வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (07/08/2017)

கடைசி தொடர்பு:14:55 (07/08/2017)

அமேசானில் பொருள் வாங்குகிறீர்களா...? இதைக் கவனியுங்கள்! #WTO #Analysis

அமேசான்

நீங்கள் அமேசானில் ஏதேனும் பொருள் வாங்கி இருக்கிறீர்களா...? இல்லை வாங்க திட்டமிடுகிறீர்களா...?  உங்களுக்கு கூகுள் கணக்கு இருக்கிறதா..? அப்படியானால் உங்களுக்கும் வரும் டிசம்பர் மாதம்  அர்ஜென்டினா-வின் தலைநகரமான புவெனஸ் ஐரிஸ்-ல் நடக்க இருக்கும் உலக வர்த்தக அமைப்பின் 11-வது அமைச்சரவை அளவிலான கூட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அமேசானில் பொருள் வாங்கலாமா, அல்லது கூகுளில் கணக்கு வைத்துக் கொள்வது பாதுகாப்பானதா என்று அங்கு விவாதிக்கப்படப்போவதில்லை; இந்த நிறுவனங்களை உள்ளடக்கிய சர்வதேச மின்னனு வர்த்தகம் குறித்தான கொள்கை விவாதிக்கப்பட உள்ளது. நாடு கடந்த மின்னணு வர்த்தகத்துக்கு ஏதுவாக தேசங்களின் கொள்கையை எப்படி வடிவமைக்கலாம் என்று விவாதிக்கப்பட உள்ளது.

 வர்த்தகம் குறித்த கொள்கைதானே...? - இதை நாம் படித்து என்னவாகிவிடப் போகிறது என்று Alt+ Tab கீயை வேகமாக அழுத்தாதீர்கள். இதில் நம் தேசத்தின் பொருளாதார, பாதுகாப்பு நலன் அடங்கியிருக்கிறது. தேசத்தின் பொருளாதார இறையாண்மை அடங்கியிருக்கிறது. அதனால், அதைத் தெரிந்து கொள்வது... அந்தக் கொள்கை வடிவத்தைக் குறித்து புரிந்துகொள்வது அவசியம். 

“மின்னணு வர்த்தகத்துக்கான கொள்கை வடிவம்”

அது என்ன மின்னணு வர்த்தகத்துக்கான கொள்கை வடிவம்..? இரண்டு குடங்கள் தண்ணீருக்காக யுத்தம் நடக்கும் தேசத்தில்தான், செல்ஃபோனும் இன்டர்நெட்டும் எங்கும் உடனே கிடைக்கிறது. எந்தப் பொருளையும், எந்த வணிகத்தையும் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டே மின்னணு வர்த்தகத்தின் மூலம் உடனே வாங்கிவிட முடிகிறது. ஆனால், தேசங்கள் கடந்த இந்த வர்த்தகத்தை முறைப்படுத்த சரியான நிரந்தர சர்வதேசக் கொள்கைகள் இல்லை. அப்படியான கொள்கைகளையும்... அதைத் தொடர்ந்து சட்டங்களைக் கொண்டுவரவும் டிசம்பர் மாதம் புவெனஸ் ஐரிஸ்-ல் நடக்கவிருக்கும் உலக வர்த்தக அமைப்பின் 11-வது அமைச்சரவை அளவிலான கூட்டத்தில் விவாதிக்க முயல்கின்றன சர்வதேச நாடுகள். 

“எதிர்க்கும் இந்தியா” 

