Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“யாருக்கும் வெட்கமில்லை...!”- சாமானியன் பார்வையில் தமிழக அரசியல் #ADMKMerger

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

த்தாலிய ராஜதந்திரி நிக்கோலோ மாக்கியவெல்லி, “அரசியலுக்கும் தார்மீக மாண்புகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை” என்பார். அதை மணிக்கொரு முறை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். 

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது” - 18 நாள்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் உதிர்த்த முத்து இது. அவரே இதற்கு எதிராகப் போராட்டமும் அறிவித்தார். “ஊழல், நீட், தண்ணீர் தட்டுப்பாடு என ஆட்சி செயலற்றதாக இருக்கிறது. இந்த அரசுக்கு எதிராகப் போராட்டம் நடக்கும்” என்று அறமொழுகப் பேசினார். அவர் சுட்டிக்காட்டிய தண்ணீர் பிரச்னை தீர்ந்து தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் உயர்ந்துவிட்டதா, அரியலூர் அனிதாவின் மருத்துவக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்த ‘நீட்’ சிக்கல் தீர்ந்துவிட்டதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஊழல் கறைகள் வெளுத்துவிட்டதா ஊழல் அமைச்சர்கள் எல்லோரும் புனித ஆன்மாக்களாக மாறிவிட்டனரா...? அவருக்கே வெளிச்சம்! ‘என் மனதிலிருந்த பாரம் இன்றோடு அகன்றுவிட்டது’ என்று கூச்சமே இல்லாமல், ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்.
யாருடைய கரங்களை ஊழல் படிந்த கரங்கள் என்றாரோ, அந்த அணியின் கரங்களை இறுகப்பற்றி  ‘நாங்கள் இணைந்துவிட்டோம்’ என்கிறார். யாருடைய ஆட்சி செயலற்றதாக இருக்கிறது என்றாரோ அந்த ஆட்சியில் தனக்கான பங்கையும் உறுதிப்படுத்திவிட்டுச் சிரிக்கிறார். 

“நீங்கள் மட்டும் எப்படி தனியாக ஊழல் செய்யலாம்...? இதோ... நாங்களும் வருகிறோம்” என்று ஆட்சியில், பன்னீர்செல்வம் துண்டுப் போட்டிருப்பதாகத்தான் சாமானியன் நம்புகிறான்.  ஆம்... அவனுக்கு இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து, ‘ச்சீ...’ என்றாகிவிட்டது. 
  
“என்ன சொல்ல வருகிறீர்கள்....? சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து கட்சியை, ஆட்சியை மீட்கத் துடிப்பது தவறு என்கிறீர்களா...? காலம் முழுவதும் கட்சி மன்னார்குடி குடும்பத்தின் ஆளுகையின் கீழ் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறீர்களா...?” இல்லை. நிச்சயம் இல்லை. உண்மையில் இந்தக் கட்சியை சசிகலா குடும்பத்திலிருந்து மீட்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியிருந்தார்கள் என்றால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே அதைச் செய்திருக்க வேண்டும். இதே பன்னீர்செல்வம், அப்போது எம்.ஜி.ஆர் சமாதியில் அமர்ந்துகொண்டு, “அ.தி.மு.க தொண்டர்களின் இதய தெய்வம் மருத்துவமனையில், சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். தங்கத் தாரகைக்கு என்ன ஆனது என்று எங்களுக்குத் தெரியவில்லை...” என்று மக்களைச் சந்தித்துப் பேசி நியாயம் கேட்டிருந்தார் என்றால், அப்போதே ஜெயலலிதாவையும் கட்சியையும் மீட்டிருக்கலாம். அவர் மீதும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அப்போது ஜெயலலிதாவைவிட முதல்வர் பதவி முக்கியமாக இருந்தது. கட்சியைவிட ஆட்சி முதன்மையாக இருந்தது. அதிகாரம் கைவிட்டுப் போகும்போது மட்டும் அறம் பேசுபவர்களை எப்படி நம்புவது....?

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ஓர் அரசியல் கட்சிக்குப் பாதையும்  சித்தாந்தம்தான். எரிபொருளும் சித்தாந்தம்தான். தத்துவங்களால்தான் ஒரு கட்சி இயக்கப்பட வேண்டுமே அன்றி, ஒரு குடும்பத்தாலோ, தனிமனிதர்களாலோ அல்ல. ஆனால், அ.தி.மு.க தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அந்தக் கட்சி தனிமனிதர்களை நம்பித்தான் இருந்திருக்கிறது. தத்துவங்கள் இல்லை என்றாலும் அந்தக் கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர் ஈகைப் பண்புடன் இருந்தார். வள்ளல் தன்மையினால்தான் இன்றும் நினைவு கூறப்படுகிறார்.  அவரின் அந்தப் பண்பால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தேன் என்று சொல்லும் பன்னீர்செல்வத்துக்கு அந்தப் பண்பு சிறிதளவேனும் இருக்கிறதா.....?  ஒற்றைக் கிணற்றைப் பெறுவதற்கே இரண்டு மாதம் போராட வேண்டியிருந்தது. அந்த கிணறு அவரின் சுயநலத்தின், குறுகிய மனப்பான்மையின் குறியீடு. இந்தப் பின்புலத்தில் கட்சியை, ஆட்சியைக் கைப்பற்றப் பன்னீர்செல்வம் துடித்ததைப் புரிந்துகொள்வோமாயின், ‘தர்ம யுத்தம்’ என்ற பதத்தின் பின்னால் யாருடைய நலன் இருந்தது என்று தெளிவாகப் புரியும்...? 

தியானத்தில், ‘விபாஸனா’ என்ற ஒரு வகை உண்டு. பாலி மொழி சொல்லான இந்த வார்த்தைக்குப் பொருள் ‘உள்நோக்கிப் பார்ப்பது’. அதாவது ஆழமாகப் பார்ப்பது. தியானப் பிரியரான பன்னீர்செல்வம் விபாஸனா தியானத்தை முறையாகப் பயிற்சிசெய்து, இப்போது நடக்கும் அரசியல் களேபரங்களை உள்நோக்கிப் பார்த்திருந்தார் என்றால், அழுக்கு அரசியலிலிருந்து புறப்படும் முடைநாற்றம் அவருக்கு மூச்சுத் திணறலை உண்டாக்கியிருக்கும். 

சசிகலா பன்னீர்செல்வம் பழனிசாமி

பன்னீர்செல்வமே பரவாயில்லை என்பதுபோல இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு. ‘யார் தன் ஆட்சியை ஊழல் ஆட்சி என்றாரோ...?' எந்த வெட்கமும் இல்லாமல் அவரின் கைகளை இறுகக் குலுக்கிச் சிரிக்கிறார். சிரிப்பு உற்சாகம் ஊட்டக்கூடியதுதான். ஆனால், அந்தச் சிரிப்பு சாமானியனுக்கு அருவருப்பைத்தான் தருகிறது. ஆட்சியை, அதிகாரத்தைத் தற்காத்துக்கொள்ள எதுவும் செய்யலாம் என்று நம்பும் ஒருவர் ஆள்வது அபாயகரமானது. அது என்றுமே மக்களுக்கான ஆட்சியாக இருக்காது. வரலாறு நெடுகிலும் இதற்கானப் பாடங்கள் இருக்கின்றன. அப்படியான அபாயம்தான் இன்று தமிழகத்தை முற்றுகையிட்டிருக்கிறது. எடப்பாடிக்கு தற்போது தன் ஆட்சியைத் தற்காத்துக்கொள்ள மக்கள் தேவையில்லை என்று நம்புகிறார். 'ராஜதந்திரமான சில காய் நகர்த்தலே போதும்' என்று நினைக்கிறார். அதனால்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள யாரையோ திருப்தி செய்ய திருமுருகன், வளர்மதி மீதெல்லாம் குண்டாஸ் சட்டம் ஏவுகிறது. 'தந்திரங்களால் மட்டுமே ஆள முடியும்' என்று நம்புபவர், நாளை மக்களுக்கு எதிராக எந்த எல்லைக்கும் செல்லமாட்டார் என்பது என்ன நிச்சயம்...? 

அமெரிக்க நகைச்சுவை நடிகர் மற்றும் பத்தி எழுத்தாளர் வில் ரோகர்ஸ், “நான் நகைச்சுவையாக எழுதுவதற்காகவெல்லாம் அதிகம் சிரமப்பட மாட்டேன். அரசையும், அரசியல்வாதிகளையும் கவனிப்பேன். அதை அப்படியே பதிவு செய்வேன்” என்பார். ஆனால், இப்போது இங்கு நடப்பதை அப்படியே பதிவு செய்தால் என்ன ஆகும்...? நாளைய தலைமுறை தம்மை நொந்துகொள்ளும்; நம்மைக் குறித்து வெட்கம் கொள்ளும். 

ஹூம்... யாருக்கும் வெட்கமில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement