அரசியல்
Published:Updated:

1000 ஆபாச போட்டோக்கள்... அலறும் பெண் இன்ஜினீயர் குடும்பம்!

அலறும் பெண் இன்ஜினீயர் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
அலறும் பெண் இன்ஜினீயர் குடும்பம்

விரக்தியான ஒரு மனநிலையில், தன் முன்னாள் காதல் பற்றி வேலை செய்யும் ஒருவரிடம் லதா பகிர்ந்துகொண்டதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.

‘‘உன்னோட அந்தரங்க போட்டோஸ், வீடியோஸ்லாம் என்கிட்ட இருக்கு. இனிமே நான் சொல்றதத்தான் நீ கேக்கணும்...” என்று பெண் இன்ஜினீயர் ஒருவரை மிரட்டி, தன்னுடைய பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறான் அவரிடமே பணிபுரிந்த ஒரு பட்டதாரி இளைஞன். இந்த விஷயத்தில் ரௌடிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கட்டப் பஞ்சாயத்து பார்ட்டிகளாக நுழைந்து பணம் கறக்கப் பார்க்க, பதறிப்போயிருக்கிறது அந்தப் பெண் இன்ஜினீயரின் குடும்பம். உச்சகட்டமாக, ‘‘உன் மனைவியைத் துரத்திவிடு... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!’’ என்று அந்தப் பெண்ணின் கணவரை அரசியல் பிரமுகர் ஒருவர் மிரட்டும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபமெடுக்க, விவகாரம் இப்போது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையப் படியேறியிருக்கிறது.

“இன்ஜினீயரிங் முடித்து, சென்னையில் தன் கணவருடன் இன்ஷூரன்ஸ் சர்வீஸ் அலுவலகம் நடத்திவருகிறார் லதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சினிமா பிரபலங்கள் உட்பட நிறைய பேர் இவரது நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள். தன் காதல் கணவரும், இரண்டு குழந்தைகளுமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார் லதா. 2015-ல் தன் நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவாகப் பணிக்குச் சேர்ந்த காட்டுப்பாக்கம் ரத்தினக்குமார், தன் வாழ்வில் கொடும் புயலை ஏற்படுத்துவான் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அலுவலகத்தில் ஒருநாள், லதாவும் அவரின் கணவரும் சத்தமாகக் குடும்பப் பிரச்னையைப் பேசிச் சண்டைபோட்டிருக்கி றார்கள். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி, லதாவிடம் பேசிப் பேசி ‘நட்பை’ வளர்த்திருக்கிறான் ரத்தினக்குமார். ஒரு சமயம் பேச்சுவாக்கில் லதா, ரத்தினக்குமாரிடம் தன் கல்லூரிக் காதலன் வினய் கல்யாண் என்பவனைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார். சில பர்சனல் விஷயங்களையெல்லாம் கேட்டுக்கொண்ட ரத்தினக்குமார், நாளாக நாளாகத் தன் வில்லன் முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்.

ரத்தினக்குமார்
ரத்தினக்குமார்

வேலைக்குச் சேர்ந்த ஒரு வருடம் கழித்து... கொஞ்சம் கொஞ்சமாகப் பாலியல் டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறான் ரத்தினக்குமார். கண்டுகொள்ளாத லதாவை வாட்ஸ்அப்பில் ஆபாசமாகப் பேச ஆரம்பித்திருக்கிறான். இரண்டொரு முறை எச்சரித்தும் திருந்தாத ரத்தினக்குமாரை, வேலையைவிட்டு விலகச் சொல்லியிருக்கிறார் லதா. ‘அதெல்லாம் முடியாது. உன் முன்னாள் காதல் பற்றி உன் கணவனிடம் சொல்வேன்’ என்று பதிலுக்கு மிரட்டியிருக்கிறான் ரத்தினக்குமார். அந்தச் சமயத்தில் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்ததால், கல்லூரிக் காதலால் மீண்டும் பிரச்னை பெரிதாகும் என்று அமைதி காத்திருக்கிறார் லதா. அவரது இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி மிரட்டி, நிர்வாணப் படங்கள் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பச் சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்கிறான் ரத்தினக்குமார்.”

