Published:Updated:

நகை பறிப்பு; ஜாலி வாழ்க்கை; பணம் தீர்ந்ததும் மீண்டும் திருட்டு! - போலீஸாரிடம் சிக்கிய 10 பேர்

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்ட 10 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கடந்த மாதம் 29 - ம் தேதி கீதா என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். மறுநாள் 30 - ம் தேதி நாமக்கல்லில் சரோஜா என்பவரிடம் 8 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதோடு, மாவட்டம் முழுக்க தொடர்ச்சியாக நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

நாமக்கல்
நாமக்கல்
திண்டுக்கல்:`கவரிங் நகை பறிப்பு’- பைக்கில் தப்பிய இளைஞர்கள்; வைரல் வீடியோவைக்கொண்டு தேடும் தனிப்படை

இதனால், நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், சுரேஷ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், வேலுத்தேவன், சந்திரகுமார், பாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீஸார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நகை பறிப்பு சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து 3 நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணித்த போலீஸார், அவர்களின் செல்போன் எண்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், சென்னையை சேர்ந்த தினேஷ்குமார் என்கிற 'சம்பவம்' தினேஷ்குமார் (31), உத்தரமேரூரை சேர்ந்த சசிகுமார் (22), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (22) ஆகியோர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால், அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தினர். போலீஸாரின் தீவிர விசாரணையில், அவர்கள் மூவரும் சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், திண்டிவனம், கும்பகோணம், சின்னசேலம், செஞ்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், கரூர், புதுச்சேரி என 20 இடங்களில் பெண்களிடம் இப்படி நகைகளை பறித்து சென்றது தெரிந்தது. மேலும், பெண்களிடம் இப்படி பறிக்கும் நகைகளை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ததோடு, சிலவற்றை உருக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை வைத்து ஜாலியாக விருப்பம்போல் வாழ்வார்களாம்.

கைது
கைது

பின்னர், அந்த பணம் தீர்ந்ததும், மறுபடியும் நகைகளை திருட இந்த கும்பல் ஆரம்பித்துவிடுமாம். அந்த கும்பல் அளித்த தகவலின்பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்கத்தை பறிமுதல் போலீஸார் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அருள், செல்வம், முருகேசன், மணி, சதீஷ், செல்லம்மாள், மதுரைவீரன் ஆகிய 7 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட 20 இடங்களிலும் உள்ள பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு