Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆதாரம் காட்டினால் சயனைட் சாப்பிட்டுச் சாகிறேன்” சொன்னதைச் செய்த காஞ்சி தாவுத் இப்ராகிம்

ஸ்ரீதர்

தமிழகத்தின் 'தாவுத் இப்ராஹிம்' என அழைக்கப்பட்டுவந்த காஞ்சிபுரம் 'தாதா' ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15 ஆண்டுகாலம் காஞ்சிபுரம் மாவட்டத்தை திகிலில் வைத்திருந்த ரவுடி ஸ்ரீதரின் அத்தியாயம், தற்கொலையில் முடிகிற  அளவில்தான் தமிழக போலீஸாரின் சுறுசுறுப்பு இருந்துள்ளது என்பது கொஞ்சம் கவலைக்குரிய விஷயம்தான். 

காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன்தான் ஸ்ரீதர். 10-ம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. மேலும், சகவாசமும் சரியில்லை. 90-களின் மத்தியில், அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயத் தொழிலில் கொடிகட்டிப்பறந்த சக்கரவர்த்தி என்பவருடன் அறிமுகம் உண்டானது. அவருடன் சாராயத் தொழிலில் ஒத்தாசையாக இருந்தபடி, தொழிலின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தான் ஸ்ரீதர். 

தொழிலில் ஸ்ரீதரின் திறமையைக் கண்டு வியந்த சக்கரவர்த்தி, ஸ்ரீதரை தன் தொழில் பார்ட்னராகச் சேர்த்துக்கொண்டதோடு, சில வருடங்களில் தன் மகளையும் அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார். தன் ஆட்கள்மூலம் தன் தொழில் எல்லையை காஞ்சிபுரம் தாண்டியும் விரிவுபடுத்திக்கொண்டான். இதனால் அவனுக்கு தமிழகம் தாண்டியும் ஆட்கள் அறிமுகமாகினர்.  
ஸ்ரீதருடன் தொழில் செய்தவர்கள், பின்னாளில் தனிக்கடை போடத் துவங்க, ஸ்ரீதருக்கு எதிரிகள் உருவானார்கள். அப்போது, பாக்யா என்ற ஸ்ரீதரின் உறவுப்பெண் கொலையானபோதுதான், முதன்முறையாக ஸ்ரீதர் என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில் திகிலோடு பேசப்பட்டது. 1999-ல் தொழில் போட்டியில் ராமதாஸ் என்பவரை கொலை செய்தான் ஸ்ரீதர்.

ஸ்ரீதர்இந்த வழக்கில் கைதாகி, பின்னர் 2003-ம் ஆண்டு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டான். ஸ்ரீதரால் காஞ்சியில் அவ்வப்போது தலைகள் பல உருண்டன. ஆன்மிக நகரம் அதிர்ச்சியில் உறைந்துநின்றது. 2002-ம் ஆண்டில், கணேசன் என்பவரைக் கொல்ல முயன்ற வழக்கில், ஸ்ரீதரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது காவல்துறை. தண்டனைக்காலம் முடிந்து விடுதலையான பின்னும் தனது பராக்கிரமங்களைத் தொடர்ந்தான். 

இந்தக் காலகட்டத்தில், காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் நட்பு அவனுக்குக் கிடைத்தது. இதனால், காஞ்சியில் துணிந்து பல சம்பவங்களை அரங்கேற்றினான். அரசியல்வாதிகள் நட்பு, சாராயத்தொழிலைத் தாண்டி மற்ற தொழில்களிலும் கவனம் செலுத்தவைத்தது.  ரியல் எஸ்டேட் தொழிலில் கால்பதித்தான் ஸ்ரீதர்.  ஸ்ரீதர் தலையீடு காரணமாக, காஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்த விலைமதிப்பற்ற நிலங்கள், வீடுகள், கடைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துகள் உரிமையாளர்களிடமிருந்து மிரட்டி எழுதிவாங்கப்பட்டன. உயிருக்குப் பயந்து, பலர் தங்கள் சொத்துகளை வந்த விலைக்கு விற்றுவிட்டு ஒதுங்கினர்.

