தொலைந்து போன பழங்குடியினர்... கண்டறிய உதவிய வான்கோழிகள்... இது அமெரிக்க ஆச்சர்யம்!

பழங்குடியினர்

கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில், இடம்பெயர்ந்த சோழர்களை, அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தே ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டுபிடிக்கும். அப்படிக் காணாமல் போன ஒரு பழங்குடியினர் இனமான பியூப்லான்ஸ் (Puebloans) என்பவர்களைக் குறித்த தேடல் தான் இந்தக் கதை! இவர்கள் தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள சாக்கோ மற்றும் மேசா வேர்டே பள்ளத்தாக்குகளில் வாழ்ந்த பூர்விக அமெரிக்கர்கள். 1200 களில் வாழ்ந்த இவர்கள், அப்போதே மண், செங்கற்கள், கற்கள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு நகரக் கட்டமைப்புகளை உருவாக்கி வாழ்ந்தவர்கள். பல அறைகள் கொண்ட சிக்கலான குடியிருப்புகள், தாக்குதல் என்று ஒன்று வந்தால், எதிரிகள் சுலபமாக நுழைய முடியாத தற்காப்பு நிலைகளுடன் இருக்கும் வடிவமைப்புகள் என்று அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியை நாலாபுறமும் ஆண்ட அவர்கள், திடீரென்று காணாமல் போயினர். வரலாற்றில் எங்கே போனார்கள் இவர்கள் என்பதற்கான ஆதாரபூர்வமான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

விடையில்லாத கேள்விகள்

பல நூற்றாண்டுகளாக அவர்கள் எங்கே இடம்பெயர்ந்திருக்கக் கூடும் என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிய சவாலாகவே இருந்து வந்தது. சோளம் வளர்ப்பது, அசத்தலாகக் கிராமங்கள், சிறுநகரங்கள் கட்டமைப்பது என்று மிகவும் திறமைசாலிகளான இந்தப் பழங்குடியினர் இனத்தின் பெருமை ஏட்டளவில் மட்டுமே இருந்து வருகிறது. எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? ஒரு சில நாட்களில் ஓர் இனமே, ஒரு மாகாணமே இடம்பெயருமா? அதற்குக் காரணம் என்ன? போன்ற கேள்விகள் பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைத் தூங்க விடாமல் செய்தது.

பழங்குடியினர்

இது தான் காரணம்

பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர்கள் இடம்பெயர்ந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அது அப்போது திடீரென்று பரவிய பெரும் பஞ்சம்! காடழிப்பு மற்றும் மண் அரிப்பு போன்றவையும் இதனுடன் சேர்ந்துக் கொள்ள, 1000 பேருக்கு அன்றாட உணவளிப்பது என்பது கனவாகிப்போனது. இனியும் இங்கே இருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லையென உணர்ந்தவர்களாய் பரதேசியாகப் பயணம் மேற்கொண்டனர். முதன்முறையாக தங்களது சொந்த ஊரான சாக்கோ மற்றும் மேசா வேர்டே பள்ளத்தாக்குகளில் இருந்து தள்ளாடும் தாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை, உடைமைகள் முதல் வளர்த்த மிருகங்கள் வரை அனைத்தையும் கூட்டிக்கொண்டு வெளியேறி இருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு

எங்கே போனார்கள் என்பதற்கான முழுமையான ஆதாரம் இல்லாதபோதும், அவர்கள் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் ரியோ கிராண்டே மாகாணத்திற்குச் சென்றிருக்க கூடும் என்பது மூத்த ஆராய்ச்சியாளர்களின் வாதமாக இருந்தது. ஆனால், அதை உறுதி செய்ய ஆதாரம் என்று ஒன்று வேண்டுமே? ரியோ கிராண்டே மக்களை அணுகி பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டபோது மறுத்திருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளின் உதவியை நாட, என்றுமே கை விடாத அறிவியல் ஓர் அற்புதமான யோசனையை முன்வைத்தது.

வான்கோழிகள்

வான்கோழிகள் வைத்து ஆராய்ச்சி

அப்போது வாழ்ந்த அந்தப் பழங்குடியினர் இனத்தின் அன்றாட வாழ்க்கை முறையில் வான்கோழிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இங்கே நாம் ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பது போல், அவர்களுக்கு வான்கோழி வளர்ப்பு. சாக்கோ மற்றும் மேசா வேர்டே பள்ளத்தாக்குகளில் இருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த பல எஞ்சியுள்ள பொருட்கள் கைவசம் இருந்திருக்கிறது. அதில் இந்தப் பழங்கால வான்கோழிகளின் எலும்புகளும் அடங்கும். அதில் இருந்து அந்த வான்கோழியின் DNA மூலக்கூறுகளை எடுத்திருக்கிறார்கள். பின்பு அதை, வடக்கில் இருக்கும் ரியோ கிராண்டே மாகாண வான்கோழிகளின் DNA வுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். இரண்டும் 100 சதவீதம் பொருந்தி போயிருக்கிறது. 1200 களுக்கு முன், ரியோ கிராண்டேவில் வாழ்ந்த வான்கோழிகள் இது போல் இல்லை. சரியாக 1280 களில் தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, பியூப்லான்ஸ் பழங்குடியினர் இங்கே இடம்பெயர்ந்த பின்னரே, வான்கோழிகள் இப்படி மாறியிருக்கின்றன என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ப்ரூஸ் பெர்ன்ஸ்டைன் என்ற பழங்குடியினர் வரலாற்று பாதுகாப்பு அதிகாரி பேசுகையில், “மக்கள் பெரும்பாலும் தங்கள் வரலாறு குறித்து அறிந்து கொள்ள தொல்பொருள் ஆய்வுகளை விரும்புவதில்லை. ஆனால், அறிவியல் ஆராய்ச்சி எனும் போது, அவர்கள் பதில் வேறாய் இருக்கிறது” என்று தெரிவித்தார். இவ்வாறான இடைவெளிகளை அறிவியல் கொண்டு நிரப்பும் போது, அந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியின் நம்பகத்தன்மையும் நிச்சயம் உயர்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!