வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (05/08/2017)

கடைசி தொடர்பு:10:22 (05/08/2017)

’ஓவியாவுக்காகக் குரல் கொடுக்கும் நீங்கள், திவ்யாவை கண்டு கொள்ளவில்லையே!’ - கலங்கும் திவ்யா குடும்பத்தினர்

திவ்யாவுக்கு ஏற்பட்ட காயம்

ல வண்ண கனவுகளோடு புகுந்த வீடு சென்ற திவ்யாவின் வாழ்க்கையையே அழித்துவிட்டது கணவர் இளஞ்சேரனின் குடும்பம். 'வரதட்சணை' கொடுமை காரணமாக திவ்யாவைக் கொன்றது முதல் இச்சம்பவத்தை மறைக்க குற்றவாளிகள் நடத்திய நாடகம், அதன் பிறகு காவல்துறை கஸ்டடியில், உண்மையை ஒப்புக்கொண்ட வாக்குமூலம் எனத் தொடர்ச்சியாக திவ்யா கொலை வழக்குப் பின்னணியைப்  பதிவு செய்து வந்துள்ளோம். இந்த நிலையில், இவ்வழக்கிலிருந்து இளஞ்சேரன் குடும்பத்தைக் காப்பாற்றும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, 'திவ்யா கொலையில் முக்கியக் குற்றவாளியான முத்தழகனைக் காப்பாற்றும் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன' எனக் காக்கி வட்டாரங்களில் இருந்தே முணுமுணுப்புகள் வெளிப்படுகின்றன.

"முத்தழகன் குடும்பத்தை மூணு நாள் கஸ்டடி எடுத்து விசாரிக்க  நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு எங்க மன்னார்குடி போலீஸ் மனு போட்டது. 'இதற்கு அனுமதியளிக்கக் கூடாது' என்று முத்தழகன் தரப்புக்காக ஆஜராகினர் வழக்கறிஞர்கள் தமிழரசன், வீரையன் ஆகியோர். இவர்கள் யார் தெரியுமா? சசிகலா தம்பி திவாகரன் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள். முத்தழகன் குடும்பம், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இளவரசியின்  நெருங்கிய உறவு என்பதையும் இந்த இடத்தில் யோசித்துப் பார்க்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், லோக்கல் தி.மு.க தரப்பிலிருந்தும் முத்தழகனுக்கு ஆதரவான வேலைகள் நடக்கின்றன. இதையெல்லாம் கடந்துதான் கஸ்டடி எடுத்து விசாரித்தோம். முழு  உண்மைகளையும்  வெளிக்கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்" என்கின்றனர் காக்கி வட்டாரத்தில் உள்ள சில நேர்மையான போலீஸார்.

திவ்யாவை கொன்ற முத்தழகன் குடும்பம்

காவல்துறை விசாரணை இவ்வாறு பயணிக்க, மறுபுறம் திவ்யாவின் கொலையில் மேலும் பல வலுவான சந்தேகங்களை எழுப்புகின்றனர் திவ்யாவின் உறவினர்கள். இதுகுறித்துப் பேசும் அவர்கள், "திவ்யா கொல்லப்பட்ட அன்று காலை, இளஞ்சேரன் தங்கச்சி இலக்கியா, முத்தழகன் வீட்டுக்கு வந்துட்டுப் போயிருக்காங்க. திவ்யாவை, முத்தழகன் ஆட்கள் கடுமையா தாக்கியதுல பயங்கரமா ரத்தம் வந்திருக்கு. அவங்க குடும்ப டாக்டர் சித்ரா மூலமா அந்தக் காயங்களை துடைச்சிருக்காங்க. பெரிய காயமா தெரியாத மாதிரி உடம்புல ஊசி ஏத்தியிருக்காங்க. எல்லாம் செட் பண்ணி வச்சிட்டு, அதன் பிறகு இவர்களே திவ்யா உடலை எடுத்துக் கொண்டுபோய் அரசு மருத்துவமனையில் சேர்த்துருக்காங்க. இவ்வளவு நடந்திருக்க... இது எதுவுமே  விசாரணையில வெளி வரல. இலக்கியா மற்றும் டாக்டர் சித்ரா ரெண்டு பேரையும், இதுவரை போலீஸ் விசாரிக்கலை. ஒரு பக்கம் இளவரசியோட நெருங்குன சொந்தம், இன்னொரு பக்கம் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ (கு.பாலகிருஷ்ணன்) குடும்பம்னு முத்தழகனுக்குப் பலமான அரசியல் செல்வாக்கு இருக்கு. அதனால முத்தழகனைக் கடுமையான தண்டனையிலிருந்து காப்பாத்துற வேலை நடக்குது. இதுல லோக்கல்ல இருக்கிற சில அ .தி.மு.க பிரமுகர்கள், 'வழக்கை பெருசுபடுத்த வேண்டாம்'னு  திவ்யா அப்பாவை மிரட்டிக்கிட்டு இருக்காங்க" என்கின்றனர் பீதியோடு.

