“சிறுத்தைக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் வனத்துறை அமைச்சரா?” - வறுத்தெடுக்கும் எம்.எல்.ஏ. | D.M.K MLA I.P. senthilkumar hits the state forest minister Dindigul Srinivasan

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (17/08/2017)

கடைசி தொடர்பு:17:52 (17/08/2017)

“சிறுத்தைக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் வனத்துறை அமைச்சரா?” - வறுத்தெடுக்கும் எம்.எல்.ஏ.

“பாதாளம் வரை பாயும்” - இந்த ஒற்றை வாக்கியம்தான் இன்று அமைச்சருக்கும்-முன்னாள் அமைச்சருக்குமான வாக்கிய யுத்தத்துக்கு அடித்தளமிட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு, அன்னதானம் அளிக்கும் விழாவுக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள், 
''டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்துக்கு 20 எம்.எல்.ஏ-க்கள் சென்றுள்ளனரே?'' என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய  திண்டுக்கல் சீனிவாசன், "சின்னப் பிள்ளைங்க... உங்களுக்குத் தெரியாது. பெரும்பான்மையை நிரூபிக்க, 117 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே போதும்.  இப்போது எங்களிடம் இருப்பது 115 எம்.எல்.ஏ-க்கள். தேவைப்படுவது இன்னும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான். எதுவோ, ‘பாதாளம் வரைக்கும் பாயும்’ என்பார்களே... அது உங்களுக்குத் தெரியாதா? எங்கிருந்தாலும் அவர்கள் வரமாட்டார்களா என்ன?” என்றார் எள்ளல் தொனியில்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அவர் அளித்த இந்தப் பேட்டிக்கு எதிராகக் கொந்தளித்துள்ளார் தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.2.2017 அன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற நடத்திய 'குதிரை பேரம்' இன்னும் சிரிப்பாய் சிரிக்கிறது. 'கோடிகளில் பேரம்' குறித்து, அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களே தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து, நாடு முழுவதும் தமிழ்நாட்டின் மானம் கப்பலேறியது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.

நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக தி.மு.க சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதும், குதிரை பேரம் நடத்தியதும் ஆளுநர் விசாரணையில் ஒரு புறமும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற விசாரணையில் இன்னொரு புறமும் இருக்கின்ற நேரத்தில், ஓர் அமைச்சரே ஆட்சிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டியளித்திருப்பது சட்டமன்ற ஜனநாயகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பத்துக்குள் மீன் பிடிக்க, இப்போது பணம் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு இந்தக் 'குதிரை பேர' அரசின் அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதுதான் இந்தப் பேட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'பாதாளம் வரை பாயும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?' என்று பத்திரிகையாளர்களைப் பார்த்தே கேள்வி எழுப்பும் அளவுக்கு அமைச்சர்கள் குவித்து வைத்துள்ள பணம் அவர்களது கண்களை மறைப்பது மட்டுமல்ல... அந்த அளவுக்கு ஆணவத்தையும் கொடுத்துள்ளது.

இவ்வளவு நடந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்? முதலமைச்சர் மட்டத்தில் இப்படி குதிரை பேரம் நடத்துவது பற்றி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்' என்று மிக காட்டமாகக் கேட்டுள்ளார். மேலும், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு, அவரின் சொந்த மாவட்டத்தில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

திண்டுக்கல் ஐ பெரியசாமியுடன்  ஐ.பி செந்தில்குமார்

பழனி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான ஐ.பி செந்தில்குமார் இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். "கொடைக்கானல் மத்திய மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவைகள், ஊருக்குள் வந்துவிடுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சட்டமன்றத்தில் நான் பேசியபோது, ‘அப்படி ஒரு செய்தியையே நான் பார்க்கலையே' என்றார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், சில நாள்களில், இவரே வன அதிகாரிகளுடன் சென்று  யானையை நேரடியாகவே பார்த்தார். 'புலியூர், பாரப்பட்டி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஊருக்குள் வந்து ஆடுகளை கொன்றுவிடுகிறது. இதைத் தடுக்க வேண்டும்' என்று பேசினோம். அதற்கு, 'இங்கு சிறுத்தைகளே இல்லை' என்றார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், 3 நாள்களில், 'சிறுத்தை குட்டி ஒன்று அடிபட்டு  இறந்தது' என்ற செய்தி, பத்திரிகைகளில் வெளியானது. ஆனால், அதற்கும் நம் அமைச்சர் சார்பாக அதிகாரிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா? 'இறந்தது சிறுத்தைக் குட்டியல்ல; அது  காட்டுப்பூனை' என்பதுதான். சிறுத்தைக்கும், காட்டுப்பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவர் எல்லாம் நமக்கு வனத்துறை அமைச்சராக வந்திருப்பதுதான் காலக்கொடுமை.

வனம் குறித்தும், இந்த மாவட்ட மக்கள் குறித்தும் எந்தவித அறிவுசார் பார்வையும் இல்லாதவர். இந்த மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாதவர் அவர். அவரின் நோக்கம் என்பது, பணமே. எந்த நேரமும் குதிரை பேரம் குறித்து சிந்திப்பவர் என்பதின் வெளிப்பாடுதான் 'பாதாளம் வரை பாயும்' என்ற அவரின் பேட்டியாகும் .'ஜனநாயக நாட்டில் பணத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிடலாம்' என நினைப்பது ஜனநாயகத்தைப் பலியாக்கும் செயலாகும். 'தாய் எவ்வழியோ, அவ்வழியே சேய்'  என்பார்கள். அந்தவகையில், ஆட்சியின் எண்ண அளவுகோலைத்தான் அமைச்சர் பிரதிபலித்தாரோ என்னவோ..." என்றார்.

இவ்விவகாரம் குறித்துப் பேசும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிற கட்சியினரோ, ''ஐ.பி-க்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையிலான பவர் பாலிடிக்ஸ் மீண்டும் லைம்லைட்டில் கோலோச்சத் தொடங்கிவிட்டது'' என்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்