Published:Updated:

மாயமான கோயில் கலசம்; தப்பிய ஐம்பொன் சிலை! -நள்ளிரவுக் கொள்ளையால் கலங்கிய கரூர்

திருடுபோன கலசம்
திருடுபோன கலசம்

'அப்பாடா, அம்மன் சிலை திருடு போகலை' என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட பூசாரிகளின் நிம்மதி சற்று நேரத்திலேயே மறைந்துபோனது.

கரூர் நகரில் அமைந்திருக்கும், 100 ஆண்டுகள் பழைமையான கோயில் கேட்டுகளின் பூட்டை உடைத்ததோடு, கோயில் கோபுரக் கலசம் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.

ஸ்ரீ வலங்கியம்மன் கோயில்
ஸ்ரீ வலங்கியம்மன் கோயில்

கரூர் நகரில் உள்ள ரயில்வே நிலையம் அருகே அமைந்திருக்கிறது, ஸ்ரீ வலங்கியம்மன் திருக்கோயில். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்தக் கோயில், கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான கோயில்களில் ஒன்று. வலங்கியம்மன் மிகவும் சக்தியுள்ள கடவுள் என்று பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலில் தினமும் மூன்றுகால பூஜைகள் நடப்பது வழக்கம். அப்போது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்களாம்.

உடைக்கப்பட்ட கோயில் பூட்டு!

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் வருவது முற்றிலும் குறைந்துபோனது. பூசாரிகள் மட்டும் அவ்வப்போது வந்து, கோயிலைப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். அதன்படி, இந்தக் கோயில் பூசாரிகள் கோயிலில் வந்து பார்த்தபோது, அதிர்ந்துபோனார்கள். காரணம், ஸ்ரீ வலங்கியம்மன் கோயிலின் வாசலில் உள்ள கிரில் கேட்டுகளில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைந்து தொங்கியிருக்கிறது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன பூசாரிகள், கோயிலின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள்.

உடைக்கப்பட்ட கோயில் கிரில் கேட் பூட்டு
உடைக்கப்பட்ட கோயில் கிரில் கேட் பூட்டு

ஸ்ரீ வலங்கியம்மன் சிலை அமைந்திருக்கும் கருவறை கதவை மர்ம நபர்கள் உடைக்க முயன்று, முடியாமல் விட்டுவிட்டுப் போயிருப்பது தெரிந்தது. `அப்பாடா, அம்மன் சிலை திருடு போகலை' என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட பூசாரிகளின் நிம்மதி சற்று நேரத்திலேயே மறைந்துபோனது.

காரணம், கோயில் கோபுரத்தில் இருக்க வேண்டிய மூன்று கலசங்களில், நடுவில் உள்ள கலசம் மட்டும் மாயமாக மறைந்திருந்தது. அதைத் திருடர்கள் பெயர்த்து எடுத்துக் கொண்டு போயிருப்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பூசாரிகள், ஸ்ரீமாரியம்மன் கோயில் நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் மூலமாக, கரூர் நகர காவல் நிலையத்தில், கலசம் திருடு போனது குறித்து புகாரும் கொடுக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கரூர் நகர காவல் நிலைய போலீஸார், கலசத்தை திருடிச் சென்ற திருடர்களைத் தேடி வருகிறார்கள்.

Vikatan

இது குறித்து, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், ``ஸ்ரீ வலங்கியம்மன் கோயில் 100 ஆண்டுகளுக்குமேல் பழைமையானது. மிகவும் சக்தியுள்ள கடவுள் இது. பக்தர்களின் வேண்டுதல் உடனே நிறைவேறும். எங்க பகுதிக்கு காவல் தெய்வமா இருந்த இந்தக் கோயிலில், இதற்கு முன்பு இப்படி திருட்டுச் சம்பவங்கள் நடந்ததில்லை. தினமும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இரவும் காவலுக்கு ஆள் இருப்பார்கள். இந்தக் கொரோனா ஊரடங்கால், அது குறைந்து போனது. இதைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் கலசத்தை திருடிச் சென்றிருக்கிறார்கள். கோயில் வெளி கேட் பூட்டை உடைத்து உள்ளே போனவர்களால், அம்மன் ஐம்பொன் சிலை இருக்கும் கருவறை கதவுகளின் பூட்டை உடைக்க முடியவில்லை.

ஸ்ரீ வலங்கியம்மன் கோயில்
ஸ்ரீ வலங்கியம்மன் கோயில்

இதனால், அம்மன் சிலை தப்பித்தது. ஆனால், 15 வருஷத்துக்கு முன்பு குடமுழுக்கு விழாவின்போது வைத்த கலசத்தில் ஒன்றை திருடிச் சென்றிருக்கிறார்கள். `பழைமையான கோயில் கலசங்களில் இரிடியம் இருக்கும்' என்று சதுரங்க வேட்டை குரூப்புகள், கலச வியாபாரத்தில் இறங்கியுள்ளன. அதற்காக, நோட்டமிட்டு, திட்டம் போட்டு கலசத்தைத் திருடியிருக்கிறார்கள். இதனால், அம்மன் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறோம். அம்மன் கோபத்தால், இந்தப் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமோனு பயமாயிருக்கு. அதனால், காவல்துறை திருடுபோன ஸ்ரீ வலங்கியம்மன் கோயில் கலசத்தை உடனே கண்டுபிடிக்கணும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு