Published:Updated:

நான் சந்தோஷமா இல்லை!

கொலைகள் சொல்லும் பாடம்

''எதுக்காக சார் எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கிறோம்? சந்தோஷமா வாழுறதுக்குத்தானே... கல்யாணம் பண்ணி நான் ஒருநாள்கூட சந்தோஷமா வாழவே இல்லைங்க. பெட்டிஷனுக்கு மேல பெட்டிஷன் போட்டு என்னை நிம்மதியா வேலை பார்க்கவும் விடலை. சொந்தக்காரங்க நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன். அங்கே என்னோட பொண்டாட்டியும் அவ சொந்தக்காரங்களும் என்னைப் பார்த்து கேலி பண்ணி சிரிக்கிறாங்க... என்னோட நிம்மதியைக் கெடுத்தவங்களை நான் எதுக்கு உயிரோட விடணும்?'  தன் மனைவியையும் அவரது குடும்பத்தையும் வெட்டிச்சாய்த்த ராணுவ வீரர் கமலக்கண்ணன் போலீஸாரிடம் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

நான் சந்தோஷமா இல்லை!

மனைவி கோமதி, அவரின் சகோதரிகள், மாமனார், மாமியார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் துரத்தி துரத்தி வெட்டியும் சாய்த்திருக்கிறார் கமலக்கண்ணன். பிரேதப் பரிசோதனைக்காக  திருமங்கலம் அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டிருந்த உடல்களின் கோரத்தைப் பார்த்து மருத்துவர்களே மிரண்டுவிட்டனர்.

இந்தக் கொடூரக் கொலைகளுக்கு கமலக்கண்ணன் சொன்ன ஒரே காரணம்... ''நான் சந்தோஷமா இல்லை!''

மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள அ.தொட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் இருக்கிறார். இவருக்கும் கோமதிக்கும் திருமணம் ஆன பிறகு ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து மனைவியை சந்தித்துச் செல்வார். அப்படி இந்தமுறை ஊருக்கு வந்தவர்தான் ஐந்து பேரையும் கொலை செய்துவிட்டு சிறைக்குப் போய்விட்டார். மொத்தமாக ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் கொலை செய்யப்படுவது சமீப காலங்களில் இதுதான்!

நான் சந்தோஷமா இல்லை!

கமலக்கண்ணனின் வாக்குமூலம் பற்றி மனநல மருத்துவர் அபிலாஷாவிடம் கேட்டோம்.  ''நீ பெரியவனா... நான் பெரியவளா என்ற ஈகோ பார்க்கும் இடமாக வீடு இருக்கக் கூடாது. அதுதான் பிரச்னை தொடங்கும் நிலை. திருமணத்துக்குப் பிறகு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை கணவன், மனைவி இருவருமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர் தலையீடு என்பது குடும்பத்துக்குள் இருக்கக் கூடாது. மதுரையில் நடந்திருக்கும் சம்பவம் நமக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது.

கணவன், மனைவி இருவரும் முக்கியமாக நான் இங்கே குறிப்பிடும் சில விஷயங்களில் தெளிவாக இருந்தாலே போதும்... வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். முதல் விஷயம்... ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். இருவரும் உட்கார்ந்து தங்களுக்கு எது வேண்டும்... எது வேண்டாம் என்பதை மனம்விட்டுப் பேச வேண்டும். மற்றவர்கள் முன்பாக ஒருவரை மற்றொருவர் மட்டம்தட்டிப் பேசுவதோ, கேலி செய்வதோ கூடாது. அதே நேரத்தில் குடும்பத்தில் சந்தோஷமான தாம்பத்ய உறவு இருந்தால் எந்தப் பிரச்னையும் எட்டிப் பார்க்காது. கணவன், மனைவிக்குள் எந்தப் பிரச்னை இருந்தாலும் அதை படுக்கை அறைக்குக் கொண்டு போகாதீர்கள். எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் அதை நீண்ட நேரம் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான் சந்தோஷமா இல்லை!

கணவனுக்கு மனைவி மீதோ, மனைவிக்கு கணவன் மீதோ சின்ன பிரச்னை வந்தாலும், அதை இழுத்தடிக்காமல் உடனே உட்கார்ந்து பேசுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும். பேசாமல் இருந்து விவாகரத்து வரை போன எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். இன்னும் சிலருக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை இது... 'நயன்தாரா மாதிரி எனக்கு பொண்டாட்டி வரணும்னு நினைச்சேன். ஆனா இவ அப்படி இல்லையே...’ என கணவனும், 'கட்டினா அஜித் மாதிரி ஒருத்தரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்ணு என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லிட்டு இருந்தேன். எனக்கு வந்து வாய்ச்சிருக்காரே ஒருத்தரு!’ என்று மனைவியும் பல தருணங்களில் நினைப்பது உண்டு. நமக்குக் கிடைத்த மனைவியும் அழகுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அழகு என்பது எதில் இருக்கிறது? சந்தோஷம் என்பது எங்கே இருக்கிறது?

நான் சந்தோஷமா இல்லை!

விட்டுக்கொடுப்பதில்தானே நிஜமான சந்தோஷம் இருக்கிறது. விட்டுக்கொடுக்கும் யாரும் கெட்டுப்போய்விட மாட்டார்கள். திருமணம் ஆன புதிதில் தாம்பத்யம் சந்தோஷமாக இருக்கும். நாட்கள் ஆக, ஆக சலிப்பு ஏற்படுவது இயல்புதான். அதற்காக ஒருவருக்கு ஒருவர் குற்றம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையற்ற கோபம், வீண் சண்டை, அர்த்தமற்ற வாக்குவாதம், அநாவசியமாக மற்றவர்களைக் காயப்படுத்துவது என்பதெல்லாம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது ஒரு கட்டத்தில் இருவரையும் தனிமைப்படுத்தும். மன உளைச்சலை உண்டாக்கும். எதையும் செய்யத் துணியும். அது கொலை செய்யவும் தூண்டும். இந்த வாழ்க்கை என்பது ஒருமுறைதானே... அதற்குள் ஏன் நீங்கள் உங்களையும் வருத்தி உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் காயப்படுத்த வேண்டும்? இதையெல்லாம் மனதில் வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்!'' என்று சொல்கிறார்.

சந்தோஷம் என்பது வெளியில் இல்லை. நம் ஒவ்வொருக்குள்ளும்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும், வாழ்க்கை வரமாகும்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, செ.சல்மான்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு