Published:Updated:

'ரவியின் மரணத்தில் அரசியல்புள்ளிகளின் அழுத்தம் இருக்கிறது!’

வேதனையில் துடிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி குடும்பம்

வீட்டின் நடுவில் கண்ணா​டிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ரவியின் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். ரவி ஆசையாக வளர்த்த நாய், கூட்டத்தின் நடுவே உள்ளே புகுந்து வந்து, அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி மீது காலைத் தூக்கிவைத்து கண்ணீர் சிந்தியது. துக்க வீட்டுக்கு வந்திருந்த அத்தனை பேரையும் கலங்கவைத்தது அந்த நிகழ்வு.

யார் இந்த ரவி?

'ரவியின் மரணத்தில் அரசியல்புள்ளிகளின் அழுத்தம் இருக்கிறது!’

நேர்மையான, துடிப்புமிக்க இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி. கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள தொட்டகொப்பலு என்ற கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் 34-வது இடத்தைப் பிடித்து, ஐ.ஏ.எஸ் பணிக்குத் தேர்வானார். இரண்டு ஆண்டுகாலப் பயிற்சிக்குப்பின், 2011-ம் ஆண்டு குல்பர்காவில் துணை ஆணையராகப் பணி அமர்த்தப்பட்டார். பிறகு, 2013 ஆகஸ்ட் முதல் 14 மாதங்கள், கோலார் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். மணல் மாஃபியாக்களுக்கு எதிராகவும் அரசு நிலங்களை அபகரித்தவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் மூலமாக, கோலார் மாவட்ட மக்களின் அளப்பரிய அன்பைப் பெற்றார். ரவிக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி குஸும். இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது.

'பொதுவாக, தங்கள் தேவைகளுக்காக அதிகாரி​களைத்தேடி மக்கள் செல்வார்கள். ஆனால், மக்களுக்கு உதவுவதற்காக மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியர் செல்லும் காட்சியை கோலார் மாவட்டத்தில் பார்த்தோம். அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக துணிச்சலுடன் நடவடிக்கைகள் எடுத்தார் ரவி. ஏழை மக்களின் வீடுகளுக்குச் செல்வதை, குறிப்பாக தலித் மக்களின் வீடுகளுக்குத் தனது மனைவியுடன் சென்று உணவு அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கோலார் மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களின் செல்லப்பிள்ளையாகவே ரவியைப் பார்த்தனர்' என்கிறார், பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரான டி.நரசிம்மமூர்த்தி.

'ரவியின் மரணத்தில் அரசியல்புள்ளிகளின் அழுத்தம் இருக்கிறது!’

மக்களுக்கு செல்லப்பிள்ளையாக மாறிய ரவி, சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பகையாளி ஆனார். கோலாரில் இருந்து ரவியை தூக்கியடிப்பதற்கு அவர்கள் துடித்தனர்.

''டி.கே.ரவியின் நேர்மையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார பலம்கொண்ட சமூக விரோதிகள் ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாக, கோலார் மாவட்டத்தில் இருந்து ரவி இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு, மாவட்டம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை அங்கிருந்து மாற்றக்கூடாது என்று கடையடைப்பு உள்ளிட்ட பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் நாங்களும் முன்னணியில் நின்றோம்' என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம்.

அடுத்ததாக, வணிகவரி அமலாக்கத் துறையின் கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்ற ரவி, கடந்த 5 மாத காலத்தில், வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மிகப்பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், நகைக்கடைகள் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார். அவற்றில் பல நிறுவனங்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளுக்குச் சொந்தமானவை என்று சொல்லப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம், இரண்டே வாரங்களில் 138 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து அரசு கஜானாவில் சேர்த்தார். அவருக்கு கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது நடவடிக்கைகளைத் தொய்வின்றித் தொடர்ந்தார்.

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை (மார்ச் 16) அன்று, பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள தனது அரசு இல்லத்தில் இருந்து வழக்கம்போல அலுவலகத்துக்குச் சென்றார். அலுவலகத்தில் மீட்டிங் முடித்துவிட்டு, காலை 11.30 மணிக்கே திடீரென வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார். மாலை 5 மணி அளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரைக் கண்டுள்ளனர். அவரது மரணச்செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. ஆங்காங்கே மக்கள் கொந்தளித்தனர். கோலார் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. சட்டமன்றத்தில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியது. பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். ரவி மரணத்தை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாக வைத்துள்ளனர். பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக உள்ளன.

'ரவியின் மரணத்தில் அரசியல்புள்ளிகளின் அழுத்தம் இருக்கிறது!’

'டி.கே.ரவி துணிச்சல்மிக்க ஓர் அதிகாரி. அவருக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இது கொலையாகவும் இருக்கலாம். குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்று மாநில அரசு கூறுவதை ஏற்க முடியாது. பிரதான கட்சிகள் எல்லாமே அவர் மீது கோபத்தில்தான் இருந்தன. இந்த மரணம் குறித்து, சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நேர்மையான அதிகாரிகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாமல்போனால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்து. டி.கே.ரவியின் மரணம் ஒரு அரசியல் பிரச்னை அல்ல. ஆனால், பி.ஜே.பி., ஜே.டி.எஸ் ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அரசியல் செய்வதற்கான ஒரு விஷயமாக இதைப் பார்க்கிறார்கள். இதை வைத்து அரசியல் நடத்தக்கூடாது. சரியான விசாரணை நடத்த வேண்டும். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்' என்கிறார் மீனாட்சிசுந்தரம்.

'2009-ல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று டேராடூனில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றோம். அங்கு ரவி எனக்கு நண்பர் ஆனார். அவர் ஒரு துணிச்சலான அதிகாரி. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை அல்ல' என்கிறார், அவருடன் ஐ.ஏ.எஸ் பயிற்சியில் இருந்த ஓர் அதிகாரி.

ரவி மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க் கட்சிகளும் பொதுமக்களும் முன்வைத்த கோரிக்கையை மாநில அரசு ஏற்க மறுத்துவிட்டது. மாறாக, சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சி.பி.ஐதான் விசாரிக்க வேண்டும் என்பதில் ரவியின் குடும்பத்தினர் உறுதியாக இருக்கிறார்கள்.

மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ரவியின் தாயார் கௌரம்மா, ''என் மகன் தற்கொலை செய்திருக்க மாட்டான். அவன் துணிச்சல் மிக்கவன். அவன் கோழை அல்ல. தற்கொலை செய்து கொள்ளும் மகனை நான் பெற்றெடுக்கவில்லை. அவன் இந்த தேசத்தின் மகன். இந்த தேசத்தின் மகனை நான் இழந்திருக்கிறேன். என் மகனின் சாவு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்திலேயே தற்கொலை செய்து கொள்வோம்'' என்று கதறினார்.

ரவியின் தம்பி ரமேஷ், ''ரவியின் மரணத்தில் அரசியல்புள்ளிகளின் அழுத்தம் இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது தற்கொலை அல்ல. கொலைதான். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்றார் உறுதிமிக்க குரலில்.

நேர்மையான அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பும் தகுந்த பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பும் முழுக்க முழுக்க அரசாங்கத்துக்கு உண்டு. ஆனால், இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்கிற மாஃபியாக்களும் சமூகவிரோதிகளும் அதிகாரத்தில் அமரும்போது, நேர்மையான அதிகாரிகளுக்கு அவர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஆ.பழனியப்பன், வீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு