ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்… மருத்துவ அறிவியலை எதிர்க்கும் அமெரிக்கா! | 3 parents for a child. Medical technique opposed in America!

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (14/08/2017)

கடைசி தொடர்பு:16:34 (14/08/2017)

ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்… மருத்துவ அறிவியலை எதிர்க்கும் அமெரிக்கா!

மூன்று பெற்றோர்

“உங்களுக்குப் பையன் பொறந்திருக்கான்!” பெரும்பாலான பெற்றோர்களுக்கு கனவான இந்த வார்த்தைகள் அந்த மருத்துவமனையிலும் ஒலித்தது. ஆனால், அந்த பாராட்டிற்கு அன்று சொந்தக்காரர்கள் இரண்டு அல்ல; மூன்று பெற்றோர்கள்! ஆம், சென்ற வருடம் அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் மருத்துவ அறிவியலில் ஒரு மகத்தான புரட்சி. அரிய வகை, மரபணு குறைபாடு உள்ள பெற்றோர்களுக்கும் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க உதவுகிறது அறிவியல். இந்த விந்தையை அந்தக் குழந்தை பிறந்தக் கதையை கொண்டே புரிந்து கொள்ளலாம்.

அந்தத் தம்பதிகளில், பெண்ணுக்கு Leigh Syndrome வரவழைக்கக் கூடிய தவறான செல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவருடைய மைட்டோகாண்ட்ரியாவில் ஒரு பகுதி பாதிப்பு ஏற்படுத்துவதாய் மாறியிருக்கிறது. இது அவர் வயிற்றில் இருக்கும் சிசுவின் வளரும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஓர் அபாயக் கோளாறாகிவிட்டது. இதன் விளைவாக இரண்டு முறை குழந்தை இறந்து பிறந்துள்ளது. என்ன செய்வதென்று புரியாமல், நியூயார்க்கில் இருக்கும் நியூ ஹோப் ஃபேர்டிலிட்டி சென்டரை நடத்தும் டாக்டர். ஜான் ஜாங் என்பவரைச் சந்தித்து இருக்கிறார்கள். அவர் இவர்களுக்குப் பரிந்துரைத்தது UK யில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை - மூன்று பெற்றோர் மருத்துவ தொழில்நுட்பம்.

சுழல் அணுக்கரு பரிமாற்றம் (Spindle Nuclear Transfer) என்ற முறையில் அந்தப் பெண்ணின் கருமுட்டையில் இருந்து அணுக்கரு (Nucleus) ஒன்றை எடுத்து வேறொரு பெண்ணின் அணுக்கரு இல்லாத கருமுட்டைக்குள் சேர்த்து விட்டார். பின்பு அது தந்தையின் உயிரணுவால் கருவாக உயிர்பெற்றது. ஐந்து கருக்கள் உருவாக்கப்பட்டு அதில் வளர்ந்த ஒன்று மீண்டும் தாயின் கர்ப்பப்பை உள்ளே வைத்து வளர்க்கப்பட்டது. குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, இந்த வெற்றியை அமெரிக்க இனப்பெருக்க மருத்துவ அறிவியல் கழகம் பெரிதும் பாராட்டியுள்ளது.

 

 

இது நடந்து ஒரு வருடம் ஆகப்போகும் தருவாயில், டாக்டர் ஜான் ஜாங் அவர்களின் இந்த மூன்று பெற்றோர் மருத்துவ முறைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration - FDA) தன் நாட்டில் தடை விதித்துள்ளது. ஜாங் அவர்கள் முறையான அனுமதி பெறாமல் இப்படி ஒரு சிகிச்சையை அளித்திருப்பதாகவும், இது போன்ற சிக்கலான மருத்துவமுறையை மனிதர்களின் மேல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, இந்த மருத்துவ முறைக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்டர். ஜாங் கருவை மட்டும் நியூயார்க்கில் உருவாக்கி  விட்டு மெக்சிகோவில் சிகிச்சை அளித்திருக்கிறார்.

இப்போது அமெரிக்க மக்களைக் கவரும் வகையில் டாக்டர். ஜாங் அவர்களின் மருத்துவமனை இணையதளம் தாங்கள் மரபணு கோளாறுகளுக்கு ஏற்ற மகப்பேறு மருத்துவத்தை வெற்றிகரமாக செய்து விட்டதாகக் கூறி விளம்பரப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று FDA கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. முறையான அனுமதிக்கு முயற்சிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அல்லது குழந்தை இறந்தே பிறக்கும் தம்பதிகளுக்கு ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்பட்டது. ஆனா இப்போது, இந்த மருத்துவமுறை முறையாக அனுமதி பெறாத ஒன்று என்பதை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்