Published:Updated:

'ஆள்கடத்தல்’ துரைப்பாண்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

சிவகாசி தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து செய்தித்துறை அமைச்சரே 'செய்தி’ ஆகி உள்ளார்.

'ஆள்கடத்தல்’ துரைப்பாண்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

சிவகாசி ரத்தின விலாஸ் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள பி.கே.என் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருளான வெடி உப்பு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். தனது பட்டாசு உப்பு குடோனில் பன்னீர்செல்வம் இருந்தபோது டாடா சுமோ காரில் போலீஸ் உடை அணிந்த நான்கு பேர் வந்துள்ளார்கள். ''ஒரு குற்றவாளியைப் பிடித்து வைத்துள்ளோம். அவனை விசாரிக்கும்போது, 'நீங்கள் நக்ஸலைட்களுக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க பட்டாசு உப்பு சப்ளை செய்து வருவதாக உங்கள் மீது புகார் சொல்கிறான். அதனால் உங்களை விசாரிக்க வந்திருக்கிறோம். ஆனால், உங்களைப் பார்த்தால் நல்ல மனிதர்போல் தெரிகிறது. இது ஒரு சின்ன விசாரணைதான். நீங்கள் நேரடியாக வந்து அந்தக் குற்றவாளியைப் பார்த்துவிட்டு உங்களுக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லி எழுதிக் கொடுத்துவிட்டால் போதும்'' என்று சாமர்த்தியமாக அந்தப் 'போலி’ போலீஸார் சொன்னார்கள். பன்னீர்செல்வமும் அதை நம்பி அவர்களுடன் காரில் சென்றுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த குதிரைச்சாவடி என்ற கிராமத்தின் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இருந்த ஒரு வீட்டுக்குச் சென்றபோதுதான் விபரீதத்தை உணர்ந்திருக்கிறார் தொழிலதிபர் பன்னீர்செல்வம். 'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் உன்னை உயிரோடு விடுவோம். இல்லையென்றால், இங்கேயே கொலை செய்து புதைத்து விடுவோம்’ என்று மிரட்டியிருக்கிறது அந்தக் கும்பல். 'அவ்வளவு பணம் எல்லாம் என்னிடம் இல்லை’ என்று பன்னீர்செல்வம் சொல்லவும் பேரம் பேசி இறுதியாக அந்தக் கும்பல், 'ரூ.25 லட்சத்தைத் தந்துவிட்டால் விட்டு விடுகிறோம்’ என்று சொல்லியுள்ளது. அதன் பிறகுதான் பன்னீர் செல்வம் கடத்தப்பட்ட தகவல் அவர் குடும்பத்துக்குத் தெரியவந்தது.

அதன் பிறகு நடந்தை பன்னீர்செல்வத்தின் மனைவி ஜெயக்குமாரி சொல்லக் கேட்போம். ''என் கணவரை போலீஸ் கூட்டிட்டுப் போனதாக ஊழியர்கள் சொன்னார்கள். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. அன்றைக்கு மதியம் புது நம்பரில் இருந்து ஒரு கால் வந்தது. அதில் பேசிய என் கணவர், 'அவசரமாக ரூ.10 லட்சம் ரெடி செய்’னு சொன்னார். அப்பத்தான் யாரோ என் கணவரை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர் என்று தெரிந்தது.  பிறகு எங்களது குடும்ப நண்பர் கூடலிங்கம் அண்ணாச்சியிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே தனது நண்பர்களிடம் பேசி ரூ.10 லட்சத்தை ரெடி பண்ணினார். பின்னர் மாலை 5 மணிக்குப் பேசிய அந்தக் கும்பல், 'பணம் ரெடி ஆச்சா?’ என்று கேட்டுவிட்டு அதை எங்களது வாட்ச்மேன் மூலம் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் அருகே வந்து தரும்படி கூறியது. பிறகு ராத்திரி போனில் தொடர்புகொண்ட அந்தக் கும்பல், 'மறுநாள் மாலைக்குள் மீண்டும் ரூ.15 லட்சம் தரவேண்டும்’ என்றது. பிறகு, ரூ.15 லட்சத்தை ரெடி செய்துவிட்டு அவர்களது போனுக்காகக் காத்திருந்தேன். இந்தத் தடவை எங்களது வீட்டு கார் டிரைவர் சார்லஸிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பும்படி சொன்னார்கள். பணத்தை வாங்கிய அந்தக் கும்பல், என் கணவரின் கண்களில் துணியைக் கட்டி தென்காசி ரவுண்டானாவில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். பிறகு அவர் கார் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார். டிரைவர் சார்லஸ் மீது சந்தேகம் இருந்ததால், சிவகாசி டி.எஸ்.பியான வெள்ளையனைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னோம்'' என்று மிரட்சியில் இருந்து மீளாமல் பேசினார்.