வாரிசுகள் இல்லாத சொத்துகள், பெரிய சொத்துகளைக்கொண்ட பின்புலம் இல்லாதவர்கள்தான் அவனது இலக்கு. சம்பந்தப்பட்ட நபருக்கு நாள் குறித்து, தன் படை பரிவாரங்களுடன் போய் வீட்டில் அமர்ந்து அங்கேயே செட்டில்மென்ட் எழுதி வாங்கிவிடுவது  ஸ்ரீதரின் பாணி. முரண்டு பிடித்தால், சம்பந்தப்படவர்களின் ரத்த உறவுகளைப் பணயக்கைதியாக்கி, மிரட்டி, தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வான். காஞ்சியில் இப்படி தங்கள் சொத்துகளை இழந்தவர்கள் பலர். சொத்து போனால் என்ன, உயிராவது மிஞ்சட்டும் எனப் பலரும் காவல்நிலையம் செல்ல மாட்டார்கள்.

இந்நிலையில், ஸ்ரீதரின் கொட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை அறிந்த காவல்துறை, பிரச்னையை 'முடிவுக்கு'க் கொண்டுவர விரும்பியது. 2006-ன் மத்தியில், ஸ்ரீதருக்கு நாள் குறிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை என அதற்கு இடத்தையும் முடிவுசெய்தது. ஆனால், காவல்துறையின் திட்டத்தை முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்ட ஸ்ரீதர், அந்த முயற்சியில்  சாதுர்யமாகத் தப்பினான். விரட்டிவந்த காவல்துறையே எதிர்பார்க்கமுடியாதபடி, சென்னை விமான நிலையப் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த கேட்டை  தனது வாகனத்தின்மூலம் சேதப்படுத்தினான். இதையடுத்து, எதிர்பார்த்தபடி மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸார் அவனை கைதுசெய்தனர். ’

இந்த வழக்கில் ஜாமீனில் வந்த ஸ்ரீதர்,  மலேசியாவுக்கு தப்பிச்சென்றான். அங்கு, தலைமறைவாக இருந்தபடியே தனது ஆட்கள்மூலம் தொடர்ந்து காஞ்சியில் பல குற்றச்சம்பவங்களை அரங்கேற்றிவந்தான். காவல்துறையின் கவனம் அவன் மீதிருந்து விலகிய ஒருசமயம், மீண்டும் இந்தியா திரும்பிய ஸ்ரீதர், வழக்கம்போல இடங்களை மிரட்டி எழுதிவாங்கும் வேலையைத் தொடர்ந்தான். 

2010- ம் ஆண்டு, புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்டார். தொழிற்போட்டி காரணமாக, வேலுார் சிறையில் இருந்தபடி இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியது என்றது காவல்துறை. இந்த காலகட்டத்தில், குண்டர் சட்டத்தின் கீழ் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தித் தப்பித்தான். முக்கியமான ஒருவரின் கதையை முடிக்க நினைத்தால், சட்டச் சிக்கலைத் தவிர்க்க பழைய வழக்கொன்றில் தானாக முன்வந்து கைதாகிச் சிறை சென்றுவிடுவது ஸ்ரீதரின் வழக்கம். வேலுார் சிறையில் அவனுக்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பெரிய ரவுடிகளின் நெருக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, சிறையில் இருந்தபடியே மேலும்  பல குற்றச்செயல்களில் ஈடுபட்டான். 

தேவராஜன்

2012 -ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலர் நாராயணன், காஞ்சிபுரம் பேருந்துநிலையம் அருகே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு, சென்னை செங்குன்றம் நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பும்வழியில், போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடி தேவராஜ், மிளகாய்ப் பொடி தூவி  கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். சில மாதங்களுக்கு முன் தேவராஜின் அண்ணன் ஸ்ரீதரால் கொல்லப்பட்டான். தன் அண்ணனின் சாவுக்கு பழிக்குப்பழியாக ஸ்ரீதரின் கதையை முடித்து, தான் காஞ்சியில் அடுத்த தாதாவாக வலம் வரப்போவதாகச் சபதம்செய்திருந்தான் தேவராஜ். ஸ்ரீதருக்கு இந்தத் தகவல் வந்த நாளன்றே, தேவராஜுக்கு நாள் குறிக்கப்பட்டது. செங்குன்றத்தில் முடிந்தது தேவராஜின் கதை. 

இந்த இரு சம்பவங்களிலும் ஸ்ரீதரின் பின்னணி இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவன் இருந்தது வேலுார் சிறையில். காவல்துறையின் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை தனக்கான ஆட்களைக் கொண்டிருந்தது ஸ்ரீதரின் சக்ஸஸ் ஃபார்முலா. இந்த நட்பினால், பல ஆபத்துகளிலிருந்து அவன் தப்பித்திருக்கிறான் என்கிறார்கள்.
காஞ்சியில் அவனது பெயரில் உள்ள பழையை ஓட்டல் ஒன்றை மிரட்டி எழுதிவாங்கிய வழக்கு ஒன்றும் அவன்மீது உண்டு. ஸ்ரீதரின் அட்டகாசம் அதிகரித்த ஒருவேளையில், மீண்டும் அவனுக்கு காவல்துறை நாள் குறித்ததாகச் சொல்லப்பட்டது. இதையறிந்து, திடீர் கல்வி வள்ளல் அவதாரம் எடுத்தான் காஞ்சியில். 

ஸ்ரீதர்காஞ்சியில், அவன் சார்ந்த சமுதாயத்தினரால் நடத்திவரப்படும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு, பள்ளி வளர்ச்சி நிதியாக ஒரு பெரும் தொகையை அளித்து, அதன் நிர்வாகிகள் சிலரை மிரட்டி, பள்ளியின் அறங்காவலர் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. 

ஸ்ரீதரின் இந்த மாற்றத்தினால், காஞ்சியில் மீண்டும் அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நேரத்தில், ஒரு இடப் பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து பேசச் சென்ற இடத்தில், கையும் ஆவணமுமாக காவல்துறையிடம் சிக்கினான்.  மீண்டும் சிறைவாசம். காவல்துறையின் 'நண்பர்கள்' கூட அவனை இந்தச் சம்பவத்தில் கைவிட்டுவிட இனி தன் உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற முடிவுக்கு வந்தவன், அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததும் நேபாளம் வழியாக துபாய்க்குப் பறந்துவிட்டான். 

2014-ல் இன்டர்போல் உதவியுடன் துபாயில் ஸ்ரீதரை கைதுசெய்த தமிழக காவல்துறை, மீண்டும் அவனை இந்தியா கொண்டுவர முயற்சி எடுத்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் துபாயிலேயே தங்கிவிட்ட ஸ்ரீதர், அங்ருந்தபடியே தொடர்ந்து தனது நெட்வொர்க் மூலம் காஞ்சியில் தன் ஆட்டத்தைத் தொடர்ந்தான். ஆரம்ப நாட்களில், ஸ்ரீதருக்கு சொத்து சேர்க்கும் ஆசை மட்டுமே இருந்தது. ஆனால், பின்னாளில்தான் ஒரு டான் போல ஆக வேண்டும். எல்லோராலும் பேசப்பட வேண்டும் என்ற பேராசை உண்டானது. அந்த விஷயத்தில் அவனது ஆதர்ஷம், தாவுத் இப்ராகிம். தாவுத் இப்ராகிம் போல, தான் உலகம் முழுவதும் பேசப்படும் ஆளாக மாற வேண்டும் என்ற ஆசையில்தான் காவல்துறையுடன் கடைசிவரை கண்ணாமூச்சி ஆட்டம் நடத்திக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

இதுதான் காஞ்சியில் சாதாரண கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் துவக்கிய ஸ்ரீதர், துபாய் வரை சென்றதன் பின்னணி.

தன் பராக்கிரமங்களின்மூலம் ஸ்ரீதர் சம்பாதித்துள்ள சொத்துக்களின் மதிப்பு பல நுாறு கோடிகள் என்கிறார்கள். 
துபாயில், இன்டர்போல் போலீஸாரால் கைதாகி சிறையில் இருந்தபோதும், இங்குள்ள சிலருக்கு போன் செய்து மிரட்டியிருக்கிறான். ஸ்ரீதர் மீது  7 கொலை வழக்குகள் , 8 கொலை முயற்சி வழக்குகள், 4 ஆள் கடத்தல் வழக்குகள், கட்டப் பஞ்சாயத்து, இடங்களை மிரட்டி எழுதி வாங்கியது மற்றும் செம்மரம் கடத்தல் உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை 5 முறை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளான். கடைசியாக, அப்துல்லாவரம் அப்துல் என்பவர் கொலையிலும் ஸ்ரீதரின் பின்னணி இருந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ஸ்ரீதர்இதனிடையே, கடந்த வருடம் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்த ஸ்ரீதர்,  தனது உயிருக்கு உத்தரவாதம் அளித்தால், இந்தியா திரும்பி வழக்குகளை சட்டப்படி சந்திப்பதாகக் கூறியிருந்தான்.

