2000 வருடங்களாகச் சந்திர, சூரிய கிரகணங்களை கணக்கிடும் முறை இதுதான்! | We are predicting eclipses for over 2000 years. How is it possible?

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (20/08/2017)

கடைசி தொடர்பு:14:30 (20/08/2017)

2000 வருடங்களாகச் சந்திர, சூரிய கிரகணங்களை கணக்கிடும் முறை இதுதான்!

சூரிய கிரகணம்

ஆரம்பக்காலம் குறித்த ஒரு கற்பனை

உலகம் உருவாகிவிட்டது. மனிதனும் அவதரித்து விட்டான். முதல் மனிதர்கள் அந்த அற்புதமான சூரிய வெளிச்சத்தில், இயற்கையின் அதிசயங்களைக் கண்டு வியந்தவாறு கழிக்கின்றனர். முதல் முறையாக இரவு வருகிறது. அத்தனை நேரம் ஒளி கொடுத்துக் கொண்டிருந்த சூரியனை இப்போது காணவில்லை. பயத்தில் அலறுகின்றனர். ஒரு வழியாக விடிந்தபின் சூரியன் வரவே நிம்மதி அடைகிறார்கள். நாளாக நாளாக இது ஒரு அன்றாட நிகழ்வு, இந்தச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது தான் வேலை என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். கிரகணங்கள் போன்ற விந்தைகளையும் பார்த்து விடுகிறார்கள். மறந்து விடாமல் இருக்க, இது போன்ற நிகழ்வுகளைப் படங்களாக வரைந்து வைத்துக் கொள்கிறார்கள். மொழி என்ற ஒன்றை உருவாக்கிய பின்பு இந்த குறிப்புகள் மிகவும் துல்லியமான ஒன்றாக மாறிவிடுகின்றன. பல நூற்றாண்டுகள் கடந்த பின், ஒவ்வொரு அசாதாரண நிகழ்வும் இப்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். பல அதிசய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அவர்களிடம் ஏராளமாய் சேர்ந்து விடுகிறது. ஒரு கட்டத்தில், நடக்கும் விஷயங்கள் அனைத்தும் தங்கள் குறிப்பில் இருப்பதைப் போல தான் நிகழ்கிறது; இனிமேல் புதிதாக நடப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பதும் விளங்குகிறது.

சூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்கள் அனைத்தும் வட்டமாக இருக்கிறது. பூமியும் அதைப் போல தான் என்பது போன்ற வானவியல் புரிதல்கள் ஏற்பட்ட பின், அவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள்.

ஒரு சில அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதாய் நாம் குறித்து வைத்திருக்கிறோம். உதாரணமாக, சந்திர, சூரிய கிரகணங்கள். அது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது நமக்குத் தெரியும். அது எதனால் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒரு வேளை அது புரியாவிட்டாலும், இனி அது எப்போது எல்லாம் நடக்கும் என்று கணித்து வைத்துக் கொண்டால் என்ன? நம்மிடம் பல நூற்றாண்டுகளின் குறிப்பு இருக்கிறது, இதை ஆராய்ச்சி செய்தாலே, கிரகணங்கள் இனி எப்போதெல்லாம் வரும் என்று தோராயமாக கணித்து விடலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி உட்படச் சந்திர, சூரிய கிரகணங்கள் எப்போது எல்லாம் வருங்காலத்தில் வரும் என்று துல்லியமாக கணித்தும் விடுகிறார்கள்.

சூரிய கிரகணங்கள்

எழுதி வைக்கும் பழக்கம்

டிரெக்ஸல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக இருக்கும் ஜோனதன் செய்ட்ஸ் இது குறித்து பேசுகையில், “உலக அளவில் மெசபடோமியர்கள் நிறையக் கண்டுபிடித்தார்கள். ஏனென்றால், எழுதும் பழக்கத்தை முதலில் அவர்கள் தான் நடைமுறைப் படுத்தினார்கள். இத்தகைய நிகழ்வுகள் சாதாரணமானவை அல்ல, இதற்கெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருந்தார்கள்” என்று தெரிவித்தார்.

