Published:Updated:

மார்ட்டினை வளைக்கும் லாட்டரி வலை!

சேலம்.. திருப்பூர்... எர்ணாகுளம்... பாலக்காடு... பூட்டான்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'நாம நினைச்சதை சி.பி.ஐ. பண்ணிட்டிருக்கு!’ - புன்சிரிப்போடு இப்படி சொல்லி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. காரணம், லாட்டரி கிங் மார்ட்டினின் சொத்துகளை சி.பி.ஐ. ரெய்டு செய்திருப்பதுதான்!

 லாட்டரி 'விற்பனையில்’ ஜாக்பாட் மேல் ஜாக்பாட் அடித்துப் பெரும் கோடீஸ்வரனாகி இருப்பவர் சான்டி யாகோ மார்ட்டின். சில வருடங்களாக தி.மு.க-வினருடன் கூடிக்குலாவியதன் விளைவாக, ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் வலுவான இடத்தைப் பிடித்தார். விளைவு, நில மோசடி புகாரில் சேலம் சிறையில் இருக்கி றார். இந்நிலையில், அவரது சொத் துகளை சி.பி.ஐ. ரெய்டு செய்திருக்கும்

மார்ட்டினை வளைக்கும் லாட்டரி வலை!

நிலை யில்... 'வெறும் நிலமோசடி வழக்கோடு மட்டும் மார்ட்டின் ஃபைலை மூடிவிடாமல், இவருக்கும் கருணாநிதிக்குமான நெருக்கம் எவ்வளவு?’ என்பது உட்பட பல விஷயங் களை உள்ளடக்கி 'கருணாநிதி வித் மார்ட்டின்’ என்ற தலைப்பில், தாங்கள் தயாரித்து வைத்திருந்த ஃபைலை சி.பி.ஐ-யிடம் கொடுத் திருக்கிறதாம் தமிழக காவல் துறை.

விஷயத்தை விரிவாகப் பார்ப் போம்...

கடந்த 5-ம் தேதி காலையில் கோவை ஜி.என். மில் பகுதியில் உள்ள மார்ட்டினின் வீடு, காந்திபுரத்தில் உள்ள அவரது அலுவலகங்களை வளைத்தது கேரளாவில் இருந்து வந்த சி.பி.ஐ. டீம். ஒரு டி.எஸ்.பி. தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்களின் கண்காணிப்பில் இந்த ரெய்டு நடந்தது. அரண்மனைபோன்ற மார்ட்டின் வீட்டைச் சுற்றிப் பெரும் சுற்றுச் சுவர் இருப்பதால், கட்டடத்துக்குள் சி.பி.ஐ-யின் நடமாட் டங்கள் எதுவும் மீடியாவின் கண்களுக்குச் சிக்கவில்லை.

கோவை போலீஸ் அதிகாரிகளிடம் இந்த ரெய்டு நடவடிக்கை குறித்துப் பேசியபோது, ''போன மாசம் 7-ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கோடிக் கணக்கான மதிப்பிலான லாட்டரி ஊழல் விவகாரம் தொடர்பாக, மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளி ஜான் கென்னடி மீது நான்கு வழக்குகளைத் தொடுத்தது சி.பி.ஐ. பூட்டான் மாநில லாட்டரிகளை கேரளாவில் விற்பனை செய்தது தொடர்பாக முதல் வழக்குப் பதிவானது. இரண்டாவது வழக்கு 2009-ல், பாலக்காட்டில் உள்ள மேகா டிஸ்ட்ரிபியூட்டர்ஸின் (இந்த நிறுவனத்தின் வழியாகத்தான் கேரளாவில் அமோகமாக லாட்டரி பிசினஸை நடத்தினார் மார்ட்டின்) குடோனில் நடந்த தீ விபத்து சம்பந்தமானது. மூன்றாவது வழக்கு, மற்ற மாநில லாட்டரிகளைப் போலியாக அச்சடித்து கேரளாவில் விற்றது சம்பந்தமானது. நாலாவது வழக்கில், போலி லாட்டரிச் சீட்டுகளை ஒரிஜினல் என்று சொல்லி வழங்கி லாட்டரி ஏஜென்ட்களையும், டீலர்களையும் ஏமாற்றியது...

