சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில், இந்தக் கல்லூரியில் படிக்கும் இரண்டு தரப்பு மாணவிகளுக்கு இடையே நேற்று கல்லூரி வளாகத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி முடிந்து மாணவிகள் வீட்டுக்குச் செல்ல லட்சுமி கோயில் பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே கல்லூரியில் வாய்த்தகராறு ஏற்பட்டிருந்த நிலையில், அது பேருந்து நிலையத்திலும் தொடர்ந்திருக்கிறது. ஒருகட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியிருக்கிறது. பேருந்து நிலையத்திலேயே இரண்டு தரப்பு மாணவிகளும் ஒருவரையொருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த மாணவிகள் சிலர் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு குடுமிப்பிடி சண்டை போட்டனர். அதையடுத்து அங்கிருந்த சகமாணவிகள் சண்டையிட்டவர்களைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருந்தபோதிலும், சண்டை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அந்த இடத்துக்கு காவல்துறையினர் வருவதை அறிந்த மாணவிகள், அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். சாலையில் மாணவிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சண்டையில் ஈடுபட்ட 10 மாணவிகளைக் கல்லூரி முதல்வர் சுடர்கொடி 10 நாள்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சண்டை தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் மேலும் சில மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெற்றோர்களிடையேயும், கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.