வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (18/08/2017)

கடைசி தொடர்பு:11:52 (18/08/2017)

தண்டனையா... கண்துடைப்பா? - மீண்டும் கிளம்பும் ஐ.ஐ.டி விவகாரம்

ஐஐடி மாணவர் சூரஜ்

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தியதற்காக மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

வட இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பவர்கள், எடுத்துச்சென்றவர்கள் மீது தொடர்ச்சியாக  சங்பரிவார அமைப்புகளின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். மாட்டிறைச்சிக்குத் தடையும் விதிக்கப்பட்டது. அதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அதையொட்டி மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்வுகள் பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மே மாதம் 28 அன்று மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதையடுத்த 30ஆம் தேதியன்று இறைச்சி உண்ணும் விழாவில் பங்கேற்ற பிஎச்டி ஆய்வுமாணவர் சூரஜ்ஜை, சக மாணவரான மணீஷ்குமார் சிங் என்பவர் கடுமையாகத் தாக்கினார். இதில் சூரஜ்ஜின் முகத்தில் கடுமையான காயங்களும் குறிப்பாக அவரின் கண்ணில் பலத்தகாயம் ஏற்பட்டு, பார்வையே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

இந்தப் பிரச்னை தொடர்பாக சூரஜ் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாக்கிய மாணவர் மணீஷ் தரப்பிலும் சூரஜ் மீது பதில்புகார் கொடுக்கப்பட்டது. அதனால் சூரஞ் சார்ந்துள்ள அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில், மணீஷ்குமார், மற்றும் ஆறு மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கூறப்பட்டது. நீதிமன்றத்திலும் சூரஜ் தரப்பில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. அதில் ஐஐடி நிர்வாகத் தரப்பில் ஆஜரான நிர்வாகத்தினர், ஐஐடி வளாகத்துக்கு உள்ளேயே சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

விடுதி ஒழுங்குபடுத்தும் குழுவின் அந்த விசாரணைக் குழுவானது இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரம் தன் முடிவை அறிவித்தது. அதன்படி, தாக்குதல் நடத்திய மாணவர் மணீஷ், ஆறு மாதங்களுக்கு விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். படிப்பு தொடர்பாக முன் அனுமதி பெற்று அவர் வளாகத்துக்குள் வரலாம் என்று விடுதி ஒழுங்குபடுத்தும் குழு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு நியாயமானதே அல்ல என அதிருப்தி தெரிவிக்கின்றனர், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

அ.பெ.படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெயரை வெளியிடக்கூடாது எனும் நிபந்தனையுடன் நம்மிடம் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். 

ஐஐடி விடுதிக் குழு அறிவிப்பு -1 ஐஐடி விடுதிக் குழு முடிவு-2

“இன்றுவரை சூரஜ்ஜுக்கு கண்பார்வையில் பிரச்னை இருக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பின்னர்தான் அவருடைய கண்ணின் நிலையைப் பற்றிக் கூறமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரைக் கடுமையாகத் தாக்கிய மணீஷ்குமாருக்கு எந்த தண்டனையையும் இந்த விசாரணைக் குழு வழங்கவில்லை. ஒரு மாணவர், இரண்டு முறை கடுமையாக எச்சரிக்கப்பட்டாலே அவரை இடைநீக்கம் செய்யமுடியும். ஆனால் இந்த மணீஷ்குமார் பல முறை இப்படி நடந்து கடுமையாக எச்சரிக்கப்பட்டவர். அதன்படியே அவரை இடைநீக்கம் செய்திருக்கவேண்டும். ஆசிரியரை மிக மோசமாகப் பேசியதற்காக அவருக்கு கவுன்சிலிங் தந்தார்கள். மாணவர் அவை உறுப்பினர் ஒருவரை அடிக்கமுயன்றார்; அப்போதும் எச்சரிக்கை செய்தார்கள்.

பாருங்கள், கடுமையாகத் தாக்கிய மணீஷ்குமாருக்கு இது தண்டனையே இல்லை. முன்பே இடைநீக்கம் செய்திருக்கவேண்டும். தாக்கியதற்கு குறைந்தபட்சமாக இடைநீக்கம் செய்யவேண்டும் என சம்பவத்தின்போது கேட்டு, வழக்குத் தொடுத்து, இரண்டு மாதம் கழித்து இப்போது, இடைநீக்கமே தண்டனை என்பதைப்போலக் காட்டுகிறார்கள். இந்தத் தாக்குதலின்போது காயம்பட்ட சூரஜ்ஜுக்கு முதலுதவி செய்யமுயன்ற அனூப் எனும் மாணவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். வெறித் தாக்குதலை ஒரு குற்றமாகவே இந்தக் குழு பார்க்கவில்லை. 

ஐஐடி தாக்கிய மாணவன் மணீஷ்

முன்னர் பல முறை அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்ட நிகழ்ச்சிகளில் மணிஷ்குமார்  வாய்த்தகராறு செய்திருக்கிறார். அப்போது நாங்கள் டீனிடம் முறையிட்டும் ஒரு பலனும் இல்லை. கடந்த 3ஆம் தேதியன்று விடுதி ஒழுங்குபடுத்தும் குழுவின் அறிவிப்பில்,’கடுமையாகத் தாக்கப்பட்ட சூரஜ், தாக்கிய மணீஷ், சண்டையைத் தடுத்து முதலுதவி செய்த அனூப் மூவருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் இதுபோல இனி நடக்கமாட்டேன் என எழுதிவாங்கியதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை விமர்சித்து படிப்புவட்டத்தின் சார்பில் சுவரொட்டி ஒட்டினோம். மாணவர்களிடம் இது பற்றி ஆங்காங்கே விவாதம் எழுந்தது. 

அதையடுத்தே இரண்டாவதாக வெளியிட்ட அறிவிப்பில்தான், மணீஷை ஆறு மாதம் இடைநீக்கம் செய்வதாகவும் கடும் எச்சரிக்கை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். சண்டை வேண்டாம் எனத் தாக்குதலைத் தடுத்த அனூப்புக்கும் கடும் எச்சரிக்கை விட்டுள்ளனர். இதில்கூட அண்ணா பல்கலைக்கழகத்தைப் போல இங்கு விடுதி வளாகம் என தனியாக இல்லை. ஐஐடி வளாகத்துக்குள் வந்துவிட்டாலே விடுதிப் பகுதிக்கும் எளிதாக வரமுடியும். முன் அனுமதி பெற்று படிப்பு தொடர்பாக மட்டும் வரலாம் என்பதுகூட என்ன அடிப்படையில் தண்டனை என்பது தெரியவில்லை. நிர்வாகம் தொடர்ந்து இப்படித்தான் நடந்துகொள்கிறது, ஐதராபாத்தில் ரோகித் வெமுலா தற்கொலை விசாரணையைப் போல!” எனக் குமுறுகிறார்கள், அ.பெ. படிப்புவட்ட மாணவர்கள். 

விடுதி ஒழுங்குபடுத்தும் குழுவின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் யோசனையிலும் இருக்கிறார்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள். 

நாட்டுக்கு மட்டுமல்ல மானுடத்துக்கும் சேர்த்து ஆராய்ச்சிசெய்யும் மாணவர்களை சண்டைக்காரர்கள் ஆக்குவதா, நாட்டிலேயே முதன்மைக் கல்விநிலையம் ஒன்றுக்கு அழகு? 


டிரெண்டிங் @ விகடன்