வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (13/10/2017)

கடைசி தொடர்பு:17:12 (13/10/2017)

ஆருஷி மரணம் முதல் பெற்றோர் விடுதலை வரை... ஆருஷி கொலை வழக்கில் நடந்தது இதுதான்! #AarushiMurderCase

ஆருஷி

சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கில் இறுதி தீர்ப்பு நேற்று வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அவரின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் இருவரையும், தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அலகாபாத் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன எனத் தெரிந்துகொள்வோம்... 

2008 

* மே 16: நொய்டாவைச் சேர்ந்த பல் மருந்துவ தம்பதியரான ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரின் ஒரே மகள் ஆருஷி தல்வார், அவரது வீட்டுப் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்குக் காரணம், அவரின் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ் எனச் சந்தேகிக்கப்பட்டது. 

* மே 17: தல்வாரின் வீட்டின் மாடியில் ஹேம்ராஜின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 

* மே 18: நொய்டா காவல் துறை தீவிர விசாரணையில் இறங்கியது. ஆருஷியை அவரின் பெற்றோர் ஆணவக்கொலைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். 

* மே 23: ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். 

* மே 31: இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

* ஜூன் 13: ராஜேஷ் தல்வார் மருந்துவமனையில் உதவியாளராக இருக்கும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்ததில், தல்வாரின் நண்பர்களான பிராஃபுல் தூரனி (Praful Dhurani) மற்றும் அனிதா தூரனி வீட்டில் வேலை செய்த விஜய் மண்டலுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. ராஜேஷ் தல்வாரின் நண்பரின் வீட்டில் வேலை செய்த ராஜ்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். 

* ஜூன் 19: டாக்டர் ராஜேஷ் தல்வாரை ஜூலை 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய முதல் உண்மை கண்டறியும் சோதனை தெளிவற்றதாக இருந்ததால், இரண்டாம் முறையாக அவருக்கு இந்தச் சோதனையை நடத்த உத்தரவிடப்பட்டது. 

* ஜூன் 20: ராஜேஷ் தல்வாருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. 

* ஜூன் 25: சிபிஐ இந்த வழக்கை கண்மூடித்தனமான வழக்கு என்று முடிவுசெய்தது. காசியபாத் சிறப்பு நீதிமன்றம், ராஜேஷ் தல்வாரின் ஜாமீன் மனுவை ரத்துசெய்தது. 

* ஜூலை 3: ராஜேஷ் தல்வாரிடம் ‘நார்கோ அனலிசஸ்’ (narco analysis) சோதனை நடத்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

* ஜூலை 12: இந்த வழக்கில் தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததால், காசியாபாத் நீதிமன்றம் ராஜேஷ் தல்வாருக்கு ஜாமீன் வழங்கியது. 

2010 

ஆருஷிஜனவரி 5: ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் இருவரிடம் ‘நார்கோ அனலிசஸ்’ நடத்த மீண்டும் நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்தது. 

டிசம்பர் 29: சிபிஐ தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் மீதும் சந்தேகம் வலுத்தது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை. 

2011 

ஜனவரி 25: காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில், ராஜேஷ் தல்வார் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். 

பிப்ரவரி 9: சிபிஐ அறிக்கையை காசியாபாத் நீதிமன்றம் கவனத்தில்கொண்டு, ஆருஷி பெற்றோர் கொலை செய்ததற்காகவும் ஆதாரங்களை அழித்ததற்காகவும் சொன்னது. இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் வழங்கப்பட்டது. 

2012 

மார்ச் 14: ராஜேஷ் தல்வாருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. 

ஏப்ரல் 30: ஆருஷியின் தாயார் நூபுர் தல்வார் கைது செய்யப்பட்டார். 

மே 3: நூபுர் தல்வாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்துசெய்தது. 

செப்டம்பர் 25: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நூபுர் தல்வார் ஜாமீனில் வெளியே வந்தார். 

2013 

ஏப்ரல்: ஆருஷியையும் ஹேம்ராஜூவையும் ஒன்றாகப் படுக்கையறையில் பார்த்ததாகவும், அதனால் பெற்றோர் கொலை செய்ததாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது. 

நவம்பர் 26: காசியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம், ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் இருவருக்கும் ஆயுள்கால தண்டனை வழங்கியது. 

2014 

ஜனவரி 21: காசியாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தல்வார் தம்பதியர் அலகாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

2017 

ஜனவரி 11: தல்வார் தம்பதியரின் மனுவை அலகாபாத் நீதிமன்றம் ஏற்று, இறுதித் தீர்ப்பு வழங்குவதாகத் தெரிவித்தது. 

அக்டோபர் 12: தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், தல்வர் தம்பதியரை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

ஆருஷி மற்றும் ஹேம்ராஜை யார் கொலை செய்தது என்ற மர்மம் மட்டும் தொடர்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்