Published:Updated:

ம.பி: காலை 11 மணி; 10 லட்சம்! - 30 விநாடியில் வங்கிக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

பணம்
பணம் ( மாதிரிப்படம் )

கேஷியர் இல்லாத நேரத்தில் அவருடைய அறைக்குள் அந்தச் சிறுவன் நுழைந்து ரூ.500 கட்டுகளாக இருந்த பணத்தை கைகளால் பைக்குள் எடுத்துப்போட்டு எந்தவித சந்தேகமும் எழாத வண்ணம் வங்கியிலிருந்து வெளியேறிச் செல்கிறான்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீமுச் எனும் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஜவாத் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கி ஒன்று வழக்கம்போல காலை 11 மணியளவில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த வங்கிக்குள் நுழைந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் வங்கியின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட யாருடைய கண்ணிலும் படாமல் ரூபாய் 10 லட்சத்தை திருடிக்கொண்டு சாதாரணமாக வெளியேறிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

திருட்டு
திருட்டு
மாதிரி படம்

வீடியோவில், வங்கிக்குள் கந்தல் ஆடை அணிந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நுழைகிறான். வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தங்களுடைய பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். மிகவும் சிறிய உருவத்தைக் கொண்டிருப்பதால் யாருடைய பார்வையிலும் அந்தச் சிறுவன் படவில்லை என்றே தெரிகிறது. கேஷியர் இல்லாத நேரத்தில் அவருடைய அறைக்குள் அந்தச் சிறுவன் நுழைந்து ரூ.500 கட்டுகளாக இருந்த பணத்தை கைகளால் பைக்குள் எடுத்துப்போட்டு எந்தவித சந்தேகமும் எழாத வண்ணம் வங்கியிலிருந்து வெளியேறிச் செல்கிறான். இவ்வளவு விஷயங்களையும் அந்தச் சிறுவன் சுமார் அரை நிமிடங்கள் அதாவது 30 விநாடிகளில் செய்து முடிக்கிறான். இந்தச் சம்பவம் கடந்த 14-ம் தேதி நடந்துள்ளது.

பணத்தை எடுத்துக்கொண்டு சிறுவன் வெளியேறும்போது அலாரம் சவுண்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிறுவன் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளான். இதனால், அதிர்ச்சியடைந்த வங்கியின் காவலர் அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கியுள்ளார். எனினும், அவனைப் பிடிக்க முடியவில்லை. வங்கி ஊழியர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். வங்கிக்கு வந்த காவலர்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் இந்தச் சிறுவனை வழிநடத்தியதாக வீடியோவின் அடிப்படையில் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

`கஞ்சா, கந்துவட்டியோடு மணல் திருட்டு!' -பட்டுக்கோட்டை டிஎஸ்பி -யின் பல்ஸ் பார்க்கும் மாமூல் போலீஸ்

வங்கியில் சுமார் 30 நிமிடங்கள் அந்த இளைஞர் காத்திருந்ததாகவும் கேஷியர் தனது அறையை விட்டு வெளியே சென்றதும் வெளியில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு தகவல் கொடுத்து பணத்தை எடுத்து வர கூறியதாகவும் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் சாலையோரங்களில் கடைகளை நடத்தி வருபவர்களிடம் காவலர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் பின்னால் ஒரு கும்பல் இருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். திருடுவதற்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சிறுமிகள் உள்ளிட்ட குழந்தைகளை அந்தக் கும்பல் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

பணம்
பணம்

திருட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு 10 முதல் 14 வயது இருக்கும் என்றும் இந்தக் குழந்தைகள் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவலர்களிடம் சிக்கிக் கொண்டால், குழந்தைகள் கும்பலில் உள்ள நபர்கள் குறித்த விபரங்களை வெளியிட மாட்டார்கள் என்பதாலும் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்பதாலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு குழந்தைகளை அவர்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

``சிறுவன் மிகவும் குட்டையாக இருந்ததால், அங்கிருந்த நபர்கள் அவனைப் பார்க்கவில்லை. இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறோம்” என நிமூச் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ராஜ் தெரிவித்துள்ளார். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவையே விஞ்சும் அளவுக்கு திட்டமிட்டு குழந்தைகளைப் பயன்படுத்தி நடந்துள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

`70 மாட்டு வண்டிகள்; நேரடி நெல் கொள்முதல் நிலையம்!' - தஞ்சையில் நூதன மணல் திருட்டு
அடுத்த கட்டுரைக்கு