இந்த விவரங்களையெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்ட பெண் இன்ஜினீயர் லதாவின் வழக்கறிஞர் முகமது யாசினிடம் மேலும் பேசினோம்.

‘‘விரக்தியான ஒரு மனநிலையில், தன் முன்னாள் காதல் பற்றி வேலை செய்யும் ஒருவரிடம் லதா பகிர்ந்துகொண்டதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். ஒவ்வொரு போட்டோவாக லதாவிடம் வாட்ஸ்அப்பில் வாங்கிய ரத்தினக்குமார், அனைத்தையும் இ-மெயிலில் சேர்த்து வைத்திருக்கிறான். அதை கணவரிடம் காட்டுவதாக மிரட்டி, லதாவைப் பாலியல்ரீதியாகவும் நெருங்கியிருக்கிறான். அதையும் வீடியோவாக எடுத்துவைத்து மேலும் மிரட்டியிருக்கிறான். அந்த மிரட்டலுக்கு பயந்துபோன லதாவும் ரத்தினக்குமாரின் கைப்பாவையாக மாறியிருக்கிறார்.

1000 ஆபாச போட்டோக்கள்... அலறும் பெண் இன்ஜினீயர் குடும்பம்!

இந்தச் சமயத்தில் ரத்தினக்குமார், லதாவின் முன்னாள் காதலனான பெங்களூரைச் சேர்ந்த வினய்யை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறான். அவருடனும் லதாவை நெருக்கமாக இருக்கச் சொல்லி, அதையும் வீடியோவாக எடுத்துவைத்திருக்கிறான். அதன் பிறகு, ‘இதையெல்லாம் உன் கணவனிடம் சொல்லிவிடுவேன்’ என்று மேலும் சிலருடனும் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியிருக்கிறான். அதிர்ச்சியடைந்த லதா, நடந்த சம்பவங்களைக் கணவரிடம் கூறி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

கணவரிடம் லதா சரணடைந்த விஷயத்தை அறிந்த ரத்தினக்குமார், ரௌடி ஒருவனிடம் லதா சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களைக் கொடுத்திருக்கிறான். அந்த ரௌடி, லதாவின் கணவருக்கு போன் செய்து ஒரு பொது இடத்துக்கு அழைத்திருக்கிறான். அவர் அங்கே சென்றபோது ரௌடியுடன் ரத்தினக்குமாரும் இருக்க, ‘ஒரு பெரிய தொகை கொடுத்தால் பிரச்னையை முடித்துக் கொள்ளலாம்’ என்று கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறான் அந்த ரௌடி.

விஷயம் விஸ்வரூபமெடுப்பதை அறிந்த லதாவின் கணவர், 30.8.2020 அன்று லதாவையும் அழைத்துக்கொண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றிருக்கிறார். மொத்த விஷயங்களையும் கூறி ரத்தினக்குமார் மீது புகாரளித்திருக்கிறார். ரத்தினக்குமாரை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, காவல் நிலையத்திலேயே மன்னிப்புக் கேட்டிருக்கிறான். ஆனால், வெளியே சென்றதும் லதாவின் கணவரைப் பணம் கேட்டு மீண்டும் மிரட்டத் தொடங்கியிருக்கிறான்.

இதற்கடுத்து, ரத்தினக்குமார் மீது எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யக் கோரி லதா தரப்பில் என் மூலம் நீதிமன்றத்தை நாடினார்கள். மனுவை விசாரித்த சென்னை மகிளா நீதிமன்றம், `ரத்தினக்குமார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. ரத்தினக்குமார் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், முன்ஜாமீன் கிடைக்க வில்லை. ரத்தினக்குமாருக்குச் சாதகமாக போலீஸார் நடந்து கொள்கிறார்கள். ரத்தினக்குமாரைப் பிடித்து விசாரித்தால், லதாவைப்போல இன்னும் சில பெண்கள், அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் வெளியாக வாய்ப்பிருக்கிறது. கட்சி சார்ந்த சிலரும் ரத்தினக்குமாருக்கு அடைக்கலம் கொடுப்பதால், அவன்மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டுகிறார்கள்” என்றார் வழக்கறிஞர் யாசின்.

முகமது யாசின்
முகமது யாசின்

லதாவின் கணவரிடம் பேசினோம். ``மதுரையைச் சேர்ந்த ரத்தினக்குமாரை 15,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்தோம். குடும்பத்தில் ஒருவராகப் பழகி எனக்கு துரோகம் செய்துவிட்டார். ஏப்ரல் 2020 வரை சம்பளம் கொடுத்திருக்கிறேன். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட ஈகோவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எங்கள் குடும்ப வாழ்க்கையில் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். இரண்டரை மாதங்களுக்கு முன்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், என்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவரின் செல்போனிலும் என் மனைவியின் சில போட்டோக்கள் இருந்தன. அதைக் காட்டிய அவர், ‘உன் மனைவி அழகாக இருக்கிறாள். இவ்வளவு நடந்த பிறகு அவளுடன் ஏன் குடும்பம் நடத்துகிறாய்... வீட்டைவிட்டுத் துரத்திவிடு, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றார். அந்தச் சமயத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் எனும் அளவுக்கு மனரீதியாகத் துன்பப்பட்டேன். அந்தக் கும்பலிடமிருந்து நாங்கள் தப்பியதே தனிக்கதை.

திருமங்கலம் போலீஸார், நாங்கள் கொடுத்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறார்கள்.ரத்தினக்குமாரின் செல்போனிலும் லேப்டாப்பிலும் என் மனைவி உட்பட இன்னும் பல பெண்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்கள் இருக்கின்றன. அவை சமூக வலைதளங்களில் வெளியாவதற்கு முன்னர் ரத்தினக்குமாரின் செல்போன், லேப்டாப்பை போலீஸார் பறிமுதல் செய்ய வேண்டும். ரத்தினக்குமார் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன்’’ என்றவர், ‘‘இந்தப் பிரச்னையால் என் மனைவி வீட்டோடு முடங்கிவிட்டார். குழந்தைகளைக்கூட விளையாட வெளியில் அனுப்ப பயமாக இருக்கிறது’’ என்றார் தழுதழுத்த குரலில்.

திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரியிடம் பேசினோம். ‘`கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தப் பெண்ணுக்கும் ரத்தினக்குமாருக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ரத்தினக்குமார் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து தேடிவருகிறோம். ரத்தினக்குமாரிடம் விசாரித்தால்தான் நடந்தவை முழுமையாகத் தெரியவரும்” என்றார்.

‘‘பெண் தரப்பில் போலீஸார்மீது குற்றம் சாட்டுகிறார்களே...” என்று கேட்டதற்கு, ‘‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.

ஒரு குடும்பத்தைக் கொடுமையாகச் சிதைத்து விட்டு, சுதந்திரமாக ஒருவன் நடமாடிக்கொண்டிருக் கிறான் என்பதை எப்படிச் சகித்துக்கொள்வது... ‘ஐந்து ஆண்டுகளாக அவர்களுக்குள் பழக்கமிருக் கிறது’ என்கிறார் காவல்துறை ஆய்வாளர். சந்தர்ப்பச் சூழலில் உருவாகிவிடும் உறவைப் பலவீனப்படுத்தி, கொச்சைப்படுத்தி, ஒருவரின் அந்தரங்கத்தை ‘விலை’பேசுவது, மிரட்டித் துன்புறுத்துவதை எல்லாம் நியாயப்படுத்துகிறதா போலீஸ்?