பூட்டான் மாநில லாட்டரிகளை கேரளாவில் விற்பது தொடர்பாக மார்ட்டினுக்கு வழங்கப்பட்ட அனுமதியில், 'ஒவ்வொரு லாட்டரிச் சீட்டிலும் பூட்டான் மற்றும் கேரள அரசாங்கத்தின் லோகோவை சீல் அடித்திருக்க வேண்டும், பரிசு விழுந்தும் கோரப்படாத லாட்டரிச் சீட்டின் பணம் அரசின் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும், லாட்டரிச் சீட்டுகளை அரசாங்க அச்சகத்தில்தான் அடிக்க வேண்டும்’ எனச் சொல்லி இருந்தது. ஆனால், இவை எதையுமே மதிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் அச்சகங்களில் லாட்டரிகளை அச்சடித்ததாக ஆதாரத்தோடு சொல்கிறது சி.பி.ஐ. ஒரே எண்ணில் பல டிக்கெட்டுகளை அடித்து விற்ற தாகவும், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை மூலமாகவும் ஏகப்பட்ட கோடிகளை மார்ட்டின் டீம் சேர்த்திருக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறது. லாட்டரி விற்பனை தொடர்பாக அரசாங்கத்துக்குக் கட்டவேண்டிய வரிகளைக் கட்டாமலும் கோடிக்கணக்கில் ஏமாற்றி இருக்கிறார்கள். இந்த விவகாரங்கள் தொடர்பாகத்தான் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட சுமார் 18 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.

மார்ட்டினை வளைக்கும் லாட்டரி வலை!

'ஆள்பவர்களுக்குத் தெரியாமல், போலி லாட்டரி களை, தமிழ்நாட்டில் மார்ட்டினால் அச்சடித்திருக்க முடியாது!’ என்பது சி.பி.ஐ-யின் வலுவான கருத்து. 'மாநில நிர்வாகத்தில் இருந்தவர்கள் மார்ட்டினுக்கு இந்த மோசடியில் உதவி செய்தார்களா? இதன் மூலமாக அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்தது?’ என்பது போன்ற கோணத்தில் அலசுகிறார்கள். நாங் களும் எந்தெந்த தி.மு.க. வி.ஐ.பி-களோடு மார்ட்டின் நெருக்கமாக இருந்தார் என்பது குறித்த ஃபைலை ரெடி செய்து சி.பி.ஐ-யிடம் கொடுத்துவிட்டோம். இதில், 'முன்னாள்' பெயர் முதலிடத்தில் இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து மார்ட்டின் மீதான லாட்டரி மோசடி விஷயத்தில் 'முன்னாள்' இழுக்கப் படுவாரா? என்ற கேள்விக்கு சி.பி.ஐ-தான் பதில் சொல்ல வேண்டும். மேலும், சார்லஸ் ப்ரமோட்டர்ஸ், சார்லஸ் மாடுலர் ஹோம்ஸ், மார்ட்டின் ஸ்பின்னிங் மில்ஸ், மார்ட்டின் மல்டி ப்ராஜெக்ட்ஸ் என்பது உள்ளிட்ட சுமார் 35 கம்பெனிகளை மார்ட்டின் பதிவு செய்திருக்கும் விஷயங்களையும் இந்த ஃபைலில் குறிப்பிட்டிருக்கிறோம். அதில், பெரும்பாலான கம்பெனிகள் '54. மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என். மில்ஸ், கோயம்புத்தூர்’ என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அண்டர் லைன் பண்ணி இருக்கிறது சி.பி.ஐ. தனது 'ரியல் எஸ்டேட்’ பிசினஸ்ஸுக்காக மார்ட்டின் இப்படிச் செய்து இருப்பாரோ...'' என்றும் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

மார்ட்டின் சிறையில் இருப்பதால், அவர் மனைவி லீமாரோஸிடம் விளக்கம் கேட்க முயன்றோம். அவர் வீட்டிலேயே இல்லை. மார்ட்டினின் நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பாளிகளோ, ''முழுக்க முழுக்க அரசியல்ரீதியான நடவடிக்கை இது. கேரளாவில் லாட்டரி விற்பனை செய்த விஷயத்திலோ, தமிழகத்தில் நிறுவனங்கள் நடத்திய வகையிலோ எந்தத் தவறும் நடக்கவில்லை. எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டு முறையாகத்தான் நடந்து வருகிறது. இந்தப் பிரச்னைகளை சட்டரீதியாக சமாளிப்போம்...'' என்கிறார்கள்.

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு