ஜல், ஜங்கில், ஜமீன்... பூர்வகுடிகளின் இந்த உரிமைக்குரல் எப்போதுதான் அரசுக்கு கேட்கும்? #WorldIndigenousDay | Why the government doesn't care about Indigenous people's rights? #WorldIndigenousDay

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (09/08/2017)

கடைசி தொடர்பு:14:16 (09/08/2017)

ஜல், ஜங்கில், ஜமீன்... பூர்வகுடிகளின் இந்த உரிமைக்குரல் எப்போதுதான் அரசுக்கு கேட்கும்? #WorldIndigenousDay

பழங்குடியினர்

‘‘ஏ கலெக்டரே,
ஏ அரசாங்கமே,
ஏ தாசில்தாரே,
இந்த நிலத்தையும் இந்த வனங்களையும் 
பூமிக்குக் கீழே இருக்கும் 
இந்த பொக்கிஷங்களையும்
நீதான் எங்களுக்குக் கொடுத்தாயா?
இயற்கையிடமிருந்து கிடைத்த
இந்தப் பரிசை நாங்கள் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்;
தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து
இது எங்கள் சொத்து.
நீ யார் இதை எங்களிடமிருந்து பிடுங்க?
நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.
எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை
அன்னை பூமியைக் காக்க போராடுவோம்.’’  

- ஆலியா மாஜ்ஹி, பெண் போராளி, ஓடிசா.

திவாசிகள், உலகின் தொல்குடிகள்; இயற்கையின் குழந்தைகள். தன் தாய்க்கு நோகாமல் தங்கள் பசிக்குத் தேவையான பாலை மட்டும் அருந்துகிறவர்கள். மனிதர்களைப்போல், இயற்கை அன்னையின் அத்தனை அவயங்களையும் அறுத்து ரத்தம் குடிக்கத் தெரியாதவர்கள். வனங்களையே உலகமாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் வனம் இருக்குமிடமெல்லாம் வாழ்ந்தனர் தொல்குடிகள். ஆனால், தற்போது வனமும் இல்லை...ஆதிவாசி இனமும் இல்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. உலக ஜனத்தொகையில் தற்போது ஐந்து சதவிகிதமே ஆதிவாசிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் ஆதிவாசிகளுக்கும் ஒருமொழி உண்டு.

கிட்டத்தட்ட உலகளவில் ஆதிவாசிகளுக்கு இடையில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன. புல், பூண்டு, செடி, கொடிகள் என அனைத்தையும் நேசிக்கும் மனம் ஆதிவாசிகளுடையது. மனிதர்களிலும் இப்படிப்பட்ட ஆதிவாசிகள் இருக்கிறார்கள். அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். வனவளத்தைக் காப்பது வனத்துறை என நாம் நினைக்கிறோம். உண்மையில் உலகளவில் வனங்களின் உண்மையான பாதுகாவலர்கள் ஆதிவாசிகள்தான். இவர்களிடம் பேராசை இல்லை. பெரும் பொருள் இல்லை. ஆனால், உண்மையில் இவர்கள் வாழும் ஆடம்பர வாழக்கையை பெரும் பணக்காரர்கள்கூட வாழமுடியாது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் சென்றிந்தபோது, அங்குள்ள ஆதிவாசிகள் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் தம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரசன்னா.

ஆதிவாசிகள் மற்றும் வனத்தின் பூர்வகுடிகள்

"உண்மையில் ஆதிவாசிகளின் வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே என்ற பொறமை எனக்குள் ஏற்பட்டது. உண்மையில் அவர்கள்தான் வாழ்க்கையை வாழ்கிறார்கள். எதற்காகவும் தங்கள் மண்ணை விட்டுக்கொடுக்காத அந்த பண்பு உயரியது. நாம், நல்ல வேலை, அதிக பணம், சொகுசு வாழ்க்கை என பல காரணங்களை முன்னிட்டு, பிறந்த ஊரை விட்டு, ஏதோ ஒரு இடத்தில் சென்று வாழ்கிறோம். ஆனால், ஆதிவாசிகளுக்கு சொந்த மண்தான் உயிர். அதைவிட்டு எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெளியே வர அவர்கள் தயாராக இல்லை. அரசாங்கம் வேலை கொடுக்கிறோம். நல்ல கல்வி கொடுக்கிறோம் என எத்தனை சொன்னாலும், எங்களுக்கு எதுவும் தேவையில்லை. இந்த வனத்துடன் வாழ்தலே சுகம் என அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

