Published:Updated:

தற்கொலையை திசைதிருப்பும் தந்திரங்களைச் செய்வது யார்?

விமர்சன வளையத்தில் சி.பி.சி.ஐ.டி.!

பிரீமியம் ஸ்டோரி

ரசியல்வாதிகளின் நெருக்கடி காரண​மாக ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலையைத் திசை திருப்பும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருவதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஆளும் கட்சி பிரபலங்கள் இருப்பதால் வழக்கை திசை திருப்பும் முயற்சி நடப்பதாகக் குமுறுகின்றனர், பாதிக்கப்பட்ட பொறி​யாளரின் குடும்பத்தினர்.

தற்கொலையை திசைதிருப்பும் தந்திரங்களைச் செய்வது யார்?

''முத்துக்குமாரசாமியின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்' என்கிற கோரிக்கை வலுத்துவரும் சூழலில், அதனை திசைதிருப்பும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். மறைந்த முத்துக்குமாரசாமி பெருமளவு தொகையை நிலத்தில் முதலீடு செய்ததாகவும் அது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்த நாளிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புரளி கிளப்பிவிடப்பட்டது. இதன் பின்னணியில் போலீஸே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 'முறைகேடாகச் சொத்து சேர்த்து லட்சக்கணக்கான பணத்தை அவர் முதலீடு செய்து இருப்பாரோ?’ என்கிற சந்தேகத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய விஷம வேலையில் போலீஸார் ஈடுபட்டு வருவதை அறிந்து அவரது குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.  

இதுபற்றி நம்மிடம் பேசிய முத்துக்குமார​சாமியின் உறவினர்கள், ''நாங்கள் ஒதுங்கி இருந்தாலும் எங்களை போலீஸார் சீண்டுகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என போலீஸார் எங்களை எச்சரித்தபடியே இருந்தார்கள். அதனால்தான் நாங்கள் இதுவரையிலும் பேசாமல் இருந்தோம். ஆனால், இப்போது எங்களை பேச வைத்துவிட்டது போலீஸ்' என்று சொன்னார்கள்.

அவர்கள், முத்துக்குமாரசாமி குறித்து மேலும் பல உருக்கமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

''பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனி​யில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்​குக் குடியிருந்து வந்த முத்துக்குமாரசாமி, எல்.ஐ.சி-யில் ரூ.15 லட்சம் லோன் போட்டு புறநகர் பகுதியான திருமால் நகரில் சொந்த வீடு கட்டினார். 2012 ஜூன் 3-ம் தேதி கிரஹப்பிரவேசம் நடத்தி புதுவீட்டுக்குக் குடியேறினார். அவர் வாங்கிய லோனுக்கு மாதந்தோறும் ரூ.13,100 தவணை செலுத்தி வந்தார். அவருக்கு வீடு கட்டிக் கொடுத்த நிறுவனம் அந்த நிதி ஆண்டில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளது. அதனால் அந்த நிறுவனம்  மூலமாக வீடு கட்டிய 47 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது வருமானவரித் துறை. முத்துக்குமாரசாமியும் அந்த நிறுவனம் மூலம் வீடு கட்டியவர் என்பதால் அவருக்கும் தகவல் வந்திருந்தது.  முறைகேடாகப் பணம் வந்து, அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாகவும் அதனை விசாரிக்கவே வருமானவரித் துறை அழைத்ததாகவும் என செய்தியைத் திரித்து பரப்புகிறார்கள். முத்துக்குமாரசாமியைத் தவறானவர்போல சித்திரிக்க முயற்சிப்பதில் இருந்தே விசாரணை எப்படித் திசை மாறிப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தற்கொலையை திசைதிருப்பும் தந்திரங்களைச் செய்வது யார்?

ஆரம்பத்தில் இருந்தே அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டு​பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட​வில்லை. யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். முத்துக்குமாரசாமி மரணம் அடைந்த சில நாட்களுக்குப் பின்னர் சேரன்மாதேவியில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், போலீஸாரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது முத்துக்குமாரசாமியின் மகன்களிடம், 'என் தந்தை குடும்பப் பிரச்னை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார். நான் எம்.இ படித்து இருக்கிறேன். எனது கல்வித் தகுதிக்கு ஏற்ப எல்காட் நிறுவனத்தில் எனக்கு அரசு வேலை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என எழுதிக்கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், முத்துக்குமாரசாமியின் மகன்கள், 'அப்படி எழுதிக்கொடுக்க முடியாது’ என மறுப்புத் தெரிவித்தபோதிலும், 'ஏதோ நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. இனி நடப்பதைப் பற்றி யோசிப்போம். உங்களுக்கு நல்ல எதிர்காலம் வேணும்னா நான் சொல்ற மாதிரி எழுதிக் கொடுங்க’ என போலீஸ் துணையுடன் சேர்ந்து எச்சரிக்கும் தொனியில் தெரிவித்து உள்ளார். அந்த அதிகாரியைப் பற்றி சி.பி.சி.ஐ.டி விசாரணையின்போது முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் தெரிவித்துவிட்டார்கள். சேரன்மாதேவிக்காரர் எதற்காக அப்படி எழுதிக் கேட்டார் என்பது பற்றியோ, யார் அவரை இப்படி எழுதி வாங்கும்படித் தூண்டினார்கள் என்பது குறித்தோ இதுவரையிலும் எந்த விசாரணையும் செய்யப்படாதது ஏன் என்பது புரியவில்லை. இப்படி பல விஷயங்கள் இருக்கும்போது, மாதம் 88,000 ரூபாய் சம்பளம் வாங்கிய ஓர் அதிகாரி 15 லட்சம் ரூபாயில், அதுவும் கடன் வாங்கி வீடு கட்டியதைத் தவறு என்பதுபோல சித்திரிப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

முத்துக்குமாரசாமி, தன் சம்பளத்தின் மூலம் இரண்டு மகன்களையும் நல்லபடியாகப் படிக்க வைத்தாரே தவிர, வேறு எந்தச் சொத்தையும் சேர்க்கவில்லை. அவருடைய வீட்டுக்கு வந்தாலே, அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அவரிடம் பழைய ஹீரோ ஹோண்டா சி.டி100 பைக்தான் கடைசி வரைக்கும் இருந்தது. அவருடைய வீட்டில் 22 வருடங்களுக்கு முன்பு வாங்கிய பழைய டி.விதான் இப்போதும் இருக்கிறது. அந்த அளவுக்கு நேர்மையாக இருந்த ஒரு மனிதரை அசிங்கப்படுத்துவது வேதனையாக இருக்கிறது. இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்குக் காலம்தான் உரிய தண்டனையைக் கொடுக்கும்'' என்றார்கள் சோகத்துடன்.

தற்கொலையை திசைதிருப்பும் தந்திரங்களைச் செய்வது யார்?

அவருக்கு வீடு கட்டிக்கொடுத்த பாலாஜி புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான கோபியிடம் இதுபற்றி கேட்டோம். ''நாங்கள் திருமால் நகரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் 47 பேருக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்தோம். அதில் முத்துக்குமாரசாமியும் ஒருவர். அவருடைய வீட்டுக்காக 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதில், 2011 - 12-ல் ரூ.13.50 லட்சம் செக் வந்தது. நாங்கள் வருமானவரித்  துறையினரிடம், வீடு கட்டியவர்களின் பட்டியலைக் கொடுத்திருந்தோம். அதில் உள்ள எல்லோரையுமே ஆவணங்களைக் காட்டும்படி அழைத்து இருந்தார்கள். இது வருமானவரித் துறையின் வழக்கமான ஒரு சாதாரண நடவடிக்கை மட்டுமே'' என்றார்.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உள்ள சிலரிடம் பேசியபோது,  ''அவர் தற்கொலை செய்துகொண்ட 20-ம் தேதி, வருமானவரித் துறை அவரை விசாரணைக்கு அழைத்து இருந்தனர் என்பது அவருடைய குடும்பத்தினர் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். இந்த விவகாரம் இப்போது வெளியே தெரிந்து சர்ச்சையாகி இருப்பது ஏன் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களது விசாரணை சரியான திசையிலேயே செல்கிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படக் கூடாது என்பதால்தான் கவனத்துடன் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் முழு உண்மையையும் கண்டுபிடிப்போம்'' என்றார்கள் நம்பிக்கையுடன்.

''முத்துக்குமாரசாமி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி சர்ச்சையில் சிக்கி இருப்பதால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிப்பதே அரசுக்கு இப்போது நல்லது' என்று பொதுமக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

பி.ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

அறிவொளி தற்கொலைக்கும் 'அது’தான் காரணமா?

காசநோய் திட்ட இணை இயக்குநர் அறிவொளியின் தற்கொலையும் இப்போது சர்ச்சை ஆகி உள்ளது!

தற்கொலையை திசைதிருப்பும் தந்திரங்களைச் செய்வது யார்?

கடந்த மார்ச் 16-ம்  தேதி மெரினா கடற்கரைக்கு வாக்கிங் சென்ற அறிவொளி வீடு திரும்பவில்லை. மறுநாள் அவரது உடல் கடற்கரையில் ஒதுங்கியது. ''அறிவொளி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்'' என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், டாக்டர் ராமதாஸ், மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய மூவரும் அதில் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

''மத்திய அரசின்  தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் ஓர் அங்கம்தான் தேசிய காச நோய் தடுப்புத் திட்டம். மூன்று தாலுகாக்களுக்கு ஒரு சூப்பர்வைசர் என்று இருந்ததை மாற்றி ஒரு தாலுகாவுக்கு ஒரு சூப்பர்வைசர் என்று மத்திய அரசு சமீபத்தில் விதிமுறை வகுத்துள்ளது. இதனால் புதிதாக 687 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனை துறை ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்று அறிவொளி சொன்னார். ஆனால், அதனை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கவில்லை. அந்த மோதல்தான் அவரை தற்கொலைக்குத் தூண்டியது' என்கிறார்கள்.

''தேர்வு நடத்த வேண்டாம், தகுதி அடிப்படையில் முன்னுரிமை உள்ள பணியாளர்களுக்கே சூப்பர்வைசர் பதவி வழங்கலாம் என்று அறிவொளி சொன்னதை மீறி இந்தப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1-ம் தேதிகளில் தேர்வு நடந்தது. இதை எதிர்த்து  மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தியாகு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், இந்த வழக்கைப் பற்றி கவலைப்படாமல் ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது' என்றும் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக  கோவையில் உள்ள அவர்களது நண்பர்கள் சிலரிடம் பேசினோம்.  

''எம்.பி.பி.எஸ் முடித்து எல்லோரும் பணம் கொட்டும் மேற்படிப்புகளை தேர்வு செய்தபோது, முழுக்க முழுக்க சேவையாற்றும் பிரிவான காசநோய் சிகிச்சை படித்தார் அறிவொளி. யாருமே வேலைக்குப் போக விரும்பாத பரம்பிக்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் விரும்பி பணியாற்றியவர். குஜராத் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அங்கு தானாகச் சென்று சேவையாற்றியவர். அதன் பின்னர் காசநோய் திட்ட துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர், வீடு வீடாகச் சென்று காசநோய் சிகிச்சை அளித்தார். காசநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த நாடகங்களில்கூட நடித்தார். கேட்டால், 'மக்களுக்கு முடிந்தவரை சேவை செய்யணும்’ என்று சொல்வார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதுகூட அவர் மனம் தளரவில்லை. குணம் அடைந்த பின்னர்தான் பணிக்குத் திரும்பினார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையல்ல' என்றனர். அவரது குடும்பத்தினர் இதுபற்றி நம்மிடம் பேசவிரும்பவில்லை!

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், 'தமிழகத்தில் காசநோய் திட்டத்தின் மாநில அலுவலராகப் பணியாற்றிய டாக்டர் ஜே.அறிவொளியின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. பிப்ரவரி 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புற்றுநோய் ஆய்வில், அவருக்கு மிகவும் முற்றிய நிலையில் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. பல்வேறு ஆய்வுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டது. பணி நியமனத்தின் பொருட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டதுதான் அதிகாரியின் இறப்புக்குக் காரணம் என்ற வகையில் சொல்வது ஏற்கத்தக்கதல்ல' என்று சொல்கிறார்.

சர்ச்சையைக் கிளப்பிய மூன்று தலைவர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடுக்க அமைச்சர் திட்டமிட்டு வருகிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு