Published:Updated:

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

Published:Updated:
புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

மிழக போலீஸ் அதிகாரிகள் மத்தியில் மூன்று விஷயங்கள் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. ஒன்று, புது டி.ஜி.பி-யான அசோக்குமாரின் நியமன உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ள வார்த்தைகள். இரண்டாவது, 'அட்வைஸர்’ என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பதவியில் ஓராண்டு காலம் நியமிக்கப்பட்ட ராமானுஜத்தைப் பற்றியது. மூன்றாவது, சீனியர் டி.ஜி.பி-யான அனூப் ஜெய்ஸ்வால், என்ன காரணத்தாலோ 'கிராஸ் பெல்ட்’ அணியாமல் விழாவுக்கு வந்திருந்தது.

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

 முதல் விஷயம்...

ஹரியானாவை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக்குமார். 1982-ம் வருட தமிழக கேடர் அதிகாரி. அவரை புது டி.ஜி.பி-யாக நியமித்து வெளியிடப்பட்ட அரசாணையில், 'தி ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ்' என்கிற ஒரு வார்த்தையும் இருந்தது. அதைப் பார்த்த சீனியர் போலீஸ் அதிகாரிகள் மிரண்டனர். அவர்கள் நம்மிடம் கூறும்போது, ''மாநிலங்களில் போலீஸ் தலைமைப் பதவியில் நியமிக்கப்படுகிறவர்கள், இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள அசோக்குமார் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க ஏதுவாக தமிழக அரசின் ஆணையில் வார்த்தைகள் இருப்பதாகக் கருதுகிறோம். ஆனால், மத்திய அரசோ, 'எந்த போலீஸ் அதிகாரிக்கு சர்வீஸ் முடிய இரண்டு ஆண்டுகள் இருக்கிறதோ... அவரை மட்டுமே மாநில போலீஸ் தலைமைப் பதவியில் நியமிக்கவேண்டும். அதை விட்டு, ஆளும் கட்சிக்கு விருப்பமானவர்களை, அவர்கள் ஓய்வுபெறுவதற்கு முந்தைய நாள் அன்று, திட்டமிட்டு தலைமைப் பதவியில் உட்காரவைத்து, அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு அதே பதவியில் நீடிக்க வைப்பது சரியல்ல. இப்படிச் செய்வதால், ஜூனியர்கள் மிகவும் சோர்ந்து போவார்கள்' என்று சொல்லிவருகிறது. இதை நாங்களும் வரவேற்கிறோம்'' என்றனர்.

அசோக்குமாருக்கு இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது. ஆனால், இந்த உத்தரவின் வார்த்தைகள்படி, அவர் இரண்டு ஆண்டுகள் தொடரவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்.

அசோக்குமார், டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ளவர்களில் ஜூனியர். இவருக்கு முன்பு அர்ச்சனா ராமசுந்தரம், அனூப் ஜெய்ஸ்வால், முத்துக்கருப்பன், சேகர் ஆகிய நால்வர் உள்ளனர். இவர்களில் அர்ச்சனா தற்போது சஸ்பெண்டில் இருக்கிறார். முத்துக்கருப்பனுக்கு வாய்ப்பு இல்லை. லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அனூப் ஜெய்ஸ்வால், அல்லது ஓய்வுபெற ஒண்ணரை ஆண்டுகாலம் உள்ள சேகர் ஆகிய இருவரில் ஒருவர் தலைமைப் பதவியில் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அசோக்குமாரை திடீரென தலைமைப் பதவியில் அரசு அமர்த்தியது. இவர், இரண்டு ஆண்டுகள் தலைமைப்  பதவியில் நீடித்தால் முத்துக்கருப்பன், அனூப் ஜெய்ஸ்வால், சேகர் மூவருமே ஓய்வுபெற்று விடுவார்கள். அவர்களின் தமிழக காவல் துறையின் தலைமைப் பதவிக் கனவு தகர்ந்துபோகும்.

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

''தலைமைப் பதவியில் யாரை நியமிப்பது என்கிற விஷயத்தில், மாநில அரசுக்கு 'சுப்ரீம் பவர்’ இருப்பதாக வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், ராமானுஜம் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதமே ஓய்வுபெற்றுவிட்டார். பிறகு இரண்டு வருடங்கள் பதவி நீட்டிப்பு தரப்பட்டது. அது கடந்த 4-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இந்த நீட்டிப்பு காரணமாக நரேந்திரபால் சிங் உள்ளிட்ட சிலருக்கு வாய்ப்பு பறிபோனது. அடுத்து இனி வரப்போகும் இரண்டு ஆண்டுகளுக்கு அசோக்குமார் ஒருவேளை இருந்தால், மேலும் சிலருக்கு பாதிப்பு. சாதாரண டி.ஜி.பி-யாக தமிழகத்தில் ஓய்வுபெறுவதை விட, மத்திய அரசுப் பணிக்கு மாறிப்போனால் கௌரவமாக இருக்கும்'' என்று விழாவுக்கு வந்திருந்த ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், இன்னொரு அதிகாரியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரண்டாவது விஷயம்...

'டி.ஜி.பி. அந்தஸ்தில் சலுகைகள்’ என்று 'ஆலோசகர்’ ராமானுஜத்துக்கான அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலோ என்னவோ, டி.ஜி.பி. அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள ஓர் அறையை அவருக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். அசோக்குமாருக்கு மேல் 'சூப்பர் டி.ஜி.பி’-யாக ராமானுஜம் செயல்படுவார் என்பதைத்தான் இது காட்டுகிறது என்றே போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில பேச்சு.  டி.ஜி.பி அந்தஸ்திலான இந்த நியமனத்துக்கு முறைப்படி மத்திய அரசிடம் அனுமதி வாங்கப்பட்டதா என்று தெரியவில்லை.

மூன்றாவது விஷயம்...

சீனியர் டி.ஜி.பி-யான அனூப் ஜெய்ஸ்வால், ராமானுஜத்தின் பிரிவு உபசார விழாவுக்கு யூனிபார்மில் வந்தாலும், கிராஸ் பெல்ட் அணியவில்லை. அவரைத்தான் தலைமைப் பதவியில் அரசு  நியமித்திருக்க வேண்டும். அதைச் செய்ய அரசு தவறியதால், தனது வருத்தத்தை 'சாத்வீக’ முறையில் பதிவு செய்திருக்கிறார் என்றே போலீஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள். ''சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அதிகாரியாக இருப்பதால், டிரஸ் கோட் அவருக்குத் தேவையில்லை. சீனியர் என்பதால் அவர் சுதந்திரமாகச் செயல்படலாம். அந்தவகையில்தான், கிராஸ் பெல்ட் அணியவில்லை'' என்கிறார், ஜெய்ஸ்வாலுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர்.

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

எது எப்படியோ.. ராமானுஜத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்துதான், தமிழகக் காவல் துறையின் செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியவரும்.

- கனிஷ்கா

படங்கள்: சு.குமரேசன், வீ.நாகமணி

’கலகல’ விழா!

புது டி.ஜி.பி.. புகைச்சல்கள்!

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-யாக இரண்டு ஆண்டுகள் பதவி நீடிப்பில் இருந்த கே.ராமானுஜம் ஓய்வு பெற்றதை அடுத்து, அவருக்கான பிரிவு உபசார விழா சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. முறைப்படி டிரஸ் கோடில் அனைத்துப் போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொள்ள வேண்டுமென காவல் துறை மேலிடம் தகவல் அனுப்பியிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள ஏராளமான உயர் போலீஸ் அதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டனர். டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு மட்டும் மேடையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதில், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கும் ஒரு ஸீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஐ.பி-யின் இணை இயக்குநர் ரவிச்சந்திரனும் விழாவுக்கு வந்திருந்தார். ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யும் அ.தி.மு.க-வின் உறுப்பினருமான அலெக்சாண்டர் தன் பேரக்குழந்தைகளோடு விழாவுக்கு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஓய்வுபெற்ற டிஜி.பி லத்திகாசரண் உள்ளிட்ட 'முன்னாள்’ அதிகாரிகள் தங்களது 'ஃப்ளாஷ்பேக்’ நினைவுகளை ராமானுஜத்துடன் பகிர்ந்து கொண்டனர். தென்மண்டல ஐஜி-யாக இருந்தபோது பல சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தவரும் தற்போது, தமிழ்நாடு காவல் துறையின் சமூகநீதிப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யாக இருப்பவருமான ராஜேஷ்தாஸ், தன் சக அதிகாரிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார். ஜாலியான போலீஸ் பேர்வலாக அது இருந்தது.