மீண்டும் ஒரு வெள்ளத்தைத் தாங்குமா சென்னை? மெத்தனத்தால் உண்டாகப்போகும் விபரீதம்... | officials apathy, adyar river restoration works delay

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (06/08/2017)

கடைசி தொடர்பு:13:20 (06/08/2017)

மீண்டும் ஒரு வெள்ளத்தைத் தாங்குமா சென்னை? மெத்தனத்தால் உண்டாகப்போகும் விபரீதம்...

சென்னை வெள்ளம்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2015-ம் ஆண்டில் நிகழ்ந்த சென்னை வெள்ளம் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. மழை, வெள்ளம் காரணமாக  சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. புறநகர் பகுதிகளில் இருக்கும் ஆதனூர் ஏரி, வண்டலூர் ஏரி, சாக்கானான் ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியதால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்துக்குக் காரணம்

அடையாறு ஆக்கிரமிப்பு, ஆறு தூர்வாரப்படாதது ஆகிய காரணங்களால், ஆற்றின் போக்கு தடை பட்டு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.  எனவே, பருவமழைக்கு முன்பாக அடையாறு ஆற்றை தூர்வார வேண்டும் என்று குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார் தரப்பட்டது. அதன் அடிப்படையில் அடையாறு ஆற்றைத் தூர்வாருவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தூர்வாருவதற்கு முன்பு அடையாறு ஆற்றின் உண்மையான நீள, அகலம், ஆழம் குறித்து சர்வே செய்து அதன்படி தூர்வார வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில்  திட்டமிடப்பட்டது. .
அதன்படி ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரையில் வருவாய்த் துறை ஊழியர்கள் சர்வே செய்தபோது, பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா நிலமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. பட்டா நிலங்களில் குடியிருப்பவர்கள், இது எங்கள் நிலம் என்று சொல்லும்போது, அந்த இடத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் சர்வே செய்யாமல் சென்றுவிடுகின்றனர்.

சென்னை வெள்ளம்

சர்வே செய்யவில்லை

இதுகுறித்து வரதராஜபுரம் நலமன்றக் கூட்டமைப்புத் தலைவர் ராஜசேகரிடம் பேசினோம். "அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், ஆற்றை அகலப்படுத்தாமல், இருக்கும் நிலையில் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி வருகிறார்கள்.
அதற்குப் பதில், ஏற்கெனவே முடிவு செய்தபடி முறையான சர்வேசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வே செய்யாமல் தூர்வாரும் பணியை நடத்தி வருகிறார்கள். இதனால், யாருக்கும் பயன் இல்லை. இதனால், வரும் வடகிழக்குப் பருவமழை காலத்திலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது" என்று அச்சம் தெரிவித்தார்.  

பணிகள் நடக்கின்றன

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைமைப் பொறியாளர் முத்தையாவிடம் பேசினோம். "அடையாறு ஆற்றில் சர்வே செய்த பின்னர்தான் பணிகளை மேற்கொள்கிறோம்.போதுமான ஊழியர்கள் இல்லாததால் சர்வே பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி எதிர்ப்புகள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், அகலப்படுத்தி ஆழப்படுத்துகிறோம். ஆதனூரில் இருந்து மியாட் மருத்துவமனை வரை அடையாறு ஆற்றில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நந்திவரம் ஏரி, ஆதனூர் ஏரி, மணிமங்கலம் ஏரி உள்ளிட்ட நான்கு ஏரிகளில் தண்ணீர் நிரம்புவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஏரி தானாகவே நிரம்பி வழியும்போது வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, ஏரியின் தண்ணீர் அளவை கட்டுப்படுத்தி, வெள்ளம் வருவதற்கு முன்பே திறந்து விடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு  மழையின்போது அதிகப் பாதிப்புக்கு உள்ளான, சி.டி.ஓ காலனியில் அடையாறு ஆற்றின் கரையை கான்கிரீட் சுவராகக் கட்டி வருகிறோம். இந்த திட்டம் தவிர அடையாறு ஆற்றை புதுப்பிக்கும் பணி 500 கோடி செலவில் செய்யப்பட உள்ளது" என்றார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்