சரோஸ் சுழற்சி முறை (The Saros Cycle)

கி.மு.700 ஆம் ஆண்டிற்கு முன்னரே மெசபடோமியர்கள் எழுத ஆரம்பித்திருந்தனர். அவர்கள் சரோஸ் சுழற்சி முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர். அது என்ன சரோஸ் சுழற்சி? ஒரே மாதிரியான இரண்டு சூரிய கிரகணங்கள் அடுத்தடுத்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடக்கிறது. இந்த ஒரே மாதிரியான இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் இடைப்பட்ட நாட்களைத் தான் சரோஸ் சுழற்சி என்று அழைக்கிறார்கள். அதாவது ஒரு கிரகணம் முடிந்த பின்பு சந்திரன், பூமி மற்றும் சூரியன் ஆகியும் அனைத்தும் மீண்டும் அதே போல் ஒரு கிரகணம் ஏற்பட  நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசமே சரோஸ் சுழற்சி. முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும். கிரகணத்தின் தன்மைக்கு ஏற்ப அதை வகைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள்.

கிரகணங்கள்

ஒரு சரோஸ் சுழற்சியின் நீளம் 6585.3211 நாட்கள், அல்லது 18 ஆண்டுகள், 11 நாட்கள், 8 மணி நேரங்கள். சரியாக ஒரு கிரகணம் முடிந்த பின்பு, மீண்டும் அதே போல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட இத்தனை கால அவகாசம் தேவை. எப்போதோ நிகழ்ந்த ஒரு சூரிய கிரகணம், அதன் பின் நடந்த சூரிய கிரகணங்கள், இவை அனைத்தும் இவ்வாறான இடைவெளிகளையே கொண்டுள்ளது என்பதைக் கண்டறிந்த பின்பு, எதிர்கால கிரகணங்களை கணிப்பது சுலபம் தானே? உதாரணமாக வரும் ஆகஸ்ட் 21 அன்று அமெரிக்காவில் சூரிய கிரகணம். “தி கிரேட் அமெரிக்கன் எக்ளிப்ஸ்” என்று அழைக்கப்படும் இது, சரோஸ் சுழற்சியில் சரோஸ் 145 என்ற வரிசையைச் சேர்ந்தது.   இதற்கு முன்னர் ஆகஸ்ட் 11, 1999ல் இதே போல் சூரிய கிரகணம் அங்கே நிகழ்ந்துள்ளது. அடுத்த கிரகணம் செப்டம்பர் 2, 2035ல் நடக்கும். இந்த வரிசையின் முதல் கிரகணம் நிகழ்ந்தது ஜனவரி 4, 1639, கடைசி கிரகணம் நிகழப்போவது ஏப்ரல் 17, 3009.

கிரேக்கர்கள் கில்லாடிகள்

ஜோனதன் செய்ட்ஸ் தொடர்ந்து பேசுகையில், “கிரேக்கர்கள் இது போன்ற விஷயங்களில் கில்லாடிகளாக இருந்தனர். எது எப்போது நிகழும் என்ற ஆருடம் மட்டும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அது ஏன் நிகழ்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அரிஸ்டாடில் போன்றவர்கள் எப்போது என்பதைப் போலவே ஏன் என்ற கேள்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே விரும்பினார்கள். அவர்களால் தான் பூமி கோள வடிவம் என்று உலகமே உணர்ந்தது. தரவு சேகரித்தல், நுட்பங்களைத் துல்லியமாக வரையனை செய்தல் போன்றவற்றை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக செய்து காட்டியுள்ளனர். ஊசிதுளை கேமராக்கள் பயன்படுத்தி சூரிய கிரகணத்தின் அளவு எவ்வளவு, அதன் தன்மை எப்படி என்றெல்லாம் குறிப்பு எடுத்துள்ளனர்.

