வயல்வெளியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி! தி.நகர் கடந்து வந்த பாதை... அங்காடித் தெருவின் கதை - நிறைவுப் பகுதி | Agriculture field to smart city, a story of t nagar - last episode

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (11/08/2017)

கடைசி தொடர்பு:16:55 (11/08/2017)

வயல்வெளியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி! தி.நகர் கடந்து வந்த பாதை... அங்காடித் தெருவின் கதை - நிறைவுப் பகுதி

தி நகர் அங்காடித்தெருவின் கதை

தீயணைப்பு வண்டிகூட வரமுடியாத அளவுக்கு தி. நகர் தெருக்கள் குறுகலானவையாக மாறிவிட்டன. ஆனால், சென்னையில் 1930-ம் ஆண்டுக்குப் பின்னர் உருவான  முதல் நவீன நகரம் தியாகராய நகர் என்பதை, இந்தத் தொடரின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்களில் பார்த்தோம். 

பங்களா வீடுகள் 

80 ஆண்டுகளுக்கு முன்பு தி. நகர் ஏரியாவில், வயல்வெளியாக இருந்த பகுதிகள் சென்னை நகர மேம்பாடு என்ற பெயரில் பலிகொடுக்கப்பட்டன. இந்தப் பகுதியில் வசதி படைத்தவர்கள் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிப் போட்டனர். ஓர் ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பங்களா வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டன. இத்தகைய வீடுகளை ஜி.என்.செட்டி ரோடு, ஹபிபுல்லா ரோடு, திருமலைப்பிள்ளை சாலை ஆகிய பகுதிகளில் இன்றும்கூடக் காணலாம். அந்த வீடுகளுக்குள் போய்விட்டால், ஒரு தனி உலகத்துக்குள், அமைதியான இடத்துக்குள் சென்றது போன்ற சூழல் இருக்கும். ஏனெனில், பெரும்பாலானவை வணிகக் கட்டடங்கள் ஆகிவிட்ட சூழலில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தப் பங்களாக்கள் இருக்கும் என்று தெரியவில்லை.

தி நகர்

இப்போது சென்னையிலேயே அதிக நெருக்கடிமிக்க நகரப்பகுதிகளில் ஒன்றாகத் தி.நகர் மாறிவிட்டது. இந்தச் சூழலில்தான் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதில், முதல்கட்டமாக தி.நகர் பகுதியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தி. நகர் பகுதியை மேம்படுத்த மத்திய அரசு 100 கோடி ரூபாய், தமிழக அரசு 100 கோடி ரூபாய் என  200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

வைஃபை ஹாட் ஸ்பாட்

வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பார்க், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஜீவா பார்க்  உள்ளிட்ட தியாகராய நகரில் இருக்கும் எட்டுப் பூங்காக்களைப் பல்வேறு வசதிகளுடன் கூடியவையாக மேம்படுத்த உள்ளனர். இந்தப் பூங்காக்களில் பசுமையான சூழலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தவிர, மழைநீர் சேகரிப்பு வசதிகள், வைஃபை ஹாட் ஸ்பாட் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மாசு கண்காணிக்கும் கருவிகள் நிறுவப்பட உள்ளன. பூங்கா அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் மாசு எவ்வளவு இருக்கிறது என்பதை இந்தக் கருவி உடனுக்குடன் டிஸ்பிளே செய்யும். 

23 சிறிய சாலைகளை அழகுபடுத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. தி.நகர் தணிகாசலம் சாலை, பாண்டிபஜார் சந்திக்கும் பகுதியில் இருக்கும் மின்வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் மல்டி லெவல் கார்பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது. தியாகராய நகர் முழுவதும் அதிநவீனக் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. பயணிகளுக்குப் பேருந்து எப்போது வரும் என்பது குறித்து அவர்களின் ஸ்மார்ட் போனுக்குத் தகவல் அனுப்பப்படும். வாகனங்களை பார்க்கிங் செய்ய இடத்தை முன்பதிவு செய்யும் நடைமுறையும் இங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டியாக தி. நகர் மாற உள்ளது.  

மெட்ரோ ரயில் 

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் தியாகராய நகரும் இணைக்கப்பட உள்ளது. பனகல் பார்க் அருகே ரயில் பாதை அமைக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால்தான் பனகல் பூங்கா தவிர பிற பூங்காக்கள் மட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகின்றன.

இத்துடன் இந்தத் தொடர் நிறைவுபெறுகிறது.

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்