Published:Updated:

பாடத்திட்டத்தை மாற்றுவதில் ஏன் தாமதம்?

- எம்.கார்த்திபடங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

''ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கான பாடத்திட்டம், கடந்த 7 ஆண்டுகளாக மாற்றப்படாமலே இருக்கிறது. நவீன, விஞ்ஞான காலத்துக்கு ஏற்றதாகவோ, மாணவர்கள் சிந்தித்துத் தேர்வு எழுதும் வகையிலோ இல்லை. அரைத்த மாவையே அரைத்த கதையாக ஒரே பாடத்தை இரண்டு வருடங்களுக்குப் படிக்கும் அவல நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டுகிறார் பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பாடத்திட்டத்தை மாற்றுவதில் ஏன் தாமதம்?

 ஒன்றாம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்புக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது வழக்கம். அதுபோல் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் நாள்தோறும் விஞ்ஞானமும், தகவல் தொழில் நுட்பமும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட பாடங்களையே   ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரும் மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவே பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற குரல் ஒலித்தது.

அதையடுத்து, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு இணையாக ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 2015-2016-ம் கல்வி ஆண்டில் மாற்றி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்குக் கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உட்பட எல்லா பாடங்களுக்கும் புதிய பாடங்கள் உருவாக்கப்பட்டன. அவை, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறுதி வரைவுப் பாடத்திட்டங்களும் தயாரிக்கப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஆனாலும், புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

பாடத்திட்டத்தை மாற்றுவதில் ஏன் தாமதம்?

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் மணிவாசகத்திடம் பேசினோம். ''மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையில்தான் தற்போதுள்ள பாடங்கள் உள்ளன. அண்மையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு தேர்வில் 47 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ப்ளஸ் டூ பாடத்திட்டம் தரமில்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று அண்ணா பல்கலைக்கழகம் விமர்சித்துள்ளது. தனியார் பள்ளிகளில் ப்ளஸ் ஒன் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படுவது இல்லை. ப்ளஸ் டூ பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஒரே பாடத்தை இரு ஆண்டுகளாகப் படிப்பதால், பொதுத்தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் முதலிடங்களைப் பிடிக்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் பாடங்களைத் தரம் உயர்த்துவோம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆசிரியர்கள் எல்லோரும் ஆவலாக இருந்தோம். ஆனால், புதிய இறுதி வரைவுப் பாடத்திட்டத்தைத் தயாரித்து விட்டு, அதைப் பாதியிலே கைவிட்டு விட்டனர். ஆறு மாதங்களுக்கு முன்பாகவே முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று அதற்கான அரசாணையை வெளியிட்டு, புத்தகங்களை அச்சடிக்கும் பணியைப் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபீதா தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதிகாரிகளோ, ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் போட்டுத் தருவதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் விஷயத்தில் பள்ளிக்கல்வித் துறை எவ்வளவு அலட்சியமாகச் செயல்படுகிறது என்பதற்கு இது உதாரணம்'' என்றார் மணிவாசகம்.

பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சபீதாவிடம் பேசினோம். ''ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வருவதாக அறிவித்தோம். இறுதி வரைவுப் பாடத்திட்டமும் தயாராகிவிட்டது. ஆனால், அதை அடுத்த ஆண்டு செயல்படுத்துவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்தால் உங்களுக்குச் சொல்கிறோம்'' என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனியுங்கள்!

பின் செல்ல