Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியா... தினகரனா...?! - எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவின் பின்னணி

“1) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள 'வேதா நிலையம்' இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.

2) ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்".

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகள், மழை மேகம் சூழ்ந்த வானிலையையும் கடந்து அரசியல் அரங்கில் அனல் கிளப்பத் தொடங்கியுள்ளன. இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்ட கையோடு, அதற்கான ஆயத்தப் பணிகளையும் புயல்வேகத்தில் தொடங்கிவிட்டது. வேதா நிலையத்தை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அங்கு செய்தி சேகரிக்கத் திரண்ட செய்தியாளர்களைக் கூட போயஸ் கார்டன் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், அங்கு திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்தச் சூழலில், இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்த “முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புக்கான காரணம் என்ன?” என அ.தி.மு.க. வட்டாரத்தில் துருவினோம்.

மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

“ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என்ற இரண்டு அணிகளைத் தொடர்ந்து, டி.டி.வி அணி என்று மூன்றாவதாக ஒரு அணியும் அ.தி.மு.க-வுக்குள் உதயமானது. கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களிடம் இருந்ததைப் போல, மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கும் இருந்து வருகிறது. ஆனால், தொண்டர்களின் விருப்பத்துக்கான காரணம் வேறு. பி.ஜே.பி விரும்புவதற்கான காரணம் வேறு. 2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே தங்களின் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது பி.ஜே.பி. குறிப்பாக, தமிழ்நாட்டில் வலிமையுடன் கால்பதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அவசியமும் பி.ஜே.பி-க்கு உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், அதனால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள இரக்கம், கருணை ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு செயல்படுகிறது பி.ஜே.பி. இத்தகைய சூழலை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளவும், அ.தி.மு.க.-வுடன் கூட்டணி சேர்ந்து, குறைந்தது 15 இடங்களையாவது (எம்.பி. தொகுதி) தமிழ்நாட்டில் கைப்பற்ற வேண்டும் என்ற திட்டமிடல் அக்கட்சியின் மேலிடத்திடம் உள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க இருந்தால்தான் அதுசாத்தியம் என்று பி.ஜே.பி. கருதுகிறது. எனவேதான் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைப்பில் அந்த இருதரப்பையும் விட கூடுதல் அக்கறையோடு செயல்படுகிறது மத்திய அரசு.

சுதந்திர தினத்துக்கு முன்பாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பதவி ஏற்பு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினருமே சென்றிருந்தனர். இருதரப்பும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்தித்தது. அப்போது, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு பி.ஜே.பி-யின் மேல்மட்டத் தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்களாம். அதேநேரம் பி.ஜே.பி-யை டி.டி.வி.தினகரன் அதிகம் எதிர்க்கவில்லை என்றாலும், ஜெயலலிதா உடல் அடக்கம் செய்த நாளன்றே சசிகலாவின் கணவர் நடராசன் கொடுத்த பேட்டி, பி.ஜே.பி-க்கு எதிராக அமைந்தது என்று அக்கட்சி உணர்ந்தது. மக்களிடம் சசிகலா குடும்பத்துக்கு எதிராக உள்ள மனநிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டி, அவர்களை மொத்தமாக புறக்கணித்தது பி.ஜே.பி. தொடக்கத்தில் இருந்தே ஓ.பி.எஸ், 'எங்களின்  கோரிக்கை இவைதான். ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும். அவர் வாழ்ந்த வேதா இல்லம் மக்கள் பார்வையிடக்கூடிய வகையில், நினைவிடமாக மாற்றப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் ஓ.கே-ன்னா, எடப்பாடி அணியுடன் இணைவதில் எனக்கு ஓ.கே.' என்று கூறிவருகிறார். 

மோடியுடன் ஓ.பி.எஸ்

மற்றொருபுறம், டி.டி.வி தினகரன் மதுரை மேலூரில் நடத்திய பொதுக்கூட்டத்தின் பிரமாண்டம், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பினரைக் கடந்து, பி.ஜே.பி-க்கும் கலக்கத்தை உண்டாக்கியது. இதன் தொடர்ச்சியாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தாலும் எதிர்கொள்வோம்’ என்றார். இந்த பேட்டி மற்றும் அனைத்து அம்சங்கள் பற்றியும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அலசினர். ‘அவர்களே, இவ்வாறு கூறிய பின்னர், விசாரணை கமிஷன் அமைக்கவில்லை என்றால், ஏதோ நாம் பயந்தது போல் ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல், நம்மிடம் குற்றம் இருப்பதாக, அந்தப் பிரச்னை நம் பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது' என மூத்த அமைச்சர்கள் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.

ஆக, ஆட்சிக்கு பிரச்னை வராமல் இருக்கவும், டி.டி.வி தினகரனை எதிர்கொள்ளவும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைய வேண்டும். மேலும், தினகரன் அணிக்கு 'செக்' வைக்கவும் வேண்டும். மறுபுறம் மத்திய அரசிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் போன்ற காரணங்களால், முதல்வர் முக்கியமான இந்த இரு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்” என்கிறார்கள் அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள். அதே நேரத்தில் ‘அணிகள் இணைவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் முக்கியப் பதவியைக் கைப்பற்ற வேண்டும்’ என்பது ஓ.பி.எஸ் அணியின் எண்ணம். 'இரண்டு அணிகளையும் இணைத்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அவர்களை வைத்துக்கொள்வதுடன், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும்’ என்பது பி.ஜே.பி-யின் திட்டம். இவை அனைத்தையும் ஒரே புள்ளியில் ஒருங்கிணைந்ததன் தொடக்கமே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரண்டு அதிரடி உத்தரவுகளுக்கான பின்னணியாகும்” என்கின்றனர் அவர்கள் மூச்சுவிடாமல்.

சசிகலா குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, இந்து வாரிசுரிமை சட்டப்படி, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிற்குத்தான் சேர வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. ஆனால், தற்போது அந்த வீடு சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதால், அரசு நினைவிடமாக அறிவிப்பதன் மூலம் அவருக்கு வைத்த 'செக்' ஆகவே உணர்கிறது ஈ.பி.எஸ் அணி. இன்னொருவகையில் சொல்லவேண்டுமென்றால் நாளை (ஆகஸ்ட் 18 - ம் தேதி ) சசிகலா கொண்டாட இருக்கும் அவரின் பிறந்தநாளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பரிசாக பார்க்கப்படுகிறது. ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகம், போயஸ் தோட்ட வேதா இல்லம் வீடு ஆகியன யார் கட்டுப்பாட்டில் உள்ளதோ, அவர்களே உண்மையான அ.தி.மு.க என்ற நம்பிக்கை அக்கட்சியின் தொண்டர்களிடம் உள்ளது. தற்போது இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம், அ.தி.மு.க-வின் அதிகார மையமாக தன்னைப் பறைசாற்றிக் கொண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றே கருதப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