'ஆள்கடத்தல்’ துரைப்பாண்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

டி.எஸ்.பி வெள்ளையன் இந்த வழக்கை விசாரித்துள்ளார். அவர், டிரைவர் சார்லஸை கைதுசெய்து அவரது செல்போனை வாங்கி அதில் பேசிய நபர்களின் விவரங்களைச் சேகரித்தபோதுதான் இந்தக் கடத்தல் சம்பவத்தில் அ.திமு.கவைச் சேர்ந்த திருத்தங்கல் 13-வது வார்டு கவுன்சிலர் துரைப்பாண்டியன் உள்பட பெரிய கும்பல் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது என்கிறது போலீஸ்.

'ஆள்கடத்தல்’ துரைப்பாண்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

சிவகாசி டி.எஸ்.பி வெள்ளையன் நம்மிடம், ''துரைப்பாண்டியும் அவனது கூட்டாளியான பாலு என்ற பாலசுப்பிரமணியமும்தான் இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளனர். டிரைவர் சார்லஸுக்கு நிறைய பணம் கொடுக்கிறோம் என்று சொல்லி இந்தச் சதியில் கூட்டுச் சேர்த்திருக்கின்றனர். மதுரையைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் கணேசன் என்ற அய்யனை இதற்குப் பயன்படுத்தி இருக்கின்றனர். கணேசன் டி.எஸ்.பியாகவும் அவனது கூட்டாளி சென்னையைச் சேர்ந்த குமார் இன்ஸ்பெக்டராகவும் நடித்துள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் கவுன்சிலர் துரைப்பாண்டி, பாலசுப்பிரமணியன், வி.சி.ராஜ், கணேசன், அமல்ராஜ் உள்பட 14 பேர் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டனர். நெல்லையைச் சேர்ந்த சந்துரு, கில்லாடி ஆகிய இருவரும் பணம் கைக்கு வந்ததும் மும்பைக்குப் பறந்துவிட்டனர். இதுவரை துரைப்பாண்டி, பாலசுப்பிரமணியம், வினோத்கண்ணா, வி.சி.ராஜ் உள்பட 4 பேரை கைது செய்துள்ளோம். இந்தக் கும்பல், தொழிலதிபர் பன்னீர்செல்வம் கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு சிவகாசியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாதவன் ஆகியோரைக் கடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர் என்பதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். துரைப்பாண்டி கும்பலால் பணம் பறிகொடுத்தவர்கள் புகார் செய்தால், அவர்களது பெயர்களை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்து விசாரித்துத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார் உறுதியாக.

இந்த துரைப்பாண்டிக்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் நல்ல நெருக்கம் இருந்துள்ளதாக விருதுநகர் மாவட்டத்தில் பரவலான பேச்சு உள்ளது.

'ஆள்கடத்தல்’ துரைப்பாண்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

இதுதொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியைத் தொடர்புகொண்டு பேசினோம். ''கவுன்சிலர் துரைப்பாண்டி மீது பல வழக்குகள் இருந்ததால் உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு நான் சீட்டு கொடுக்கவில்லை. சுயேச்சையாக நின்று ஜெயித்துவிட்டுப் பிறகு அ.தி.மு.கவில் சேர்ந்து கொண்டார்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த சீமைச்சாமியும் வி.சி.ராஜும் என் ஆதரவாளர்கள்போல் வெளியே காட்டிக்கொண்டு திரிந்திருக்கின்றனர். அதனால்தான் கடத்தல் சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி விருதுநகர் எஸ்.பியிடம் சொன்னேன். அதுபோல் திருத்தங்கல் போலீஸார் பலர், குற்றவாளிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டு இதுபோன்ற ஆட்களை வளர்த்து விடுகின்றனர். குறிப்பாக, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கண்ணன் வெளிப்படையாகவே குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணம் சம்பாதித்து வருகிறார். திருத்தங்கல் போலீஸார் எல்லோரையும் கூண்டோடு வேறு மாவட்டத்துக்கு மாற்றும்படி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் சிபாரிசு செய்திருக்கிறேன். மற்றபடி கவுன்சிலர் துரைப்பாண்டிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

இந்தக் கடத்தல் சம்பவம் போலீஸ் மீது விழுந்துவிட்ட கறை. அதை நீக்கி, பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் பொறுப்பும், கடமையும் போலீஸின் கையில்தான் இருக்கிறது.

எம்.கார்த்தி, படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு