Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

‘சோனியா காந்தியின் மெகா கூட்டணி உளுத்துப்போகும்!’ - பொன். ராதாகிருஷ்ணன்

சோனியா காந்தி - மெகாகூட்டணி

ரசியல் களத்தில் இப்படியான மாற்றங்கள்கூட நிகழுமா? என்பதையும் தாண்டி தமிழகத்திலும், டெல்லியிலும் சமீபகாலமாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன எனலாம். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க பிளவுபட்டு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். 

பின்னர், ஜனாதிபதி தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவானது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அதில் இடம்பெற்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தது, பி.ஜே.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 

ஆனால், பீகாரில் உருவான மெகா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார், பி.ஜே.பி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தது, அவர் மீதான நம்பிக்கையை உடைத்துவிட்டது. நிதிஷின் மற்றொரு அரசியல்முகம் வெளிப்பட்டது. 

வகுப்புவாத சக்திகளை விரட்டவே மெகா கூட்டணி 

எனினும், கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஜனாதிபதிடி ராஜா தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி. ஜனாதிபதி தேர்தலுக்காக உருவான மெகா கூட்டணி, 2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் இணைந்தே செயல்படத் திட்டுமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான வியூகங்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இப்போதே வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் மக்களவைத் தேர்தல் வியூகம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவிடம் பேசினோம்.

“ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி-யின் தீவிரமான இந்துத்துவா கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பி.ஜே.பி-யால் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் பிரச்னைக்கு இதுவரை எந்தத் தீர்வையும் மத்திய பி.ஜே.பி. அரசு எடுக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழலில்தான் மக்களை ஒன்று திரட்டி போராடுவதற்கான கூட்டுமுயற்சியை தற்போது எடுத்துவருகிறது காங்கிரஸ். ஜனாதிபதி தேர்தலுக்காக உருவான கூட்டணி, காலப்போக்கில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்தே சொல்லமுடியும்" என்றார்.

 மெகாகூட்டணி உளுத்துப் போய்விடும் ..

“மக்களவைத் தேர்தலிலும் இந்தக்கூட்டணி தொடருமா?" என்று கேட்டபோது, "பி.ஜே.பி. தலைமையிலான அரசால் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டு வரும் கலவரச் சூழல், அரசியல் சட்டவிதிகளை மீறும் அரசு, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை புறம்தள்ளும் போக்கு போன்றவற்றை எதிர்ப்பதற்கான மக்கள் இயக்கமாக இந்தக் கூட்டணி உருவாக வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை. கங்கிரஸ் கட்சியின் இத்தகைய நிலைப்பாட்டுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருமித்த பிரச்னையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" என்று பதிலளித்தார்.

பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது “பி.ஜே.பி.யைத் தவிர்த்து மற்ற கட்சிகள் மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல குச்சிகளை எடுத்துக் கட்டினால் அவை பலம்பொருந்திய கட்டாக மாறும். அதேசமயம் உளுத்துப்போன ஆயிரம் குச்சிகளை வைத்துக் கட்டினாலும், அவை உளுத்துத்தான் போகும். அதை யாரும் உடைக்கவேண்டிய அவசியமே இல்லை. காங்கிரஸ் கட்சியும் அப்படியான கூட்டணியைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எந்த நிலையிலும் அந்தக் கூட்டணி வலுவாக இருக்க வாய்ப்பில்லை" என்றவரிடம், 

“இந்தக் கூட்டணியை உடைப்பதற்கான வியூகங்களை பி.ஜே.பி. வகுத்துவருகிறதா? என்று கேட்டோம். 

அதற்கு அவர், " அந்த மெகா கூட்டணியை வலுவிழக்கச்செய்ய வியூகங்கள் வகுக்கத் தேவையில்லை. அது தானாகவே வலுவிழந்துவிடும்' என்றார்.

“நிதிஷ்குமார் எப்படி உங்களுடைய கூட்டணிக்கு வந்தார் ?” என்றதற்கு, “அவர், முதலமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் செயல்பட்டவர். அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர். இந்தியாவின்  ஒட்டுமொத்த நன்மையைப் பற்றி கவலைப்படக்கூடியவர். இப்படிப்பட்டவர், இந்தியாவை வழிநடத்தக்கூடிய தகுதி படைத்தலைவராக நரேந்திரமோடி இருப்பதைப் புரிந்துகொண்டு எங்களுடைய அணியில் இணைந்துள்ளார். அதில் எந்தத் தவறும் இல்லை. அவரை யாரும் வழிநடத்தமுடியாது. மெகா கூட்டணியில் நடந்த ஊழலைப் புரிந்துகொண்டுதான் பி.ஜே.பி. அணியில் இணைந்தார்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

 பலம் பொருந்திய அணியாக உருவாகும் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசியபோது, “இன்றைய சூழலில் வகுப்புவாத சக்திகளுக்குகோபண்ணா எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாதவகையில் வகுப்புவாத கொள்கைளுடன் பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. ராஜ்யசபாவிலும் பி.ஜே.பி-யின் பலம் உயர்ந்துள்ளது. இதுபோன்ற நிலை தொடர்வது நாட்டின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலாக அமையும். இந்திய நாட்டைக் காப்பாற்றவும், பன்முகத்தன்மை கலாசாரத்தை நிலைநாட்டவும் வேண்டிய கடமையும், பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அதற்காகவே மெகா கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். சோனியா காந்திக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இதுபோன்ற மிகப்பெரும் எழுச்சியால் வகுப்புவாத சக்திகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார் 

அரசியல் ஆதாயத்துக்காக இல்லாமல், கொள்கைக்காக உருவாகும் கூட்டணி இப்போதைக்கு சரிவைச் சந்தித்தாலும், அந்தக் கூட்டணியில் உள்ள நியாயத்தின் வலிமை அதன் அடுத்த வெற்றிக்கு அடிகோலிடும் என்பது உண்மை. மாறாக ‘எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற நிலையில் கூட்டணி ஏற்படுமேயானால், அது மக்களிடம் எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறிதான். இதனை உணர்ந்து, காங்கிரஸ் கட்சி செயல்படுமேயானால்,மெகா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறும் வாய்ப்பு ஏற்படும்.எதிர்காலத்தில் என்ன திட்டத்துடன் கூட்டணியை கட்டமைக்கப்போகிறார் சோனியா காந்தி? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement