Published:Updated:

விஷ ஊசி போட்டு இரண்டு குழந்தைகளை கொலை செய்த தந்தை! - நடந்தது என்ன?

விஷ ஊசி போட்டு இரண்டு குழந்தைகளை கொலை செய்த தந்தை! - நடந்தது என்ன?
விஷ ஊசி போட்டு இரண்டு குழந்தைகளை கொலை செய்த தந்தை! - நடந்தது என்ன?

விஷ ஊசி போட்டு இரண்டு குழந்தைகளை கொலை செய்த தந்தை! - நடந்தது என்ன?

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த திங்கள்கிழமை (28-08-2017) தன் மகன், மகளுக்கு விஷ ஊசி போட்டு, தானும் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயன்றார் சந்திரசேகர் என்பவர். இந்த முயற்சியில் அவரின் இரு குழந்தைகளும் பலியாகி விட, அவர் உயிர் தப்பினார். இருப்பினும், தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சந்திரசேகரன். 

சாலிகிராமம் 'ஒய்.எஸ்.என்கிளேவ்' எனும் அடுக்குமாடி குடியிருப்பில் மகள் மீனாட்சி (வயது 9), மகன் ரிஷிகேஷ் (6) உடன் தனியாக வசித்து வந்தார் சந்திரசேகர் (42). இவர், கே.கே. நகரில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை உடற்பயிற்சிக்கூடம் வைத்து நடத்தி வந்துள்ளார். பின்னர், அதை மூடிவிட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்துள்ளார். ஜோதி என்பரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். வரதட்சணை கொடுமையால், கடந்த 2015-ம் ஆண்டு, ஜோதி  தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, மனைவி தற்கொலை வழக்கில் இவர் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்தார்.  அதன்பின்னர், சென்னை தியாகராய நகரில் உள்ள தன் அப்பா மற்றும் உறவினர்கள் யாருடனும் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் சாலிகிராமத்தில், இரு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தன் தந்தை மோகன்ராமுக்கு போன் செய்து, "நானும், என் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்" என்று சந்திரசேகர் கூறியுள்ளார். தன் நண்பர்களிடம் இவர், இதுபோன்று பலமுறை கூறிவந்ததால், அவரின் தந்தை சந்திரசேகரின் கூற்றைபெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். மறுநாள் திங்கள்கிழமை காலை அவரின் தந்தை அவருக்கு பலமுறை போன் செய்தும், எதிர்முனையில் யாரும் எடுக்காததால் சந்திரசேகர் தங்கிருந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார் மோகன்ராம். வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடக்கவே, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சந்திரசேகரின் தந்தை புகார் அளித்தார். பின்னர் காவல்துறையினர் சென்று வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்தபோது, இரண்டு குழந்தைகள் இறந்த நிலையிலும், சந்திரசேகர் உயிருக்குப் போராடியநிலையில் மூர்ச்சையாகியும் கிடந்துள்ளனர். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்திரசேகரை நேற்று, மேற்குமாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டரில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு குழந்தைகளையும் கொடூரமான முறையில் கொலைசெய்த சந்திரசேகர் பற்றி  விருகம்பாக்கம் காவல்நிலையம் சென்று விசாரித்தோம். "சந்திரசேகரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வீட்டைத் திறந்து பார்த்தபோது, இரண்டு குழந்தைகளுக்கும் விஷஊசி போடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். குழந்தைகளை சந்திரசேகர் விஷ ஊசி போட்டுக் கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அவர் உயிர் பிரியாமல் மயக்க நிலையில் இருந்தார். குழந்தைகளின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தோம். சந்திரசேகரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2015-ம் ஆண்டு அவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள், நண்பர்கள் என யாரிடமும் சந்திரசேகர் சரிவரப் பேசுவது கிடையாது. குழந்தைகளைத் தன்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று தந்தையிடம் ஏற்கெனவே சொல்லியுள்ளார். சந்திரசேகர் மீது குற்றவியல் சட்டம் 174-வது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர் கண்விழித்ததும், அவரிடம் விசாரணை நடத்திய பிறகே எதையும் தெரிவிக்க முடியும்" என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

சந்திரசேகரின் சகோதரி நம்மிடம் பேசியபோது, "என் தம்பிக்கும், எங்களுக்கும் சில காலமாகவே எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் அப்பாவிடம் மட்டும் அவ்வப்போது பேசுவான். இஞ்ஜினீயரிங் படிப்பு முடிச்சிருக்கான். உடற்பயிற்சிக்கூடம் ஏற்கெனவே வச்சிருந்தான். அவன் திருமணம்கூட காதல் திருமணம்தான். ஆனா, எல்லோரும் சொல்றமாதிரி, அவன் மனைவியை வரதட்சணை கொடுமையெல்லாம் பண்ணல. மனைவி மேல ரொம்ப பாசமா இருப்பான். ரியல் எஸ்டேட் பிசினஸ்ல அவனுக்கு ஏகப்பட்ட நெருக்கடி ஏற்பட்டது. இந்த நேரத்திலதான், திடீர்னு இப்படி ஒரு முடிவைத் தேடிக்கிட்டான். இதப்பத்தி அவனோட மாமனார் வீட்டுக்குத் தகவல் சொன்னோம். ஆனா, அவங்க யாருமே வரல. அப்படி அவன் என்னதான் பண்ணினான்னு எங்களுக்கு சத்தியமா தெரியல. தன்னோட பேரன், பேத்தியை கடைசியா ஒருமுறை பார்க்கக்கூட மாமனார் வீட்டுலேர்ந்து யாரும் வரல. அதனால நாங்களே எல்லா காரியத்தையும் முடிச்சுட்டோம்" என்று சொன்னார்.

இரண்டு குழந்தைகளையும் விஷ ஊசி போட்டுக் கொலைசெய்துள்ளார் சந்திரசேகர். அவரும் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் இந்தச் செயலின் பின்னணியில் நடந்தது என்ன என்பது பற்றி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர் கண்விழித்து, வாய்திறந்து பதில் சொன்னால் மட்டுமே, குழந்தைகள் கொலை, தற்கொலை முயற்சிக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வரும்.

அடுத்த கட்டுரைக்கு