"ஏன் இப்படி சண்டை போட்டுக்குறாங்கனே தெரியல..!" அலுத்துக்கொண்ட தங்க தமிழ்செல்வன்

டிடிவி தினகரன்

அ.தி.மு.க-வைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வத்துடன், தொடங்கிய முதல்கட்டப் போரை இரண்டாம் கட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியிடம் நகர்த்திவிட்டார்  டி.டி.வி தினகரன். இதுவரை  எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி தினகரனுக்கும் இடையே நிகழ்ந்துவந்த பனிப்போர் கடந்த 4 -ம் தேதி வெளிப்படையாக வெடித்துவிட்டது.  

பெசன்ட்நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.டி.வி தினகரன்,  "இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக  அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி 60 நாட்கள் ஒதுங்கி இருந்தேன். ஆனால், அணி இணைப்பு நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இனிமேலும் பொறுமை காக்கமாட்டேன். அ.தி.மு.க  கட்சி  அலுவலகத்துக்குச் செல்வேன்'' என்று அதிரடியாகப் பேசினார். இதனால், அ.தி.மு.க என்ற ஒற்றைப்புள்ளியில் இயங்கிக் கொண்டிருந்த அந்தக்  கட்சி தற்போது சிதறு தேங்காய் போன்று  சிதைந்து சின்னாபின்னமாகி  கிடக்கிறது  என்பது அம்பலாகிவிட்டது. 

இதுவரை தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். அவர் தினகரனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால், நிச்சயம் ஆட்சி கவிழும் சூழல் உருவாகும் என்பதாலேயே முதல்வர் அமைதி காத்து வருகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கட்சியைக் கைப்பற்ற  டி.டி.வி தினகரனின் செயல்பாடு தீவிரமடைந்திருப்பது குறித்து கருத்து கேட்பதற்காக தமிழக அமைச்சர்கள்  சி வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜூ, செங்கோட்டையன்  உள்ளிட்ட பலரையும் தொடர்புகொண்டு பேசினோம். ஆனால், அனைவருமே பதில் கூறாமல் நழுவிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனிடம் பேசியபோது, "எந்த பிரச்னையும் உருவாகாது என்று நம்புகிறேன்.முதல்வரை கலந்து ஆலோசிக்காமல், கருத்து சொல்வது  நல்லதாக இருக்காது. அதனால் அதிகம் பேச முடியாது. பிரச்னை எழ வாய்ப்பில்லை" என்றார்.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், டி.டி.வி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழச் செல்வனை தொடர்புகொண்டு தினகரன்  நிலைப்பாடு குறித்துக் கேட்டோம்...

''டி.டி.வி தினகரனுக்கு கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறதே அது குறித்து உங்கள் கருத்து  என்ன?'' 

"அது குறித்து எதுவும் தெரியவில்லை. அதனை பிறகு பார்ப்போம்."

''தினகரன்  விவகாரத்தில்,  உங்கள்  நிலைப்பாடு என்ன?''

"துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுடன் நான் இருக்கின்றேன். பொதுச்  செயலாளர்  சின்னம்மா சசிகலா, துணைப்பொதுச்தங்கதமிழ்ச்செல்வன் செயலாளர் டி.டி.வி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் எங்கள் கட்சியின்  சிஸ்டம். ஆனால், ஏன் பிளவு படுது என்று தெரியவில்லை. சண்டை ஏன் போடுகிறாங்கன்னும் தெரியல."

''எடப்பாடி பழனிசாமியின் எம்.எல் ஏ-க்கள் தினகரன் பக்கம் போனால் ஆட்சி கவிழும்  என்று சொல்லப்படுகிறதே?''

"ஆட்சியை இழக்க எந்த எம்.எல்.ஏ-க்களும் விரும்பமாட்டார்கள். அப்படியான நிலைப்பாட்டில் யாரும் இல்லை. இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும்  அமர்ந்து பேச வேண்டும். இப்படியே போனால், ஒரு கால கட்டத்தில், உட்கார்ந்து சமாதானம் பண்ணுவாங்கனு தோணுது."

''டி.டி.வி தினகரனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது..?'' 

 "இருவரும் அமர்ந்து பேசி இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். டி.டி.வி தினகரன் அவர்கள் அ.தி.மு.க-வில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. தற்போது உள்ள சலசலப்பை நிறுத்தவேண்டும் என்றால் இரண்டு தரப்பும் அமர்ந்து  பேச வேண்டும் என்பதே எனது கருத்து" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!