Published:Updated:

'வெள்ளை விதவை!’

சமந்தாவின் மரணத்தில் நீடிக்கும் சர்ச்சை!மா.அ.மோகன் பிரபாகரன்

மேற்கு உலக நாடுகளில் தேடப்படும் மோசமான பயங்கரவாதிகளில் ஒருவர் சமந்தா லூத்தெயிட். 30 வயதான இந்தப் பெண்மணி, நான்கு குழந்தைகளின் தாய். குண்டுவெடிப்பு ஒன்றில் கணவனைப் பறிகொடுத்தவர். அல்ஷபாப்  என்ற சோமாலியாவின் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக, ரஷ்ய வீரர் ஒருவரால் சமந்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவல் வெளியானது. அந்தத் தகவல் உண்மையல்ல என்று மறுப்பு வெளியானதால் சர்ச்சை நீடிக்கிறது.

'வெள்ளை விதவை!’

 சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்த சமந்தா, பயங்கரவாதியாக மாறிய கதை விறுவிறுப்பானது. அயர்லாந்தில் உள்ள பேன்பிரிட்ஜ் என்ற ஊரில் ஆண்ட்ரு  எலிசபெத் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் சமந்தா. பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட சமந்தா, ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார். மதக் கொள்கைகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்த நடந்த போராட்டத்தின்போது, ஜெரமைன் லிண்ட்சே என்பவரைச் சந்தித்து,

2002ல் திருமணம் செய்து கொண்டார்.

2005ல் லண்டனில் நடந்த 7/7 தாக்குதலில் மனித வெடிகுண்டாகச் செயல்பட்டு 26 பேரை கொன்றவர் லிண்ட்சே. 'லண்டன் வெடிகுண்டுத் தாக்குதல் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது. ஆனால், அரசு தன்னை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறது' என்று கூறினார். தன் கணவர் நிரபராதி என்று கூறிய சமந்தா, அந்தக் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் வாழ்க்கை வரலாற்றை எழுதி சர்ச்சையைக் கிளப்பினார்.

சமந்தாவைப் பற்றி ஆடம் விசிகார்ட் என்பவர் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

'2008ல் தனது குருவான அப்துல்லா எல்ஃபைசல் என்னும் தீவிரவாதியை சமந்தா சந்தித்தபோது, தென் ஆப்பிரிக்காவில் 'ஹபீப் சாலே கானி’ என்னும் ஹமாஸ் இயக்கத்தோடு தொடர்புடைய தீவிரவாதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். கானியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் சமந்தா' என்கிறார் அந்த ஆவணப்படத்தின் இயக்குநர்.

தனது சொந்த அடையாளங்களை மறைத்து ஷெராபியா, மரியா மிரா மார்டினஸ், அஸ்மந்த்ரா, நடாலியா வெப் என பல்வேறு பெயர்களில் வாழத் தொடங்கினார். இந்தப் பெயர்கள் எல்லாம் பல்வேறு குண்டுவெடிப்பு விசாரணைகளில் சம்பந்தப்பட்டவை. இ்ன்டர்போல் அமைப்பு விசாரணையில் இறங்கியபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கென்யா, தான்சானியா, சோமாலியா, ஜமைக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு தீவிரவாத செயல்களில் சமந்தா ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அல்கொய்தா, அல்சபாப், ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. திட்டமிடுதல், ஆயுதங்கள் வாங்குதல், நிதி திரட்டுதல், தீவிரவாதிகளை போலீஸில் சிக்கவிடாமல் காப்பாற்றுவது, போலி பாஸ்போர்ட் தயாரிப்பது போன்ற வேலைகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தார். இவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் விலை வைக்கப்பட்டது. 'உலக அளவில் தேடப்பட்டு வரும் ஆபத்தான பெண் தீவிரவாதி’ என்று அறிவிக்கப்பட்டார். 'வெள்ளை விதவை’ என்றும் இவருக்குப் பெயர் வைத்துள்ளார்கள்.

'வெள்ளை விதவை!’

அல்சபாப் இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. எதிர் தரப்பினர் சமந்தாவின் கணவர் கானியை சுட்டுக் கொன்றனர். 2012 ஜூலையில் மொம்பாசாவிலும், 2013 செப்டம்பரில் கென்யாவில் நடந்த குண்டிவெடிப்பு சம்பவங்களில் 100க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் குண்டுவெடிப்புகளில் சமந்தாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மொத்தம் 10,000க்கும் அதிகமான வீரர்கள், அமெரிக்கப் படையினர், சி.ஐ.ஏ ஆகியோர் சமந்தாவை வலைவீசித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கண்களிலும் மண்ணைத்தூவி விட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினருக்குப் பயிற்சி அளித்துள்ளார் சமந்தா.

சமீபத்தில், உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகப் போராடியபோது, ரஷ்ய வீரர் ஒருவரால் சமந்தா சுட்டுக் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனமான 'ரெக்னம்’ செய்தி வெளியிட்டது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அது ஒரு தவறான செய்தி என்று, சமந்தா செயல்பட்டு வரும் அய்தர் பட்டாலியன் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார்.

உலகிலேயே பயங்கரமான பெண் தீவிரவாதியின் மரணம் குறித்த மர்மம்  நீடிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு