Published:Updated:

மனைவியுடனான தகராறில் விபரீத முடிவெடுத்த கணவன்! - 10 மாதக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

குழந்தை
குழந்தை

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில், கணவன் மனைவி இடையேயான சண்டையில், 10 மாதக் குழந்தையை தந்தையே கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

`தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம்!' - மத்திய அரசு அனுமதி
 #NowAtVikatan

போடி ஜமீன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கும் கோடாங்கிபட்டி தென்றல் நகரைச் சேர்ந்த அழகுமணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, இருவருக்கும் கபிலன் (வயது 4) என்ற மகனும், காவ்யா என்ற 10 மாதக் குழந்தையும் உள்ளனர். கணவன் வேலைக்குச் செல்லாமல் மனைவியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

கிணற்றில் வீசப்பட்ட குழந்தை
கிணற்றில் வீசப்பட்ட குழந்தை

ஒரு கட்டத்தில், அழகுமணி, இரண்டு நாள்களுக்கு முன்னர், கோடாங்கிபட்டியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த பன்னீர்செல்வம், இன்று மனைவியின் வீட்டுக்குச் சென்று சண்டை போட்டுள்ளார். தகாத வார்த்தைகளால் அழகுமணியை திட்டியவர், குழந்தைகளை `கொலை செய்துவிடுவேன்’ எனக் கூறி, காவ்யாவைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், பதற்றமடைந்த அழகுமணி, உடனடியாக பி.சி.பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்றார். அப்போது, பன்னீர்செல்வமும் காவல்நிலையம் வந்துள்ளார். அங்கே அழகுமணி இருப்பதைக் கண்ட பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

`இடுக்கியில் கொரோனா கண்காணிப்பில் 54 பேர்..!' - அச்சத்தில் தேனி மக்கள் #corona

அழகுமணியிடம் போலீஸார் புகார் பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், கோடாங்கிபட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் கிணற்றில் குழந்தை ஒன்று இறந்து மிதந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் மீட்டனர். அப்போது அது அழகுமணியின் குழந்தை காவ்யா எனத் தெரியவந்தது. இதையடுத்து, பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்த பி.சி.பட்டி காவல்துறையினர், அவரைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். கணவன் - மனைவி இடையேயான சண்டையில், பெற்ற மகளைத் தந்தையே கிணற்றில் வீசிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு