார். அவருடைய புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் படிப்படியாக மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன என்பதுதான் உண்மை.. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