Published:Updated:

"இங்க யாருடா பாஸ்கர்?”

பின்னி எடுத்தவரின் பின்னணி!

கனை கண்டித்த உடற்பயிற்சி ஆசிரியர் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தி, மீடியாக்களின் வெளிச்சத்துக்கு வந்துள்ளார் 'ரிச் இந்தியா’ அருளானந்து.

"இங்க யாருடா பாஸ்கர்?”

சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பவர் பாஸ்கர் ராஜ். கடந்த 20ம் தேதி திடீரென்று நான்கைந்து பேர் பள்ளிக்குள் நுழைந்து அவரை அடிக்க ஆரம்பித்தார்கள். நிலைகுலைந்து சரிந்தார் அந்த ஆசிரியர். ஒரு பள்ளிக்குள் வந்து ஆசிரியரை ஆள் வைத்துத் தாக்கும் அளவுக்கு துணிச்சல் எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. ஆனால் தைரியமாக நடந்தது அந்தச் சம்பவம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''காலையில ஸ்கூல்ல பிரேயர் முடிஞ்சதும் பாஸ்கர் சார் விசில் அடித்து மாணவர்களை ஒழுங்குப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது, அவரைக் கிண்டல் செய்யும் வகையில் ஒரு பையன் பாஸ்கர் சாரைப் பார்த்து விசில் அடிச்சான். அவன் 'ரிச் இந்தியா’ அருளானந்து மகன். அந்தப் பையனைக் கண்டித்து, தலைமையாசிரியரின் அறைக்குக் கூட்டிட்டுப் போனார் பாஸ்கர். தலைமை ஆசிரியர் அந்தப் பையனை அவங்க அப்பாவைக் கூட்டிட்டு வரச் சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டாரு. அடுத்த அரை மணிநேரத்துல, மூன்று பேர் ஸ்கூல் உள்ளே வந்தாங்க. 'இங்கே யாருடா பாஸ்கர்...’னு உள்ளே இருந்த பசங்கக்கிட்ட கேட்டு மிரட்டினாங்க. பசங்க பாஸ்கர் சாரைக் காட்டியதும், அவரை சரமாரியாகத் தாக்கினாங்க. அவரு உயிருக்கு பயந்து தாளாளர் அறைக்குள் ஓடினாரு. அதற்குள் இன்னும்் 30 பேர் வந்தனர். பாஸ்கரை இவர்கள் கூட்டமாக விரட்டினார்கள். எல்லோருமா சேர்ந்து அவரை அடிச்சு துவைச்சுட்டாங்க. வெறி அடங்காத கூட்டம் அறையிலிருந்த நாற்காலி, மேஜைகளையும் அடித்து நொறுக்கிட்டாங்க. லேடி டீச்சர்களைத் தரக்குறைவாகப் பேசி கேவலப்படுத்தினாங்க...' என்றார் பள்ளியின் ஊழியர் ஒருவர்.

"இங்க யாருடா பாஸ்கர்?”

ஆசிரியர் பாஸ்கரின் பின் மண்டை மற்றும் கைகளில் ரத்தம் கசிந்து, கன்னங்கள் வீங்கி சுயநினைவற்ற நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்த பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோடம்பாக்கத்தையே ஸ்தம்பிக்கச் செய்தனர். பெற்றோர்  ஆசிரியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து அருளானந்து, அவர் தம்பி செபஸ்டீன் உட்பட 35 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.

பள்ளியிலிருந்த சி.சி.டி.வி கேமராவில் ஆசிரியர் பாஸ்கர் மூர்க்கத்தனமாகத் தாக்கப்படும் சம்பவம் பதிவாகியிருக்கிறது. பள்ளி நிர்வாகத்தினர் அந்த வீடியோ பதிவை சிடியாக வெளியிட, அது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தினரையும் கொதிப்படைய வைத்துள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் பூபாலன், ''ஓர் ஆசிரியர் அவர் பணியை செய்வதில் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம். சிறிய பிரச்னைகளை கௌரவப் பிரச்னைகளாக்கி பெரிதுப்படுத்துவது அநாகரிகமானது. தாளாளரிடமோ, கல்வித் துறையிடமோ பெற்றோர் புகார் கொடுத்திருக்கலாம். அதைவிடுத்து ஆள்வைத்து அடிப்பதெல்லாம் தொழிலதிபருக்கு அழகா? அருளானந்துவை காவல் துறை விரைவில் கைது செய்யவில்லை என்றால், தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம்'' என்று எச்சரிக்கை விடுத்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பாஸ்கரைச் சந்திக்கச் சென்றோம். பாஸ்கர் பேசும் நிலையில் இல்லை. தள்ளாத வயதிலும் அருகிலிருந்து பாஸ்கரை கவனித்து வருகிறார் அவரது தாய் காந்தா. ''என்னோட மூணாவது புள்ள இது. கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வெச்சேன். ஃபுட் பால்னா அவ்வளவு உசுரு. கிடைக்க வேண்டிய அரசு வேலையும் கிடைக்காம போயிடுச்சு. பார்த்துப் பார்த்து வளர்த்த பையனை இப்படி எவன் எவனோ அடிச்சிட்டுப் போகவா பெத்துப் போட்டேன். என் புள்ள யாருக்கும் கெடுதல் பண்ணினது  இல்லை. இப்படிப் போட்டு அடிச்சிருக்கானுங்களே. அவனுங்களை சும்மாவிடக் கூடாது'' என்று கதறினார்.

"இங்க யாருடா பாஸ்கர்?”

முதல்கட்டமாக, ரிச் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 19 பேரை கைதுசெய்த போலீஸார் அடுத்தநாள் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 6 தலைமை அதிகாரிகளை கைது செய்திருக்கின்றனர். ஆனால், இதில் முக்கிய குற்றவாளிகளான அருளானந்து மற்றும் அவருடைய தம்பி செபஸ்டீன் ஆகிய இருவரும் மிஸ்ஸிங். அவர்களின் போன்கள் ஸ்விட்ச் ஆஃப். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி உட்பட எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது காவல் துறை.

''பள்ளிக்குக் கிளம்புறதுக்கு முன்னாடியே தம்பிக்கு ஜுரம் இருந்துச்சு. ஆசிரியர் அடிச்சதால ஜுரம் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்குற அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சு'' என்று காரணம் சொல்கிறது அருளானந்து தரப்பு.

வசதியானவர் என்பதால் வாத்தியாரை அடிக்கலாமா?

நா.இள.அறவாழி படங்கள்: தி.குமரகுருபன்

டீக்கடை டு 7 ஸ்டார் ரிசார்ட்!

அருளானந்துவின் பூர்வீகம் திருச்சி. 8ம் வகுப்பு வரை படித்தவர். உறவினரின் டீக்கடையில் முதலில் வேலைப் பார்த்துள்ளார். பிறகு, காங்கிரஸை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கேபிள் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். அதன்மூலம் அவருக்கு மக்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய அருளானந்து, பக்கபலமாக இருந்தவர்களை விட்டு மெல்ல விலகி தனி ஆவர்த்தனத்தில் இறங்கினார். கடந்த 2005ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் 'ரிச் இந்தியா’ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சியிலிருந்து சென்னைக்கு தனது இருப்பிடத்தை மாற்றிய அருளானந்து, கோடம்பாக்கத்தில் 'ரிச் இந்தியா’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமியையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் நீதிபதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் என முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்தது.

அவர்களுடன் எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படங்கள் அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து உள்ளன. ஓய்வு பெற்ற   டி.ஜி.பி,  அ.தி.மு.க பிரமுகர் மற்றும் நீதிபதி ஒருவரிடமும் அருளானந்து நெருங்கிய பழக்கம் உடையவர். அதைவைத்து பல காரியங்களை அவர் சாதித்து உள்ளதாக  சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர் வைத்திருக்கும் காரின் மதிப்பு மூன்றரை கோடி ரூபாய். திருச்சியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 7 ஸ்டார் ரிசார்ட் ஒன்றையும் கட்டிவருகிறார் அருளானந்து.

எஸ்.மகேஷ்