தற்கால முறை

1700களில் வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி ஒருமுறை ஒரு நாளேட்டில், அடுத்து வரப்போகும் கிரகணம் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த நேரத்தில் எப்படியெல்லாம் தெரியும் என்பது குறித்து படங்கள் வரைந்து விளக்கினார். சூரியன் திடீரென மறைந்து போகும் போது, சாமானியர்கள் பீதி அடைவதைத் தடுக்க இதைச் செய்தார். இதைத் தாண்டி கிரகணங்களைக் கணிக்கும் தற்கால முறை 19ஆம் நூற்றாண்டில் அமலுக்கு வந்தது. இது குறித்து நாசாவில் காட்சிப்படுத்தல் நிபுணராக இருக்கும் எர்னி ரைட் விளக்கினார்.

“பள்ளிகளில் சந்திரன், சூரியன் என்றால் வட்டமாக இருக்கும் என்று படங்கள் பார்த்திருப்போம். ஆனால், பூமியில் இருப்பது போலவே சந்திரனிலும் மலை முகடுகள் இருக்கிறது, பெரும் பள்ளங்கள் இருக்கிறது. எனவே அதன் வடிவம் ஒரு முழு வட்டம் என்று கூறி விட முடியாது. இதனால் கிரகணத்தின் போது சூரியனில் விழும் நிழலும் நீள் வட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னர் காலத்தை கணித்தவர்கள் எல்லோரும் சூரியனையும், சந்திரனையும் ஒரு வட்டமான பொருளாகவும், பூமியில் இருந்து கிரகணத்தை பார்க்கப் போகும் மக்கள் அனைவரும் கடல் மட்டத்தில் இருந்தே பார்ப்பதாகவும் கணக்கில் எடுத்துக் கொண்டனர். சாதாரணமாகப் பேப்பர் மட்டும் வைத்துக் கொண்டு கணக்குப் போடும் போது இப்படி தான் செய்ய முடியும். ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் இவ்வாறான கணிப்புகளை மேலும் துல்லியம் ஆக்கியுள்ளது.”

சென்ற முறை அமெரிக்காவில் நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் வடிவம், பூமியின் நிலவியல் மற்றும் சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவற்றின் நிலைப்பாடுகள் குறித்து எண்ணற்ற தகவல்களை ரைட் திரட்டினார். இதன் மூலம், அமெரிக்காவில் எங்கிருந்து எங்கு வரை கிரகணம் தெரியும், எப்படித் தெரியும், எந்த வழியில் அது அமெரிக்காவைக் கடக்கும் என்றெல்லாம் செய்முறையோடு தன் காணொளியில் விளக்கினார். சந்திரனின் நிழல் பூமியில் எந்த வேகத்தில் பயணிக்கும் என்பது வரை அறிவியலால் கணிக்க முடிந்தது. அவர் கூறியது போலவே தான் அன்று அனைத்தும் நடந்தது. அது தான் அமெரிக்காவில் அதிகம் பேர் பார்த்த சந்திர கிரகணமாகவும் அமைந்தது. இந்த முறை நிகழ விருக்கும் சூரிய கிரகணத்தை விளக்கியும் இதே போல் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். 21-ம் தேதி நிச்சயம் இப்படி தான் கிரகணம் நிகழப் போகிறது.

 

 

இன்று நவீன அறிவியல் நாம் இவ்வளவு வளர்ச்சி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம் அன்று நம் முன்னோர்கள் எடுத்து வைத்த குறிப்பு தான். விதையை அவர்களே போட்டார்கள். பின்னால் வந்தவர்கள் பல மதம், இனம், மூட நம்பிக்கைகள் என்று பல போராட்டங்களுக்குப் பிறகு, தண்ணீர் ஊற்றி அந்தச் செடியை பேணிக் காத்தார்கள். அதனால் உருவான மரத்தின் நிழலில் நாம் இன்று இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் தலைமுறையின் உழைப்பு, அவர்களின் உதவி இல்லாமல் இன்று இங்கே நாம் இல்லை!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்