Published:Updated:

"என் கணவர் கொலைக்கு யார் காரணம்?”

மெளனம் கலைக்கும் ராமஜெயம் மனைவி!

திருச்சியை திகில் அடைய வைத்த முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது!

கொலை நடந்து 33 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளி யார் என்பதை போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் 'ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்’ என்று மதுரை உயர் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார் ராமஜெயத்தின் மனைவி லதா. அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'வழக்கின் விசாரணை நிலை குறித்த ஆவணங்களை  ஜனவரி 5-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

"என் கணவர் கொலைக்கு யார் காரணம்?”

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் கிளம்பிய ராமஜெயம் அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. கல்லணை காவிரி கரை ஓரத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தமிழகத்தையே உலுக்கிப்போட்ட இந்தக் கொலை வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மூன்று மாத விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கு    சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் கைமாறியது. இப்போது 30 மாதங்கள் ஆகியும் இன்னும் கொலைக்கான காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

ராமஜெயத்தின் மனைவி லதாவை நீண்ட முயற்சிக்குப் பிறகு சந்தித்தோம். ராமஜெயத்தைப் பற்றிய பேச்சு எடுத்தாலே கதறி அழ ஆரம்பித்துவிடுகிறார் லதா. ''சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருடய  அண்ணனும் இவரும் சென்னைக்கு போயிருந்தாங்க. சென்னையில் இருந்து இவர் மட்டும் ஊருக்குத் திரும்பி வந்துட்டாரு. எப்பவும் ஊரில் இருந்தால் அதிகாலையில எழுந்து வாக்கிங் கிளம்பிடுவாரு. அன்றைக்கும் அப்படித்தான் வாக்கிங் போனார். ரொம்ப நேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பி வரலை. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு விபத்துல அவருக்கு காலில் அடிபட்டதால ரொம்பவே மெதுவாகத்தான் நடப்பாரு. அதனால வர லேட் ஆகியிருக்கும்னு நான் நினைச்சேன். ஆனாலும் நான் அவரோட செல்லுக்கு போன் பண்ணினேன். சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்துச்சு. எனக்குத் தெரிஞ்சு அவரு எப்பவும் செல்லை ஆஃப் பண்ண மாட்டாரு.

நான் உடனே அவரோட அண்ணணுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அவரும் தனக்குத் தெரிஞ்ச போலீஸுக்கு போன் பண்ணி விசாரிச்சாரு. 'சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரிக்கக் கூட்டிட்டுப் போயிருக்கிறதா சொல்றாங்க. பயப்படுற மாதிரி எதுவும் இல்லை’னு எனக்கு போன் பண்ணிச் சொன்னாரு. அதுக்குப் பிறகு கொஞ்ச நேரத்துல, காவிரி ஆற்றங்கரையில அவரு கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகத் தகவல் வந்துச்சு. நான் பதறியடிச்சுட்டு அங்கே ஓடினேன். பாவிங்க அவரை சிதைச்சுப் போட்டிருந்தாங்க...' சொல்லும்போதே உடைந்து அழுகிறார்.

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ''அவரு போனதுல இருந்து எங்க குடும்பத்தோட மொத்த சந்தோஷமும் போயிடுச்சு. எதைப் பற்றி யோசிச்சாலும் அவரு மட்டும்தான் ஞாபகத்துக்கு வர்றாரு. என்ன செய்ய முடியும் சொல்லுங்க. முதல்ல அவரு கொலைக்கு ஏதேதோ காரணம் சொன்னாங்க. சிலர் அவரைப் பற்றி தப்பு தப்பாவும் பேசினாங்க. அவரு அப்படிப்பட்டவர் இல்லைங்க. அவர் இருந்த வரைக்கும் தன்னைத் தேடி வர்றவங்க பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ், காலேஜ் ஃபீஸ்னு கேட்டதை எல்லாம் கொடுத்தாரு. பிரச்னை என்று யார் வந்தாலும் அவங்களுக்கு ஓடிப்போய் உதவி செய்வாரு.

என் வீட்டுக்காரர் இரண்டு பேரை எரிச்சுக் கொன்னுட்டதாக சிலர் கிளப்பிவிட்டாங்க. சிலரோட நிலத்தை அபகரிச்சுட்டாருன்னும் சொன்னாங்க. இன்னும் சிலர் அவரை திருச்சியில் ஒரு தாதா மாதிரி பில்டப் பண்ணிட்டாங்க. அப்படியெல்லாம் செய்யுற ஆள் இல்லைங்க அவரு. அவருகூட பழகினவங்களுக்குத்தான் அவரைப் பற்றித் தெரியும். உண்மையில அவரு ஒரு குழந்தை மாதிரி. அவர் மீது எந்த ஒரு வழக்குமே இதுவரைக்கும் கிடையாது. அவர் இறப்பதற்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட பிசினஸ் செஞ்சுட்டு இருந்தாருங்க. காலேஜ் திறந்து எத்தனையோ ஏழைக் குழந்தைகளை படிக்க வெச்சாரு. எங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் ஆண்டவன் கொடுத்திருக்கான். காசுக்காக யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவரோட சம்பாத்தியத்துல ஒரு பகுதியை தமிழகத்தில் பல கோயில்கள் கட்டுவதற்காக நிதி கொடுத்தும் வந்தார். கடவுள் மீது அவருக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அவரோட அண்ணன் அமைச்சர் ஆனதும் அவருக்கு ஒத்தாசையா இருந்தார். அவருக்கு மனசுலபட்ட விஷயத்தை அண்ணன்கிட்ட பட்டுனு சொல்லிடுவாரு.

வழக்கை விசாரிக்கும் போலீஸ்காரங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம், 'சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவோம்’னு சொல்றாங்க. ஆனா எதையும் உருப்படியா கண்டுபிடிக்கலை. கொலை தொடர்பாக எங்களுக்கு அடிக்கடி நிறைய கடிதங்கள் வரும். எல்லாத்தையும் போலீஸ்கிட்ட கொடுத்துட்டோம். எதுவும் நடக்கலை. நாங்க இதுநாள்வரை தமிழக போலீஸாரைத்தான் நம்பினோம். அவங்க கொலையாளிகளை கண்டுபிடிப்பாங்க என்ற நம்பிக்கை எங்களுக்கு இப்போ சுத்தமாகப் போயிடுச்சு. அதனாலதான் சி.பி.ஐக்கு வழக்கை மாற்றச் சொல்லி நீதிமன்றத்துக்குப் போயிருக்கேன். அவங்களாவது என் கணவர் கொலைக்கு யார் காரணம்னு கண்டுபிடிக்கட்டும்' என்று சொல்லியபடி மறுபடியும் அழ ஆரம்பித்தார்.  

அருகில் இருந்த நேரு நம்மிடம் தொடர்ந்து பேசினார். ''போலீஸ்காரங்க எத்தனை முறை வந்து விசாரித்தாலும், ஒத்துழைப்பு கொடுங்கன்னு நான் சொல்லியிருக்கிறேன். வீட்டில் இருக்கும் எல்லோருமே போலீஸுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறோம். ஆனால், போலீஸ் எதையும் கண்டுபிடிக்கலை. என் தம்பி வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கடந்த மூன்று வருஷத்துல நான் எத்தனை முறை போய் பார்த்துட்டு வந்தேன் என்பது அவங்களுக்குத் தெரியும். ஆனால், எதுவும் கண்டுபிடிக்கலை. முதல்ல தம்பி அதிகாலையிலேயே இறந்ததாக சொன்னாங்க. பிறகு  அவருடைய வயிற்றில் ஆல்கஹால் இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு விஷயம் தெரியுமா... என் தம்பிக்கு சரக்கு அடிக்கிற பழக்கமே கிடையாது. குடிக்காத ஒருத்தர் வயிற்றுக்குள் எப்படி ஆல்கஹால் வரும்? போலீஸாரோட மெத்தனப்போக்குக்குக் காரணம், எங்கள் மீதுள்ள அரசியல் காழ்ப்பு உணர்ச்சிதான் காரணமாக இருக்குமோ என்று நினைக்கத் தோணுது.  

முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்துல போட்டியிட்டாங்க. எங்க கட்சி சார்பாக ஆனந்த் என்பவர் போட்டியிட்டார். ஜெயலலிதா எலெக்‌ஷன்ல நிற்கிறார் என்பதால் நான் அமைதியா இருக்க முடியுமா? அதுக்கு தண்டனையாகத்தான் என் தம்பி வழக்கை விசாரிக்காமல் இழுத்தடிக்கிறாங்க. தேர்தல் பிரசாரத்தில் எனக்கு 63 வீடுகள் இருப்பதாகவும், பல கோடி சொத்து இருப்பதாகவும் ஜெயலலிதா பேசினாங்க. அவங்க ஜெயிச்ச பிறகு 60 லட்சம் சொத்து சேர்த்ததாக என் மீது வழக்குப் போட்டாங்க. அந்த வழக்கு தள்ளுபடி ஆகிடுச்சு. இரண்டு பேரை என் தம்பி காரோடு எரிச்சி கொன்னுட்டதாக கிளப்பிவிட்டாங்க. தம்பி இறந்த பிறகு சாமியார் கண்ணன் என்பவன், நான்தான் அந்தக் கொலைகளை செஞ்சேன் என்று சொல்லி சரணடைஞ்சிருக்கான். இப்படி செய்யாத தப்புகளை எல்லாம் என் தம்பி செய்ததாக சொல்லி கிளப்பிவிட்டாங்க.

நாங்க அண்ணன் தம்பிங்க நாலு பேரு. எங்க எல்லோரையும்விட  பரோபகாரி ராமஜெயம். மத்தவங்களுக்காக எவ்வளவோ உதவிகள் செஞ்சிருக்கான். இன்றைக்கு அவன் புள்ளைங்க வீதியில் நிற்கிறாங்க. என் தம்பி கொலை செய்யப்பட்டபோது திருச்சியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் இன்னும் திருச்சியில்தான் இருக்காங்க. யாரையும் இதுவரைக்கும் மாற்றவில்லை. காவல் துறையை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துல நான் இதைச் சொல்லவில்லை. தம்பியை இழந்த வேதனையில் சொல்றேன். சி.பி.ஐக்கு மாற்றினாலாவது உண்மை வெளிவருமா என்ற ஆதங்கத்துலதான் நீதிமன்றத்துக்குப் போயிருக்கோம்' என்றபோது நேருவும் அழுதுவிட்டார்.

''வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்!' என்பதுதான் ராமஜெயம் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் பதில்.

இதையே எத்தனை நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

சி.ஆனந்தகுமார்

படம்: என்.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு