Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கதிராமங்கலமும்...நெடுவாசலும்.. பின்னணியில் உள்ள கார்ப்பரேட் ரகசியங்களும்!

 

தண்ணீர் கரைபுரண்டோடும் காவிரி

நாடு தனது 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி முடித்திருக்கும் அதே நேரம், அரசின் முக்கியமான முடிவுகளுக்கு இடையே, தொடரும் சுற்றுச்சூழல் மாசு சார்ந்த ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் அவசியமாகிறது. ''நிலத்தடிநீரைக் காப்பாற்ற முடியாத சூழலில், 2025-ல் பூமியில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நீரில்லாத சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்'' என்கிறார் கனடா எழுத்தாளர் மவுட் பார்லோவ். ஆனால், அரசே கார்ப்பரேட் போலக் குடிநீரை விலைபோட்டு விற்பதும், ’பத்து ரூபாய்க்குக் குடிநீர் பாட்டிலா பரவாயில்லையே’ என்று 'குறைந்த விலையில் குடிநீர்’ என்றும் வாய்பிளந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், தண்ணீர் நமக்கு இலவசமாகக் கிடைக்கவேண்டிய ஒன்று என்கிற சுய உணர்வு, தண்ணீர் பற்றாக்குறையுடன் சேர்ந்து குறைந்துகொண்டு வருகிறது.

 

காலநிலை மாற்றம்... அண்டார்டிக் பெருங்கடல் பனி மிதவைகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் விரிசல் வழியாகவும், வறட்சியிலும் விளையக்கூடியது என்று அறிமுகப்படுத்தப்படும் பி.டி ரக பயிர்களின் வழியாகவும், சோமாலியர்களிடையே ஏற்பட்டுள்ள பஞ்சத்தின் வழியாகவும், இந்திய நிலங்களில் ஆங்காங்கே தோண்டப்படும் பெட்ரோலியக் கிணறுகள் மற்றும் அதன் காரணமாக வறண்டுக் கிடக்கும் நிலங்கள் வழியாகவும், சூழலியல்... குறிப்பாகத் தண்ணீருக்கான மூன்றாம் உலகப் போரை மிக அருகில் அழைத்து வந்துகொண்டிருக்கிறது. 

கரிம வளக் கொள்ளையும் கார்ப்பரேட் சித்தாந்தமும்

மார்க்சிய சூழலியல்இது, அத்தனைக்கும் கார்ப்பரேட் என்கிற ஒற்றை முதலாளித்துவ சித்தாந்தத்தை அடையாளம் காட்டிவிடலாம். எப்படி என்கிறீர்களா? தெளிவாக விளக்குகிறது மார்க்சிய சூழலியல். “இன்றைய தொழில் யுகத்தின் பொருள் உற்பத்தித் தேவைகள் மற்றும் மூலவளங்களை வழங்குவதில் பெரும் பங்களிப்பு செய்வது புதைபடிம எரிபொருள்கள் ஆகும். நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம கண்மூடித்தனமான அளவில் புவியிலிருந்து வெட்டியும், உறிஞ்சியும் எடுக்கப்பட்டு விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டோ அல்லது தனது உற்பத்தி நிகழ்முறையின் ஒரு தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டோ வணிக நோக்கப் பண்டமாக மாற்றப்படுகிறது. தேவையின் அடிப்படையில் ஓர் அறிவார்ந்த திட்டத்தின்கீழ் இந்த வளங்களைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமான இந்தச் சுரண்டல் முறை மண்ணிலிருந்து எடுக்கப்படும் வளங்களை மீண்டும் மண்ணில் சேர்க்க விரும்புவதில்லை. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுத்தப்படும் இப்புதைபடிம எரிபொருள்கள் அதிக அளவிலான பசுமைக் குடில்வாயுக்களை... அதாவது கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்டவை வளிமண்டலத்தில் வெளியிடப்படுகின்றன. அதாவது, கிட்டத்தட்ட 7 கோடி டன் பசுமைக்குடில் வாயுக்களை ஆண்டுதோறும் பூமியின் வளிமண்டலப் பகுதியில் திணிக்கிறது. இதில் பாதி அளவில்கூட கடல்களாலோ அல்லது காடுகளாலோ மறுசுழற்சி செய்ய முடியாது. இவற்றோடு மூன்றாம் உலக நாடுகளில் வரைமுறையற்று அழிக்கப்படும் காடுகளும் புவி வெப்பமயமாதலுக்கு வித்திடப்படுகின்றன. வளிமண்டலத்தின் உமிழ்வால், பசுமைக்குடில் அடுக்கானது அதிக அளவிலான சூரிய வெப்பக் கதிர்களைப் பூமிக்குள் ஈர்த்து அனுப்பத் தொடங்குகிறது. இதனால் புவியின் சராசரி வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்வதோடு வளிமண்டலத்தின் தட்பவெப்ப சமநிலையைச் சீர்குலைய வைக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டில் செய்த ஆய்வின்படி 1990-ம் ஆண்டுதான் உலகின் அதிக வெப்பமயமான ஆண்டாக அறிவிக்கப்பட்டது. மேலும், 1875-ம் ஆண்டுமுதல் வருடத்துக்கு 1.7 மில்லி மீட்டராக உயர்ந்த கடல் மட்டமானது, 1993-ம் ஆண்டுமுதல் 3 மில்லி மீட்டராக உயரத் தொடங்கியது. இதன் விகிதம் எதிர்காலத்தில் இன்னும் உயரலாம்... கடல் மட்டமானது, குறைந்தபட்சம் 1 மீட்டர் உயர்ந்தாலே வியட்நாம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பெரும் அழிவைச் சந்திக்கும். மனித இனம் இதற்கு மாற்று வழியை நடைமுறைப்படுத்தத் தவறினால், இப்புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் (மனிதனையும் சேர்த்து) மிக விரைவில் கடும் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்கிறது.  

கதிராமங்கலம்

இந்திய அளவில் ஆங்காங்கே வயல்வெளிகளில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எரிவாயு உரியும் குழாய்கள் இதற்கு முக்கியக் காரணிகளாக இருக்கும். தமிழகத்தின் தற்போதைய சூழலியல் பெரும்பிரச்னையாக இருக்கும் இந்தக் குழாய்கள் இருக்கும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கெனவே நிலத்தடிநீர் மக்களால் உபயோகிக்க முடியாத அளவுக்கு... இன்னும் சொல்லப்போனால், மக்கள் தொடக்கூடாத அளவுக்கு நச்சுத்தன்மை மிக்கதாய் மாறியுள்ளது என்று அந்தப் பகுதியில் சில சூழலியலாளர்களால் நடத்தப்பட்ட நீர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் ஆபத்துகள் தெரியாமல்தான் முதலாளித்துவத்துக்கு நாம் ‘கார்ப்பரேட்’ என்கிற அடையாளம் கொடுத்து சிம்மாசனம் இட்டு அமரவைத்திருக்கிறோம். உண்மையில், விக்ரமாதித்தன் தோளில் ஏறிய வேதாளமாகி இருக்கிறது இந்த ‘கார்ப்பரேட்’ முதலாளித்துவம். நாமே விட்டொழிக்க நினைத்தாலும் அதற்குத் தொடர்ந்து தீனியிட்டுக் கொண்டிருக்க வேண்டியதாகிவிட்டிருக்கிறது சூழல். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement