வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/08/2017)

கடைசி தொடர்பு:16:40 (10/08/2017)

தினகரனை வெளியேற்றிய அ.தி.மு.க.வின் ஆகஸ்ட் புரட்சி..! எடப்பாடி பழனிசாமி மெளனம் கலைத்ததன் பின்னணி

எடப்பாடி பழனிசாமி

75 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரப்போராட்டத்தின் போது முழக்கமிட்டு தொடங்கிய இயக்கம் ஆகஸ்ட் புரட்சி என வர்ணிக்கப்பட்டது.  இப்போது அ.தி.மு.க.வில் 'தினகரனே வெளியேறு' என்ற அ.தி.மு.க. தலைமையின் அறைகூவலை ஆகஸ்ட் புரட்சி என வர்ணிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். சசிகலா, தினகரனுக்கு எதிராக இதுவரை வாய் திறக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக சசிகலா, தினகரனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனக்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக சொல்கிறார் தினகரன். என்ன செய்வது என்ற ஆலோசனையில் இருக்கிறார் பன்னீர்செல்வம். இவை எல்லாம் மீறி அ.தி.மு.க. எதிர்காலம் என்னாகும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்தையொட்டிய அடுத்தடுத்த நிகழ்வுகளால் கலகலத்துப் போய் நிற்கிறது அ.தி.மு.க. கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த 249 நாள்களில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அக்கட்சியில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பன்னீர்செல்வம் முதல்வராகவும், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும் நியமிக்கப்பட்டதில் தொடங்கி, சசிகலா, தினகரன் சிறையில் அடைப்பு, இரு அணியாக பிரிந்ததால் முடக்கப்பட்ட சின்னம், தினகரனுக்கு எதிர்ப்பு வலுக்க, மூன்றாக பிளவு பட்ட அ.தி.மு.க., என ஜெயலலிதா மரணித்த பின்னர் அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வுகள் நடந்து வந்தன. இதன் உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தினகரன் மீது பகிரங்க தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தினகரன்

அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்ட இந்த முடிவு இது மிக முக்கியத்துவமிக்க முடிவாகப் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்திருந்த போது அணியை இணைக்க இரு முக்கிய கோரிக்கைகளை பன்னீர்செல்வம் தரப்பு முன்வைத்தது. அதில் முதன்மையானது சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது. இதையடுத்தே கட்சியில் இருந்து தினகரன் ஓரங்கட்டப்பட்டார். அப்போது இருந்தே தினகரன் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கிடையே பனிப்போர் நிலவி வருகிறது.

தற்போது டி.டி.வி. தினகரன் மீது பகிரங்கத் தாக்குதலை எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்க, இந்தப் பனிப்போர் வெடித்து, விஸ்வரூபமெடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு சசிகலா சிறை செல்லும் போது, சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து கட்சிப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் சசிகலா. அதன் பின்னர் தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்து பணியாற்றி வந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் தினகரனுக்காக தேர்தல் களத்தில் ஓடியாடி வேலை பார்த்தனர். 

இந்தச் சூழலில் இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தினகரனுக்கு எதிரான குரல்கள் கட்சியில் எழத் தொடங்கின. தினகரன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த உடன் அவரை ஓரங்கட்டத் தொடங்கினர். அப்போது இருந்த சூழலில், தினகரனால் எதையும் செய்ய முடியவில்லை. தான் கட்சியிலிருந்து ஒதுங்கி இருப்பதாக தினகரனே அறிவித்தார்.

ஆனால், அவர் முழுமையாக ஒதுங்கிவிடவில்லை.கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால் கட்சி விவகாரத்தில் தினகரன் தலையிடவில்லை. இருப்பினும் தினகரனுக்கு எதிராக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பேசி வந்தனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. 

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே சசிகலாவை சந்தித்து சிறையில் ஆலோசனை நடத்திய தினகரன், ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கட்சிப்பணியைத் தொடங்க உள்ளதாக தினகரன் அறிவித்தார். மேலும் கட்சி நிர்வாகிகள் நியமனப் பட்டியலை வெளியிட்டு, சுற்றுப்பயணத்திட்டத்தையும் அறிவித்தார். இதையடுத்து கட்சியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இன்று கூடிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 'தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது. அவரின் உத்தரவுகள் கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது' என அறிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள் 27 பேர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி சசிகலா, தினகரனால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர். இதுவரை இவர் சசிகலா, தினகரனுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பொதுவெளியில் பேசியதில்லை. சசிகலா, தினகரன் மீது எடப்பாடி பழனிசாமிக்கு எந்தக் கோபமும் இல்லை என்பதையே இது வெளிக்காட்டியது. இந்தச் சூழலில் முதல்முறையாக தினகரனுக்கு எதிராக பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமி பேசியது இப்போதுதான்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கட்சி ஒருவரிடமும், ஆட்சி ஒருவரிடம் என இரட்டை தலைமையை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இரண்டாவது, முதல்வர் பதவியை விட்டுத்தரவும் அவர் விரும்பவில்லை. தினகரன் கட்சி தலைமைப்பதவியை ஏற்றால், அவர் ஆட்சியையும் அவரே வழிநடத்தக்கூடிய சூழல் ஏற்படும் என்ற அவர் நம்பினார். தற்போதைய சூழலில் தினகரனின் அறிவிப்புகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதாலே, அவருக்கு சவால் விடுக்கும் வகையில், தனது முதல்கட்ட கருத்தை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார் என்றே சொல்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி

தினகரனை எதிர்த்து பேசுவதை அவர் விரும்பவில்லை. ஆனால் அவர் கட்சித்தொண்டர்களை சந்திப்பதும், நிர்வாகிகளை நியமிப்பதும் தனது பதவியை பறிக்கும் என நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனாலே தனது முதல் எதிர்ப்பை மிக அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. "தினகரன் நியமனம் தன்னிச்சையானது. அவர் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது. கட்சியில் ஏற்பட்டிருக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம், வீண் குழப்பங்களை ஏற்படுத்த வழங்கப்பட்டிருக்கிறது. இது அ.தி.மு.க. தொண்டர்களை கட்டுப்படுத்தாது. தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி வழிநடத்தி வரும் நிலையில் வீண் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்" என அந்த அறிக்கையில் தினகரனுக்கு எதிராக கடுமை காட்டப்பட்டுள்ளது. 

நான் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நுழைவதை யாரும் தடுக்க முடியாது என தினகரன் விடுத்த சவாலுக்கு பதில் சவால் இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில எம்.எல்.ஏ-க்கள் பன்னீர்செல்வம் தலைமையில் அணி வகுத்து நிற்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 36 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் தினகரனை வலுவாக ஆதரிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆட்டம் தொடங்குகிறது. இனி என்னாகும் என சொல்வதற்கில்லை. கூவத்தூர் ரிசார்ட் கண் முன் வந்து போகிறது. ஒரே நாளில் மாற்றத்தை கண்ட பீகார் மாநிலத்தின் ஆட்சி மாற்றம் கூட நினைவுக்கு வந்து போகிறது. என்ன ஆகப்போகிறதோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்