Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழம்பும் நீர்யானை... கோபமடையும் புறா... சூரிய கிரகணத்தால் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!

“இன்னைக்கு சூரிய கிரகணம்டா, எங்க வெளிய போற? பேசாம வீட்ல உக்காரு!” என்று வெற்றிலைப் பாக்கை இடித்துக்கொண்டே பாட்டி நம்மை நிச்சயம் திட்டியிருப்பார்.

சூரிய கிரகணம்

“சூரிய கிரகணத்தைக் கறுப்புக் கண்ணாடி போட்டுட்டுதான் பாக்கணும்டா. எங்கப்பா சொன்னார். நியூஸ்ல சொன்னாங்களாமா” என்றெல்லாம் நண்பர்கள் பலர் அறிவுரை கூறியிருப்பார்கள். மனிதர்களுக்கே இப்படியெல்லாம் ஆபத்து வரும் என்ற அச்சம் இருக்கும்போது, சூரிய கிரகணத்தின்போது மிருகங்கள் மற்றும் பறவைகள் என்னென்ன பாடுபடும்? பெரிய மிருகங்கள் முதல்... சிறிய பூச்சிகள் வரை அனைத்தும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன.

 

நீர்யானைகள்

நீர்யானைகள்

2001-ல் ஜிம்பாப்வே நாட்டில் அந்த மதிய வேளையில், சந்திரன் சூரியனை மறைக்கத் தொடங்கியபோது, அதற்குள் அந்தி நேரம் வந்து விட்டது என்று தங்கள் மாலை நேர நடைப்பயணத்தைத் தொடங்கின நீர்யானைகள். சிறிது நேரத்திலேயே முழுவதுமாய் மறைத்தபோது, அதற்குள் இருட்டிவிட்டதா என்ன என்று குழம்பித்தான் போயின நீர்யானைகள். பயத்தில் அந்த இருண்ட மணி நேரங்களை ஸாம்பீஸி ஆற்றுக்குள் மூழ்கியவாறே அவை கழித்தன. அதன் பிறகு அடுத்த நாள், தங்கள் இயல்பு வாழ்க்கை மற்றும் வழக்கமான பழக்கவழக்கங்களுக்கு திரும்ப வர மிகவும் சிரமப்பட்டன. வானியலாளர் பவுல் மூர்டின் தன் குழுவுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தபோது இந்த உண்மையைக் கண்டறிந்தார்.

பூச்சிகள்

பூச்சிகள்

1932-ல் நியூ இங்கிலாந்து தேசத்தில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்த போது, பாஸ்டன் சொசைட்டி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி இதனால் இயற்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிய ஒரு ஆராய்ச்சிக் குழுவை நியமித்தது. அதன் முடிவில், கிரகணம் நிகழும் போது சுவர்க் கோழிகள் வழக்கத்திற்கு அதிகமாக ஒலி ஏற்படுத்தத் தொடங்கின. இதற்கு நேர்மாறாக சில் வண்டுகள் அமைதியாகவே இருந்தன. வழக்கமாக ஏற்படுத்தும் ஒலியைக் கூட கேட்க முடியவில்லை.

2001-ல் வானியலாளர் பவுல் மூர்டின் ஆராய்ச்சிப்படி, கொசுக்கள் மற்றும் கொசு இனப் பூச்சிகள் அனைத்தும் கிரகணம் என்ற ஒன்றை மதிக்கவே இல்லை. இரவு தான் வந்துவிட்டதென வழக்கம் போல், இரத்த வேட்டையாடக் கிளம்பின. நேர்மாறாக, தேனீகள் சற்று தட்டு தடுமாறித் தான் போயின. அவை பொதுவாகப் பகலில் தான் தேன் சேகரிக்கப் பறந்து போகும். அன்று பகல் வேளை குறைவு என்பதால் செய்வதறியாது தவித்தன.

பறவைகள்

புறாக்கள்

பறவைகள் சூரிய கிரகணத்தின் போது என்னவெல்லாம் செய்யும் என்று கிட்டத்தட்ட 16-ம் நூற்றாண்டில் இருந்தே ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பெரும்பாலான பறவை இனங்கள் அமைதி காக்கவே விரும்புகின்றன. புறாவினங்களில் வெள்ளை புறாக்கள் மட்டும் திடீர் இருட்டைக் கண்டு பெருங்கோபம் அடைகின்றன. இரவில் எப்போதும் செயல்படும் ஆந்தைகள் கூட செயலிழந்து போயின.

கோழிகள் மிகவும் வெகுளிகளாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுகின்றன. கிரகணத்தின் போது கோழியின் செயல்கள் குறித்து தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று உண்டு. சூரிய கிரகணத்திற்கு முன்பாக அந்தக் காலை நேரத்தில், 20, 30 கோழிகள் தங்கும் கோழிக்கூடு ஒன்று காலியாக இருப்பதைப் பார்த்தார். கோழிகள் தான் இல்லையே இங்கிருந்து நாம் சூரிய கிரகணத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்யலாம் என்று தன் தொலைநோக்கியை அங்கே வைத்து ஜன்னல் வழியே சூரிய கிரகணம் எப்போது ஆரம்பிக்கும் என்று பார்க்கத் தொடங்கினார். கிரகணம் தொடங்கிய சில நிமிடங்களில் இருள் சூழ, வெளியே போயிருந்த அனைத்துக் கோழிகளும் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டன. வந்தும் அடங்காமல் அங்கிருந்த எடிசன் மற்றும் அவரது தொலைநோக்கியை ஒரு வழி படுத்திவிட்டன.

வௌவால்கள்

வௌவால்கள்

வௌவால்கள் பொதுவாக பகலில் மரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும். இரவில் சுதந்திரமாக சுற்றும். மிசூரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மெக்சிகோவில் இருக்கும் பிரபல ஆராய்ச்சியாளர்கள் தான் வௌவால்களின் செயல்பாடுகள் குறித்து பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தியவர்கள். கிரகணத்தின் போது, பெரும்பாலான வௌவால் இனங்கள் கட்டுப்பாடின்றி சுற்றத் தொடங்கும். காட்டேரி வௌவால்கள் மட்டும், இது இரவு அல்ல வேறு ஏதோ ஒன்று என்பதை உணர்ந்ததைப் போல, மரங்களை விட்டு வெளியே வரவே இல்லை. அந்த இருள் சிறிது நேரமே நீடிக்கும் என்பதால், கிளம்பலாம் என்று வௌவால்கள் முடிவு எடுப்பதற்குள் வெளிச்சம் பரவியிருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த வருட ஆராய்ச்சி

இன்று அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம். பல்வேறு மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ‘ஃபீல்ட் டே’ என்பார்கள். அமெரிக்காவின் பல இடங்களில் ஆராய்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இது வரலாற்றில் மிக முக்கியமான சூரிய கிரகணம் என்பதால், பல்வேறு உண்மைகள் இந்த ஆராய்ச்சிகளின் போது வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