Published:Updated:

அடுத்து அமுக்கப் போவது யாரை?

மதுரை குவாரிகள்...

பிரீமியம் ஸ்டோரி
##~##

''மேலூர் ஏரியா வில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், அவர் குடும்பத்தாரும் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து சம்பாதித்து இருக்கிறார்கள்!'' - இது, தொழில் துறை அமைச்சர் வேலுமணி சட்டமன்றத்தில் கொளுத்திப் போட்ட சரவெடி. இதற்கு உடனடியாக எதிர் ராக்கெட்டை வீசிய அழகிரி, ''என் பெயரிலோ, என் குடும்பத்தார் பெயரிலோ குவாரிகள் எதுவும் இல்லை. தவறான தகவலை வெளியிட்ட அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்!'' என்று கர்ஜித்தார். அந்தக் கர்ஜனைக்கு ஆக்ஷன் மூலமாக ரியாக்ஷன் காட்ட ஆரம்பித்துள்ளார், தமிழக அமைச்சர்! 

மேலூரை அடுத்துள்ள கீழையூர் மற்றும் கீழவளவு கிரானைட் குவாரிகள் இரண்டுக்கு மட்டும், கடந்த 4-ம் தேதி மாலை டாமின் அதிகாரிகள் புடைசூழ அதிரடி விசிட் அடித்தார் அமைச்சர் வேலுமணி. இந்தக் குவாரிகள், மு.க.அழகிரியின் மகன் 50 சதவிகித பங்குதாரராக இருந்து நடத்தி வந்த 'ஒலம்பஸ் கிரானைட்ஸு’க்குச் சொந்தமானவை என்று ஆளும் கட்சி வட்டாரம் சொல்கிறது. முதலில் கீழவளவு 'சக்கரை பீர் மலை’ குவாரியைப் பார்த்த அமைச்சர், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும், அனுமதி பெறாமலேயே தனியார் பட்டா நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் அத்துமீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் பார்த்துவிட்டு, ''நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மேலா கவே கொள்ளை நடந்திருக்கே!'' என்று கீழையூர் குவாரிக்குச் சென்றார். அங்கும் இதே நிலைதான்.

அடுத்து அமுக்கப் போவது யாரை?

அமைச்சர் வேலுமணியிடம் பேசினோம். ''சட்ட மன்றத்தில் நான் சொன்ன கருத்துக்கு அழகிரி கண்டன அறிக்கை விட்டதுமே, மேலூர் பகுதியில் அழகிரி தரப்பினருக்குச் சொந்தமான சட்ட விரோத குவாரிகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அம்மா அவர்கள் எனக்கு ஆணை இட்டார்கள். அதற்காகத்தான் வந்தேன். பிறகுதான் தெரிகிறது எவ்வளவு சுரண்டி இருக்கிறார்கள் என்று. இங்கு எடுக்கப்படும் கிரானைட் கல்லில் 10 சத விகிதத்தை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, பாக்கி 90 சதவிகிதத்தைக் மறைத்துள்ளனர். இது அதிகாரப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதிகாரிகளும் கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அடுத்து அமுக்கப் போவது யாரை?

அழகிரியின் மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருந்து நடத்தி வந்த ஒலம்பஸ் கிரானைட் 29.11.06 தொடங்கி 12.03.11 வரை கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக அதிகாரிகள் கணக்குச் சொல்கிறார்கள். ஆனால், அதுக்குப் பின்பும் கற்கள் வெட்டியிருக்காங்க. ஆட்சி மாறிய பிறகு சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், அழகிரி மகன் ஒலம்பஸ் கிரானைட் பங்குதாரர் பொறுப்பில்

அடுத்து அமுக்கப் போவது யாரை?

இருந்து விலகி உள்ளார். ஆனால், ஒரு வருடத்துக்கு முன்னதாகவே அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக இப்போது ஆவணங்களைத் தயார் செய்து இருக்கிறார்கள். மொத்தத்தில் நாங்கள் எதிர்பார்த்து வந்ததைவிடவும் அதிகமான ஆவணங்கள் எங்களுக்குக் கிடைத் திருக்கின்றன. அனைத்தையும் அம்மாவிடம் சமர்ப்பிப்போம். அப்புறம் பாருங்கள் என்ன நடக்கிறது என்று!'' என்றார்.

மேலூர் பகுதியில் நடக்கும் கிரானைட் கொள்ளை குறித்து தொடந்து குரல் கொடுத்து வரும் மேலூர் வழக்கறிஞரான ஸ்டாலின், ''பட்டா நிலம்னு சொல்லி கண்மாய், புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட இடங்களையும் வளைச்சு தோண்டிட்டாங்க. டாமின் அதிகாரிகளும், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிக்காரங்களும் இதுக்கு முழுக்க முழுக்க உடந்தை. கடந்த அஞ்சு வருஷத்தில் குவாரி சம்பந்தமா அ.தி.மு.க-காரங்க யாராச்சும் மேடை ஏறிப் பேசி இருப்பாங்களா? இல்லை... அதுக்கு முந்திதான் தி.மு.க-காரங்க பேசி இருப்பாங்களா? தேர்தல் செலவுக்கு தொழில் அதிபர்களிடம் போற இவங்க எப்படி வாயைத் திறப்பாங்க? அமைச்சர் விசிட்டின்போதுகூட கிரானைட் அதிபர்களின் கைக்கூலிகள் சிலரும் அவரோட போயிருக்காங்க. அமைச்சர் வருவதை அதிகாரிகள் முன்கூட்டியே கிரானைட் கம்பெனிகளுக்கு தகவல் கொடுத்துட்டாங்க. அமைச்சரிடம் யார் என்ன புகார் சொல்கிறார்கள் என்பதை வீடியோ எடுக்குறதுக்காக, கிரானைட் கம்பெனி அதிபரால் அனுப்பி வைக்கப்பட்ட வீடியோகிராபரும் போட்டோகிராபரும் பக்காவா படம் பிடிச்சிருக்காங்க. இப்படி இருந்தா யாரு பயம் இல்லாம புகார் சொல்வாங்க?'' என்று ஆதங்கப்பட்டார்.

தி.மு.க. தரப்பிலோ, ''ஒலம்பஸ் கிரானைட் குவாரியில் கற்களை வெட்டி எடுத்தது அந்த மூன்றெழுத்து நிறுவனம் தான் கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரி யாமலேயே, அந்த கம்பெனியினர் முறை கேடாகக் கற்களை வெட்டி இருந்தால் யார் பொறுப்பாவது?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மதுரை ஏரியாவில் நடந்த கிரானைட் மோசடிகளைக் கண்டு பிடிக்க கில்லாடியான அதிகாரி களைத் தேர்தெடுத்து, ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவினர் பூதக்கண்ணாடியை வைத்து அனைத்து குவாரிகளையும் ஸ்கேன் செய்து வருகிறார்கள். 'கடந்த ஐந்து வருடத்தில் சட்டவிரோதமாகக் கடத்தப் பட்ட கிரானைட் பாறைகள் தரை வழியாகவும், கடல் மார்க்கமாகவும் எங்கெங்கே எவ்வளவு சென்றுள்ளன?' என்பது தொடர்பான ஆவணங்களை அந்தந்த அரசு துறை அதிகாரிகளிடம் சேகரித்து வருகிறார்கள். மதுரை ஏரியாவில் கோலோச்சிய கனிம வளத் துறை துணை இயக்குநர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த அதிகாரியின் பூர்வாங்க விவரங்கள் அலசப்பட்டு வருகின்றன. விசாரணைக் குழுவினர் அடுத்த ஒரு வாரத்தில் தரப்போகும் அறிக்கையை வைத்து அடுத்தகட்ட  நடவடிக்கை இருக்கும்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு