வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (20/08/2017)

கடைசி தொடர்பு:15:41 (20/08/2017)

நான் நினைத்தாலே ஆட்சியைக் கலைக்க முடியும், அணிகள் இணைப்பு பற்றி தங்க தமிழ்செல்வன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரண்டாகப் பிரிந்த அ.தி.மு.க. அடுத்தடுத்த நகர்வுகளின் காரணமாக, மூன்று அணிகளாக இயங்கத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, டி.டி.வி. தினகரனை ஓரங்கட்டிவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியையும் இணைப்பதற்கான முயற்சிகள் தொடங்கின. ஆனால், இருதரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்படாததால் அணிகள் இணைப்பில் இழுபறி நீடிக்கிறது.

தனித்து விடப்பட்ட டி.டி.வி. தினகரன் தரப்போ, கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம், மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தி பரபரப்பைக் கூட்டியது. இதனால் அதிர்ந்துபோன எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அணிகள் இணைப்பில் மீண்டும் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரு அணிகளும் இணைந்துவிடும் என்று எண்ணியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அணிகள் இணைவது தள்ளிப்போயுள்ளது. இந்த இழுபறி நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்படும் ஏராளமான கோரிக்கைளே காரணம் என்று சொல்லப்படுகிறது. அ.தி.மு.க அரசியல் களம் இப்படி சென்றுகொண்டிருக்கும் நிலையில், "அணிகள் இணைந்தால் டி.டி.வி. தினகரன் தரப்பினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?" என்று அவரின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

"அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? இதில் டி.டி.வி தினகரனின் நிலைப்பாடு என்ன?"  

இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியமே கிடையாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. 'மாவட்டச் செயலாளர் பதவியில் ஆரம்பித்து அமைச்சர் பதவிவரை முக்கியப் பொறுப்புகள் வேண்டும்' என பன்னீர்செல்வம் தரப்பு அழுத்தம் தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் தேனி மாவட்டச் செயலாளராக உள்ள என்னை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றனர். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..?

"தினகரன் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார் என்று கூறப்படுகிறதே? அதற்கு வாய்ப்பு உள்ளதா?"  

"ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் நினைக்கத் தேவையில்லை. நான் நினைத்தாலே இந்த ஆட்சியைக் கவிழ்த்து விடுவேன்".

"எடப்பாடி அணியில் 'ஸ்லீப்பர்செல்ஸ்' இருக்கிறார்கள் என்று தினகரன் சொல்லி இருக்கிறாரே, அது உண்மை எனில், அவர்கள் யார், யார்?"

"தினகரனின் ஆதரவாளர்கள் எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் தங்களைக் காட்டிக்கொள்ளவில்லை. எனவே, தினகரன் ஆதரவாளர்கள் அந்த அணியில் இருப்பது உண்மைதான்".

தினகரன்

"தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படுகிறதா?"

"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையை பொறுத்தே அது அமையும்".

"எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிகள் இணைப்புக்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருப்பதை, தினகரன் தரப்பு எப்படிப் பார்க்கிறது?"

"ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றபோது, என்னுடைய மாவட்டத்துக்காரர் என்ற அடிப்படையில் நான் அவருடன் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் நின்று, பன்னீர்செல்வத்தை எதிர்த்தேன். தற்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கு தேவை என்றால் இணைந்து கொள்வார்கள். தேவையில்லை என்றால், பிரிந்து செல்வார்கள். இவர்கள் எதைச்செய்தாலும், நாங்கள் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இது எந்தவகையில் நியாயம்?".

"ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன்அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன?"

"மறைந்த முதல்வரின் மரணத்தை விசாரிக்க கமிஷன் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கதுதான்.அப்போதுதான், இந்த விவகாரத்தில் சின்னம்மா மீது விழுந்துள்ள குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமாகும். அதனால், விசாரணை கமிஷன் அவசியமானதுதான்".

ஓ பன்னீர்செல்வம்

"அணிகள் இணையும்பட்சத்தில், டி.டி.வி. தினகரனின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

"எந்த நடவடிக்கையும் தற்போதைக்கு இல்லை.தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே ஏற்பாடு செய்து வருகிறோம். ஆட்சி நிர்வாகம் மட்டுமே, அவர்கள் கையில் உள்ளது. கட்சியை நாங்கள் பலப்படுத்த உள்ளோம். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமன்றி, அ.தி.மு.க தலைமை அலுவலகம் செல்வது போன்ற நடவடிக்கைளையும் தீவிரப்படுத்த உள்ளோம்".  

"அணிகள் இணைப்பு விவகாரத்தில் பி.ஜே.பி-யின் தலையீடு இருப்பதாக  சொல்லப்படுகிறதே?"

"முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இதுவரை பிரதமர் மோடியை 30 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். பிரதமரை இத்தனைமுறை சந்தித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன? ஒரு மாநில கட்சியின் உள்விவகாரத்தில் மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி தலையிடுவது ஏன்? 

எங்கள் கட்சியில் இருப்பவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். பிறகு சேர்ந்து கொள்வார்கள். அது,எங்களுடைய கட்சியைப் பொறுத்தது. அதில் பி.ஜே.பி ஏன் தலையிட வேண்டும்? 'தமிழகத்திற்கு அமித் ஷா வருவதற்கு முன்பாக அணிகளை இணைத்து விடுங்கள்' என்று அறிவுரை சொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அ.தி.மு.க-வில் நிகழ்ந்து வரும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பி.ஜே.பி.தான் காரணம்".


டிரெண்டிங் @ விகடன்