Published:Updated:

சர்க்கரை ஆலையில் ரூ.100 கோடி ஊழல்: சரத் பவார் கட்சியின் மாஜி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

ஹசன் முஸ்‌ரீஃப்

ரூ.100 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹசன் முஸ்‌ரீஃப் வீடு, அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்திவருகிறது.

சர்க்கரை ஆலையில் ரூ.100 கோடி ஊழல்: சரத் பவார் கட்சியின் மாஜி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

ரூ.100 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹசன் முஸ்‌ரீஃப் வீடு, அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்திவருகிறது.

Published:Updated:
ஹசன் முஸ்‌ரீஃப்

2019-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களைக் குறிவைத்து அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்திவருகிறது. ஏற்கெனவே சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஒரு வருடம் சிறையில் இருந்துவிட்டு, இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறார். மற்றொரு முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத்தும் கைதுசெய்யப்பட்டு, சில மாதங்கள் சிறையில் இருந்துவிட்டுத்தான் வெளியில் வந்திருக்கிறார்.

சரத் பவார் - ஹசன் முஸ்‌ரீஃப்
சரத் பவார் - ஹசன் முஸ்‌ரீஃப்

அதோடு உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் பரப் உட்பட சிலர்மீது இன்னும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலையிலேயே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புனே, கோலாப்பூரில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஹசன் முஸ்‌ரீஃப் (Hasan Mushrif) வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடத்திவருகின்றனர். அப்பாசாஹேப் நலவாடே சர்க்கரை ஆலையில் நடந்த ரூ.100 கோடி ஊழல் தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுவருவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து பேட்டியளித்த அந்தக் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே, ``நாட்டில் அமலாக்கப் பிரிவு நடத்தும் ரெய்டுகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிராவிலும் அதைத்தான் பார்க்கிறோம். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தங்களது அரசு `இ.டி சர்கார்' என்று சொல்லியிருக்கிறார். முஸ்‌ரீஃப் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முஸ்‌ரீஃப் முழு ஒத்துழைப்பு கொடுப்பார். அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைப்பதற்கு பதில், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தலாம். இதன் மூலம் மாநில மக்கள் பயனடைவதோடு அரசை வாழ்த்துவார்கள்'' என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரீத் சோமையா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஹசன் முஸ்‌ரீஃப் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். `கோலாப்பூரிலுள்ள சர்க்கரை ஆலையைச் சட்டவிரோதமாக முஸ்‌ரீஃப் தனியார் நிறுவனத்தின் மூலம் தன்வசப்படுத்திக்கொண்டார்' என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மகேஷ், ``முன்பு சில பா.ஜ.க தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஹசன் முஸ்‌ரீஃப் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர். அதில் எந்தவித உண்மையும் இல்லை. அனில் தேஷ்முக், சஞ்சய் ராவத்தைப்போல் ஹசன் முஸ்‌ரீஃப் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் அப்பாவி என்பது நீதித்துறையின் மூலம் தெரியவரும்'' என்று தெரிவித்தார்.