Published:Updated:

’நீங்க சரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?’

’அடங்காத’ மாணவர்களுக்கு அதிகப்படியான தண்டனை?!

''நான், வகுப்புல ரெக்கார்டு எழுதிட்டு இருந்தேன். உன்னைப் பார்க்க போலீஸ் வந்திருக்காங்கன்னு திலகம் டீச்சர் சொன்னாங்க. வகுப்புக்கு வெளியே நிற்கவெச்சு எல்லா ஸ்டூடண்ட்ஸ் முன்னாடியும் இன்ஸ்பெக்டர் என்னை அடிச்சாரு. எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு. அப்புறம், மதியம் 3 மணிக்கு எஸ்.ஐ வந்தார். என்னோட சேர்த்து அஞ்சு மாணவர்களை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாரு. போலீஸ்காரங்க எங்களை அடிச்சாங்க. அடி தாங்க முடியாம ஒரு பையன் மயங்கி விழுந்தான். அவன் மேல தண்ணீரை ஊத்தி அடிச்சாங்க. ராத்திரிதான் எங்களை வீட்டுக்கு அனுப்புனாங்க. மறுநாள் காலையில எங்க வீட்டுக்கு எஸ்.ஐ வந்தாரு. மறுபடியும் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாரு. ராத்திரி வரைக்கும் ஸ்டேஷன்ல வெச்சு அடிச்சாங்க. மூணாவது நாள் ஸ்கூலுக்குப் போனோம். அப்போ, எங்க ஹெட்மாஸ்டர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செஞ்சு, மீண்டும் எங்களை ஸ்டேஷனுக்கே அனுப்பிட்டாரு. ராத்திரி மட்டும் வீட்டுக்கு அனுப்புவாங்க. இப்படியே பல நாட்கள் எங்களை ஸ்டேஷன்ல வெச்சு அடிச்சாங்க. அடிக்கு பயந்து, அவங்க சொன்ன இடத்துல கையெழுத்துப் போட்டோம். ஸ்கூல்ல இருந்து எங்களுக்கு டி.சி-யை கொடுத்து அனுப்பிட்டாங்க...'' என்று கண்ணீருடன் விவரித்தார் ஒரு மாணவர்.

’நீங்க சரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?’

 என்னாச்சு... யார் இந்த மாணவர்கள்?

காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஐந்து பேர், டி.சி கொடுத்து பள்ளியைவிட்டு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த மாணவர்.

பள்ளியை விட்டு நீக்கப்பட்ட மாணவர்கள் ஐந்து பேரையும் சந்தித்தோம். சம்பந்தப்பட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பெயர்களைத் தவிர்த்துள்ளோம். 'கடந்த அக்டோபர் மாதம் 15-ம்தேதி, எங்க வகுப்புல ஒரு மாணவி கொண்டு வந்த மதிய சாப்பாட்டை, அவருக்குத் தெரியாம யாரோ சாப்பிட்டு இருக்காங்க.  இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, அந்த மாணவியோட அப்பா நேரா ஸ்கூலுக்கு வந்து ஹெட்மாஸ்டர்கிட்ட 'நீங்க சரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா’ன்னு சத்தம் போட்டிருக்காரு. அதுல ஹெட்மாஸ்டர் கோபமாயிட்டாரு. அந்த சாப்பாட்டை நாங்கதான் சாப்பிட்டதா யாரோ சொல்லியிருக்காங்க. உடனே, ஹெட்மாஸ்டர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன்ல புகார் செஞ்சிருக்கார். போலீஸ்காரங்க வந்து எங்களை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப்போய் அடிச்சாங்க... நாங்க யாரும் அந்தப் பொண்ணோட சாப்பாட்டை சாப்பிடவே இல்லை, இது உண்மை சார்'' என்று உறுதியாகச் சொல்கிறார்கள் அந்த மாணவர்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிசங்கரிடம் பேசினோம். 'இந்த மாணவர்கள் வகுப்புக்கு சரியாக வருவதில்லை. கடந்த ஜூலையில் இவர்களின் தொந்தரவு தாங்கமுடியாமல் ஒரு மாணவி பள்ளியைவிட்டே நின்றுவிட்டார். மாணவிகளை கிண்டல் செய்ததால், அவர்களைக் கண்டிக்கும் விதத்தில் 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்தோம். ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை. குடித்துவிட்டு வந்து வகுப்பில் வாந்தி எடுப்பார்கள். தங்களைக் கண்டித்த ஆசிரியை ஒருவர் பேருந்தில் செல்லும்போது, அவரைத் தரக்குறைவான வார்த்தைகளால் கேலி செய்துள்ளனர். 1 படிக்கும் ஒரு மாணவியைத் தங்கள் நண்பன் காதலிப்பதாகவும், நீயும் அவனை காதலிக்க வேண்டும் என்று மாணவியின் காலில் விழுந்து தொந்தரவு செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டு கிண்டல் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் சாதிய மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்குத் தகவலை அனுப்பி, அதன் பேரில் இந்த ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்தோம். கடைசியில், வேறு வழியில்லாமல் காவல் துறையில் புகார் செய்ய வேண்டியதாகிவிட்டது'' என்றார். 

சூணாம்பேடு இன்ஸ்பெக்டர் கண்ணனை சந்தித்தோம். 'மாணவிகளைக் கிண்டல் செய்வது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் இந்த மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தலைமை ஆசிரியரிடம் இருந்து எங்களுக்குப் புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர்களை ஸ்டேஷனுக்குக் கூட்டி வந்து விசாரித்தோம்.  இனி அவர்கள் பள்ளி மாணவர்கள் கிடையாது. அடுத்தகட்டமாக அவர்களைக் கைதுசெய்ய இருக்கிறோம்' என அதிர்ச்சியைக் கிளப்பினார். 

சூணாம்பேடு ஊர் மக்கள் நம்மிடம், ''பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது டி.சி. கொடுத்து அனுப்பினால் அந்த மாணவர்களின் எதிர்காலம் மொத்தமாகப் போய்விடும். அதனால், அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்துப் பேசி, மாணவர்களைக் கண்டித்து மறுபடியும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களது வாழ்க்கையே பாழாய் போய்விடும்'' என்று கவலையுடன் சொல்கிறார்கள்!

- பா.ஜெயவேல்