‘‘உண்மையில் உலகில் இயற்கை விவசாயம் செய்வது ஆதிவாசிகள் மட்டும்தான். விதைப்பதும், அறுவடை செய்வதையும் தவிர வேறெந்த பணியையும் அவர்கள் செய்வதில்லை. மண்ணை நோகடிக்காமல், விதைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். பறவைகள், விலங்குகள் எடுத்ததுப் போக, மீதம் என்ன இருக்கிறதோ அதை அறுவடை செய்துகொண்டு திருப்தியாக வாழ்கிறார்கள். உலகின் மதிப்புமிக்க தேக்கு சத்தீஸ்கர் வனப்பகுதியில் கிடைக்கிறது. அந்த தேக்கு மரத்தில் ஒரு கட்டை வாங்கவே (முறைப்படி) நாம் சில ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், அவர்கள் அந்த தேக்கு (காய்ந்து கீழே விழுந்த) கட்டையில் தான் சமைக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் உலகில் அவர்களைப் போன்ற செல்வந்தர்கள் யாரும் இருக்க முடியாதுதானே’’ என்றார். 

உண்மைதான், இந்த வனபாதுகாவலர்களைத்தான் வனத்தைவிட்டு, துரத்துவதற்கு அத்தனை அரசாங்கங்களும் போராடிக்கொண்டிருக்கின்றன. வனத்தில் இருக்கும் அத்தனை வளங்களையும் பணமாகவும், டாலராகவும் பார்க்கும் பெருநிறுவனங்கள், இந்த வனங்களை சுரண்ட நாக்கை தொங்கப்போட்டு காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஜல், ஜங்கில், ஜமீன் அதாவது நீர், வனம், நிலம் ஆகிய மூன்றையும் விட்டுத்தர மாட்டோம் என பலபகுதிகளில் ஆதிவாசிகள் போராடி வருகிறார்கள். இந்த வனமகன்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் அவர்களை அழித்தொழிக்கும் பணியைச் செய்ய பல்வேறு அமைப்புகள் தயாராக இருக்கின்றன. நவீன, பேராசை மனிதர்கள் முன்பாக, தங்கள் உரிமைக்காகவும், மண்ணுக்காகவும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள் வனமகன்கள். 

மற்ற மாநிலங்களில் வனப்பகுதிக்குள் சாகுபடி செய்யும் நிலங்கள் ஆதிவாசிகளுக்கு உரிமையாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆதிவாசிகளுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. 2006 வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் தாங்கள் சாகுபடி செய்யும் நிலங்களை தங்களுக்கு அளந்துக்கொடுக்க வேண்டும் என தமிழக ஆதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், மூன்று தலைமுறையாக நீங்கள் வனத்தில் இருப்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால்தான் அப்படி செய்ய முடியும் என்கிறது தமிழக அரசு. நாட்டில் வாழும் பலருக்கே மூன்று தலைமுறைக்கான ஆதாரம் இல்லாதபோது, ஆதிவாசி மக்களுக்கு அது சாத்தியமான ஒன்றாக இல்லை. ஆனால், பணம் படைத்த பலரும் வனத்தில் கிடைக்கும் பொருள்களை சேகரித்தும், பறித்துக்கொண்டு இருக்கும்போதும், அந்த வனத்தின் தொல்குடிகளால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. மேலும், ஆதிவாசி மக்களில் உள்ள பல இனக்குழுக்களை ஆதிவாசிகள் பட்டியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி வருகிறது. புலையர்கள் ஆரம்பத்தில் ஆதிவாசிகள் பட்டியலில் இருந்தார்கள். தற்போது அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். 

 Indigenous communities in tamilnadu

வனம் இருந்தால் தான் இனம் இருக்கும் என்ற உண்மையை இனியாகிலும் ஆள்வோர்கள் புரிந்துகொண்டு, வனமகன்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும். இந்த உலக ஆதிவாசிகள் தினத்தில் இருந்தாவது, அவர்களின் உரிமைக்கு ஊறுவிளைவிக்காமல் இருப்போம் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் தொல்குடிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close