திவ்யா கொல்லப்பட்ட கொடுமையால், கலங்கி நிற்கும் அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்துள்ளது இந்திய ஜனநாயக மாதர் சங்கம். அதன்  தேசியத்  துணைத் தலைவர் தோழர் உ.வாசுகியிடம் பேசினோம். 

உ.வாசுகி

"வெறும் வரதட்சணைக்கான கொலையாக மட்டுமே இது தெரியவில்லை. 'அரை நிர்வாண நிலையில் இருந்த திவ்யாவின் உடல்மீது, வெறும் பெட்ஷீட்டை மட்டும் போர்த்தியவாறு அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர் முத்தழகன் குடும்பத்தினர்' என திவ்யா குடும்பத்தினர் என்னிடம் குமுறினர். திவ்யா உடலில் நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, வேறு சில பின்னணிகள் இருப்பதாக சந்தேகம் கொள்கிறோம். எனவே திவ்யா கொலையில், முழுமையான விசாரணை வேண்டும் என்று நாங்கள் பெரியளவில் போராட்டம்  செய்ய உள்ளோம்" என்றவர் தொடர்ந்து, "பிக்பாஸில், ஓவியா புறக்கணிக்கப்பட்டதாகப் பொங்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், திவ்யாக்கள் வீட்டுக்குள் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். ஓவியா படை என்றெல்லாம் ஒருசிலர் கொந்தளிக்கிறார்கள்.  உண்மையில், நாம் ஒருங்கிணைந்து அரணாக நின்று காக்க வேண்டியது, தினந்தோறும் வீட்டுக்குள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுவரும்  திவ்யாக்களையே.பெண்களைச் சமமாக மதிக்காத இந்த ஆணாதிக்கச் சமூகத்தில், இதுபோன்ற அநியாயங்கள் யாருக்கு நடந்தாலும் 'இது ஒரு சமூகக் குற்றம்' என்ற அடிப்படையில், எல்லோரும் எதிர்க் குரல் கொடுக்க வேண்டும். அதுவே அதிகார பீடத்தில் இருப்பவர்களை அச்சம் கொள்ளவைக்கும்" என்றார் கூர்மையான பார்வையோடு.

மன்னார்குடி அரசு மருத்துவமனையில், திவ்யாவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்களிடம் இதுகுறித்துப் பேசியபோது, "திவ்யா உடம்பில் சுமார் 32 இடங்களில் காயங்கள் தென்பட்டன. நகக் கீறல்கள் இருந்தன. உள்காயங்களும் ஏற்பட்டிருந்தன" என்றனர். மன்னார்குடி டி.எஸ்.பி அசோகனோ, "நாங்கள் நேர்மையான வழியில் விசாரணையைத் தொடர்ந்துகொண்டுள்ளோம். திவ்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அனைத்தையும்  சொல்ல முடியும்" என்றார். இந்த நிலையில், ''திவ்யா குடும்பத்தை அழைத்துப் பேசிய திவாகரன், 'என்னதான் உறவுக்காரராக இருந்தாலும் ஒரு பெண்ணைக் கொன்றவர்களைக் காப்பாத்தும் அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரனில்லை. உங்கப் பொண்ணுக்கு நீதி கிடைக்க சட்டப்படியான போராட்டத்தைத் தொடருங்க' என்று ஆறுதல் கூறியுள்ளார்'' என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.   

திவ்யாவின் மரணத்துக்குக் கிடைக்கும் நீதி, எங்கெங்கோ அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் திவ்யாக்களின் விடுதலைக்கு நம்பிக்கைச் சுடரைப் பரப்பட்டும்!


டிரெண்டிங் @ விகடன்