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் இதை விவாதிப்பதில் ஆர்வமாக இருக்க, அதற்காகக் காய்களை நகர்த்த,  கியூபா மற்றும் இந்தியா போன்ற சில நாடுகள் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதற்கு அவை சொல்லும் காரணம், 'மின்னணு வர்த்தகம் குறித்து தேசங்களுக்குள்ளேயே இன்னும் முறையான சட்டங்களும், வரையறைகளும் கொண்டு வரப்படாத நிலையில், இதைப் பற்றி இப்போது விவாதிக்க தேவையில்லை... கொள்கை வடிவமைக்க தேவையில்லை' என்பதுதான். நுணுக்கமாக இந்த மின்னணு வர்த்தக்கத்துக்கான கொள்கை முன் வடிவத்தை ஆராய்ந்தால், இது ஏகாதிபத்திய மனோபாவத்துடன் வளர்ந்த சில நாடுகளுக்கு அதன் நிறுவனங்களுக்கு துணை நிற்பது போல தோன்றும். அதாவது, மின்னணு வர்த்தகம், கட்டற்ற முதலீட்டுக்கு வழிவகுக்கிறது. ஒரு தேசத்துக்குள் தன் அலுவலகத்தை திறக்காமலே, வெறும் முதலீட்டின் மூலம் அந்த தேசத்தின் மொத்த வணிகத்தையும் கட்டுப்படுத்த முயல்கிறது மின்னணு வர்த்தகம். 

 “அமேசானும்... கூகுளும்” 

அமேசான், உலக வர்த்தக அமைப்புபுரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது தானே....? சரி எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.  தற்போதைய நிலவரப்படி,  கூகுள் நிறுவனம் இணைய விளம்பரச் சந்தையில், 88 சதவிகித சந்தையைப் பிடித்து வைத்திருக்கிறது; ஃபேஸ்புக் மற்றும் துணை நிறுவனங்களான வாட்ஸ் அப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் 77 சதவிகித மொபைல் ட்ராஃபிக்கை கையில் வைத்திருக்கிறது; அமேசான் நிறுவனம் 74 சதவிகித மின்னணு புத்தகச் சந்தையைக் கையில் வைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் வளர்ந்த நாடுகள் மின்னணு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வடிவம் கொடுப்பதற்கு அழுத்தம் தருவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவை, தங்கள் தேசத்தின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதுவாக உலக நாடுகளின் சட்டத்தை வடிவமைக்க அழுத்தம் தருகின்றன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் உலக மொத்த மின்னணு சந்தையையும் கைப்பற்றும் விதமாக உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளை வடிவமைக்க முயல்கின்றன.

சரி.. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் உண்மையில் அது வணிகம் செய்யும் தேசத்தின் குடிகளுக்கு விசுவாசமாக இருக்கிறதா... அறத்துடன் செயல்படுகிறதா என்றால் ‘இல்லை’ என்பதே பதில். லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட நிறுவனங்கள் கட்டற்ற முதலீடு தரும் திமிறினால், தன் தாராளமயக் கொள்கையால்,  ஒரு தேசத்தின் சிறு மின்னணு வர்த்தக நிறுவனத்தை அழிக்க கிஞ்சிற்றும் அஞ்சுவதில்லை. அதாவது, மின்னணு வர்த்தக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம், ஒரு தேசத்தின் ஏகபோக சந்தையைப் பிடிக்க தான் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை என்று ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்குகிறது. இதை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியாமல், பல தேசங்களின் உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் சந்தையை இழந்து போட்டியிலிருந்து வெளியேறுகின்றன அல்லது தங்கள் நிறுவனத்தை அந்தப் பன்னாட்டு நிறுவனத்திடம் விற்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றன. 

மின்னணு வர்த்தகத்தில் பொருள்கள் வாங்குவது விற்பது என்பதைக் கடந்து இந்த வர்த்தகத்துக்கான பணப்பரிமாற்றத்துக்கு வழிவகை செய்து தரும் ‘விசா’ (Visa) 'பேபால்' (Paypal) நிறுவனங்கள்தான் உலக வர்த்தகத்தில் பெரும் பங்கை கையில் வைத்திருக்கின்றன. இந்திய நிறுவனமான  ‘ரூபே’(Rupay)வின் பங்கு இதில் 5 சதவிகதத்துக்கும் கீழ். இப்படியாக நிலைமை இருக்கும் சூழ்நிலையில் உள்நாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களை வலுப்படுத்தாமல், கட்டற்ற முதலீடுகளுக்கு வழிவகுக்கும் சர்வதேச மின்னணு வர்த்தகக் கொள்கைக்கு அனுமதியளிப்பது உள்நாட்டுச் சந்தையில் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். இது ஒரு கட்டத்தில் தேசங்களின் இறையாண்மையான அரசையே கட்டுப்படுத்தும் நிலைக்குச் செல்லும்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்