மேலும்,  ''எனது மொத்த சொத்தின் மதிப்பெல்லாம் தெரியாது. அனைத்தும் நான் துபாய் வந்தபிறகு  முறையாக சம்பாதித்தது. யாருடைய நிலத்தையும் நான் மிரட்டிப் பறித்ததில்லை. அதற்காக யேசு சொன்னதுபோல ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டுகிற ஆளும் இல்லை. என்னை துன்புறுத்துபவர்களுக்கோ அல்லது எனது உயிருக்கு மிரட்டலாக இருப்பவர்களுடனோ நான் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ள முடியாது. எந்த மனிதன் என்கவுன்டரில் கொல்லப்படுவதை விரும்புவான்? என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தைக் காட்டினால், நானே சயனைட் தின்று தற்கொலை செய்துகொள்வேன்'' என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தான்.  இப்போது, கம்போடியாவில் சயனைட் தின்றுதான் செத்திருக்கிறான் என்கிறார்கள்.

இதனிடையே, கடந்த வருடம் துபாயிலிருந்து சென்னை திரும்பிய ஸ்ரீதரின் மனைவி குமாரியை விசாரணை செய்தது ஸ்ரீதரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. ஸ்ரீதர் மகனின் பாஸ்போர்ட்டை முடக்கி, அவனையும் விசாரணை வளையத்தில் கொண்டுவந்தது என கடந்த  இரண்டு வருடங்களாக ஸ்ரீதரின் ஆதிக்கத்தை அழிக்கும் அத்தனை நடவடிக்கைகளும் காவல்துறையால் எடுக்கப்பட்டன.

காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி-யாக இருந்த ஸ்ரீநாத், இதில் மிகுந்த மும்முரம் காட்டினார். ஸ்ரீதர், அவனது மனைவி மற்றும் பினாமிகள் பெயர்களில் சிதறிக்கிடந்த பல கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதோடு, ஸ்ரீதரால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்துகளை உரிமையாளர்களுக்கு மீட்டுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். காஞ்சியில் பிரபல தியேட்டர் ஒன்றின் அதிபர், பலகோடி மதிப்புள்ள ஒரு இடத்தை ஸ்ரீதர் ஆட்கள்மூலம் மிரட்டி வாங்கினார். விசாரனையின்போது சரிவர அவர் ஒத்துழைப்பு தராமல்போக, ஸ்ரீநாத் அவரை காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அதிர்ச்சியான அதிபர், உரியவரிடம் சொத்தை திரும்ப ஒப்படைத்தார். அரசியல் செல்வாக்கும் பணபலமும்கொண்ட 'தியேட்டருக்கே' இந்தக் கதியா எனக் கதிகலங்கிப்போன மற்ற சிலர், தாங்களும் மிரட்டி எழுதிவாங்கியிருந்த இடங்களைச் சத்தமின்றி உரியவர்களிடம் மாற்றி எழுதித்தந்தனர். 

இப்படி நேரடியாகவும் மறைமுகமாவும் பல கோடி சொத்துகள் ஸ்ரீதர் ஆட்களிடமிருந்து மீட்டுத்தரப்பட்டன. நாலாபக்கமும் வந்த இந்த நெருக்கடிகளால், ஸ்ரீதர் கொஞ்சம் அடக்கிவாசிக்கத்துவங்கினான். அவனது ஆட்களும் பெட்டிப்பாம்பாய் அடங்கினர். இதனால், காஞ்சியில் கொஞ்சம் தற்காலிகமாக அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கின. இந்த நிலையில், ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால், 'அது நிரந்தரமாகும்' என்ற நம்பிக்கை எழுந்துள்ளது காஞ்சி மக்களுக்கு.  
ஸ்ரீதரின் தற்கொலைக்குக் காரணம், காவல்துறையின் நெருக்கடியா அல்லது தனிப்பட்ட ஏதேனும் காரணங்களா என்பது போகப்போக தெரியவரலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement